இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விடயத்தை ஒட்டி ‘புதிய சுதந்திரன்’ இதழில் வெளியான செய்தி ஒன்றை வழக்கின் எதிராளிகளில் ஒருவரான எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்து, இந்தச் செய்தி மூலம் அகிலன் முத்துக்குமாரசாமி நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் புரிந்திருந்தார் எனக் கடந்த தவணையின்போது வாதம் செய்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேற்படி அகிலன் முத்துக்குமாரசாமிக்கு இன்றைய தவணையின்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாகுமாறு அழைப்பாணை வழங்கக் கட்டளையிட்டார்.
இன்று வழக்கு மன்றில் எடுக்கப்பட்டபோது அகிலன் முத்துக்குமாரசாமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஒருவர், தமிழரசுக் கட்சிக்கு எதிரான இந்த வழக்கில் தன்னையும் இடையீட்டு எதிராளியாகச் சேர்த்துக்கொள்ள அகிலன் முத்துக்குமாரசாமி விண்ணப்பித்துள்ளார் என்று தெரிவித்து விண்ணப்பத்தையும் சமர்ப்பித்தார்.
அப்போது எங்கே அகிலன் முத்துக்குமாரசாமி, அவர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகவில்லையே, அவருக்கு நீதிமன்றத்தில் பிரசன்னமாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதே என்று கேட்கப்பட்டது.
அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, அகிலன் முத்துக்குமாரசாமிக்கு நீதிமன்ற அழைப்பாணை ஏதும் கிடைக்கவில்லை, அதனால் அவர் மன்றுக்கு சமுகம் தரவில்லை என்றார்.
அந்தச் சமயத்தில் ஆறாவது எதிராளியான சுமந்திரன் குறுக்கிட்டு வாதம் செய்தார்.
”அகிலன் முத்துக்குமாரசாமி மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக அவருக்கு அன்றைய தவணையிலேயே பிடிவிறாந்து பிறப்பித்திருக்க முடியும். ஆனால், அதைச் செய்யாமல் அழைப்பாணை மட்டுமே அனுப்ப கடந்த தவணை நான் கோரியிருந்தேன். அப்படித் தமக்கு திருகோணமலை நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது என்பதை அகிலன் தமது மின்னியல் பத்திரிகையில் செய்தியாகப் பிரசுரித்துள்ளார். அழைப்பாணை அவரது கைகளுக்குக் கிடைக்காவிட்டாலும், அப்படி நீதிமன்றத்தால் தமக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தேயிருக்கிறது. ஆனால், அவர் நீதிமன்றத்துக்குச் சமுகம் தரவில்லை. ஆகவே, அவருக்கு பிடிவிறாந்து கொடுக்க இப்போது கோருகின்றேன்.” – என்றார் சுமந்திரன்.
”வழக்கமாகக் கட்சிக்காரர் யார் இந்த வழக்கில் இடையீட்டு எதிராளியாக நுழைய முயற்சித்தாலும் நான் அதை ஆட்சேபிக்க மாட்டேன். அது அவர்களின் உரிமை. அகிலன் முத்துக்குமாரசாமி விடயத்திலும் அதுதான் எனது நிலைப்பாடு. ஆயினும், இந்த வழக்கில் அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு விடயம் விசாரித்து முடியும் வரை, அவரது இடையீட்டு எதிராளி நுழைவுக்கான விண்ணப்பத்தை நிறுத்தி வைக்கக் கோருகின்றேன்.” – என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.
அதை நீதிமன்றம் ஏற்றுப் பிடியாணை பிறப்பிக்க உத்தரவிட்டது. அதை நிறைவேற்றும் பொறுப்பு சாவகச்சேரி நீதிமன்ற பிஸ்க்கால் அலுவலருக்கு வழங்கப்பட்டது.
அச்சமயம் குறிப்பிட்ட சுமந்திரன், ”அத்தகைய பிடியாணையை நீதிமன்ற அலுவலர் நிறைவேற்றும்போது நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற்றிருந்தால், அந்த அனுமதியின் அடிப்படையில், அந்த நபரைக் கைது செய்து, பின் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அந்த அதிகாரியே பிணையிலும் விடுவிக்க முடியும். அந்த அடிப்படையில் அகிலன் முத்துக்குமாரசாமியை நீதிமன்ற அலுவலர் கைது செய்தாலும், உடனடியாகப் பிணை வழங்க அனுமதிக்க வேண்டும்.” – என்று கோரினார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையிலும் மற்றும் இரண்டு பேரின் உறுதிப் பிணையிலும், அடுத்த தவணை வழக்குக்கு நீதிமன்றத்தில் பிரசன்னமாவார் என்ற உறுதியுடன் அவரை உடன் விடுவிக்க அனுமதியும் வழங்கியது.