22
நடந்து கொண்டே கைப்பேசியை காதில் வைத்தவாறு பேசிக் கொண்டிருந்தான் சுபனீசன்.நடந்தவாறு கைப்பேசியை பயன்படுத்தும் பழக்கம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
மறுமுனையில் அவனது அம்மா தாரா பேசிக் கொண்டிருந்தாள்.ஒருமுறை கூட எங்கிருந்து பேசுகின்றாய் என்ற கேள்வியை கேட்க மறந்தவளாக தாரா பேச்சைத் தொடர்ந்தாள்.
சுபனீசன் தங்கியிருந்த வீடு புகையிரத பாதையினருகே இருந்தது.புகையிரத பாதையின் தண்டவாளங்களுக்கிடையில் நடந்தவாறே பேசிக்கொள்ள ஆரம்பித்தவன் அதன் வழியே நடந்து கொண்டிருந்தான்.
” தம்பி டேய்! தம்பி!”
வீதியோரமாய் வெற்றிலைக் கடை வைத்திருந்த விநாசித்தம்பி ஐயா சுபனீசனை கூப்பிட்டார்.
அவன் அவர் கூப்பிட்டதை கண்டு கொள்ளவில்லை.அப்படியே கைப்பேசியில் கதைத்த படி நடந்து கொண்டிருந்தான்.
பரந்தன் பூநகரி பாதையை குறுக்கறுத்துச் சென்றது யாழ் கொழும்பு புகையிரதப் பாதை.அந்த பாதையின் வழியே கிளிநொச்சி நோக்கி நடக்கத் தொடங்கிய சுபனீசன் பரந்தன் பேரூந்து நிலையத்தை கடந்து விட்டிருந்தான்.
“இனி அவனுக்கு இந்த பாதையால போகாத தம்பி என்று சொல்வதற்கு ஆளில்லை.அவனது தலையெழுத்தை அவனே எழுதிக்கொள்ளப்போறான்.”
விநாசித் தம்பி தனக்குள் எண்ணிக் கொண்டார்.அவர் தன் வியாபாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
அதிகமாக மக்கள் கூடும் இடமாக அது இல்லை.அவ்வப்போது திடீரென்று ஒரு கூட்டம் வரும்.அந்த நேரங்களில் வியாபாரத்தை கவனிக்க வேண்டும்.அதன் பிறகு விநாசித்தம்பி ஐயாவுக்கு வானொலியோட பொழுது கழியும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மாங்குளம் வரையான புகையிரத சேவையொன்று அப்போது நடந்து கொண்டிருந்தது.
அந்த புகையிரம் யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் பூநகரிப் பாதையை குறுக்கறுத்துக் கொண்டு கடந்தது.
பாதையின் வழியே கைப்பேசியோடு கதை பேசியவாறு சென்ற சுபனீசன் இதனை கவனிக்கத் தவறி இருந்தான்.
சட்டென திரும்பிய சுபனீசன் ஏதோ சத்தம் கேட்பதாக எண்ணியிருக்க வேண்டும்.
திரும்பிக் கொண்ட சுபனீசன் திகைத்துப் போனவனாய் கையிலிருந்த கைப்பேசியை எறிந்து விட்டு ஓட எத்தனித்தான்.
அதற்குள்ளாகவே அவனையும் புகையிரதம் மோதி தூக்கி எறிந்து விட்டது.இரண்டு கால்களும் துண்டாக உடலும் இரு கால்களும் தண்டவாளத்திற்கு இரு பக்கங்களிலும் வீசப்பட்டு இருந்தது.
அந்த இடம் சுபனீசனின் இரத்தத்தால் தோய்ந்திருந்தது.
விபத்தை கவனித்த மக்கள் பலரும் அந்த இடத்தில் கூடி விட்டனர்.
சுபனீசனின் கைப்பேசியில் அவனது அம்மா
தாரா
” சுபன்.சுபன்.”
அழைப்பது மட்டும் கேட்டவாறிருந்தது.அவன் கைப்பேசியில் பேசும் போது வெளி ஒலி பெருக்கியை இயக்கி விட்டிருக்க வேண்டும்.
” சுபன் இல்லை.நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ள முடியுமா?”
கைப்பேசியை கண்ணுற்று எடுத்த தாயாளன் இப்போது கேட்டான்.
மறு முனையில் இருந்து
” நான் இப்போது அவனோடு கதைச்சுக் கொண்டிருந்தனான்.நான் அவனோட அம்மா”
தாராவின் குரலில் பதட்டம் கலந்து கொண்டிருந்ததை தயாளன் புரிந்து கொண்டான்.
” இல்லை” என்றவன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான்.
“சுபன் எங்கே என்டு சொல்லும் தம்பி.நீங்கள் யார்?
” சுபனிட்ட இருந்த கைப்பேசியை நீங்கள் எப்படி வாங்கிக் கொண்டனீங்கள்?”
கேள்விகளால் தொடர்ந்த தாராவுக்கு நடந்து விட்டிருந்த அசம்பாவிதத்தினைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆம்.
தாராவின் இரண்டாவது மகன் தான் சுபனீசன்.இளைய வயதில் இருந்தே மிகையாற்றல் உள்ள சிறந்த மாணவன் என பாடசாலைகளில் பல முறை பாராட்டுப் பெற்றவன்.
ஏழாம் எட்டாம் ஆண்டுகள் கடந்து ஆறாம் ஆண்டின் பின்னர் ஒன்பதாம் தரத்தில் படித்தவன்.
இன்று அவன் சிறந்த பொறியியலாளராக இருந்திருந்தான்.அவனது வேலை நிமித்தமாகவே தான் பரந்தனில் தங்கியிருந்தான்.
உயரத்தில் அவன் அவனது அப்பாவைப் போல.கொஞ்சம் கட்டை.நல்ல சிவப்புப் பொடியன்.மெல்லச் சுருண்ட தலைமுடி அவனுக்கு மிகவும் அழகாக இருக்கும் என்று அவனது ஊரார் அவனைப் புகழ்ந்து கொள்வார்கள்.
அவனது ஊரில் அவன் தான் முதல் பொறியியளாளன்.சுய ஆளுமையுள்ளவன் என்று எல்லோரும் அவனைப் பார்த்து பெருமைப்படட்டுக் கொள்வார்கள்.
அவனது அம்மா தாரா இப்போது லண்டனில் அவளது மூத்த மகளின் வீட்டில் இருந்தாள்.சுபனீசனின் அப்பாவை முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் அவன் இழந்திருந்தான்.
” உங்களுக்கு அறிவில்லையா?”
தயாளன் திருப்பிக் கேட்டான்.
” என்ன தம்பி நீங்கள் சொல்றிங்கள்.?”
” என்னம்மா? என்ன?”
சுபனீசனின் மூத்த அக்கா சுபச்செல்வி தாராவிற்கு பின்னிருந்து கேட்டதை தாயாளனும் கவனித்துக் கொண்டான்.
” யாரம்மா சுபச்செல்வியா பின்னுக்கிருந்து கதைக்கிறது?”
” உங்களுக்கு சுபச்செல்வியை தெரியுமா?”
” ஓம்.நீங்கள் அவாவிட்ட குடுங்கோ ஒருக்கா.நான் கதைக்க வேண்டும்.”
எதுவும் புரியாதவளாக தாரா யோசிக்கத் தொடங்கினாள்.
என்ன நடக்கிறது.
தனக்குள் எணணிக்கொண்ட தாரா நிலைமையை புரிந்துகொள்ள முயன்றாள்.அமைதியாக இருந்து சிந்திக்க ஆரம்பித்தாள்.
மறுமுனையில் தயாளன் ” நீங்கள் தாரா அக்கா தானே!”
சுபச்செல்வியை உறுதி செய்ததால் தன்னோடு கதைப்பது அவளது அம்மா தாரா என்பதை புரிந்து கொண்டான் தயாளன்.
முன்பெல்லாம் தயாளன் யாழ்ப்பாணம் தின்னவேலியில் இருந்த தாரா வீட்டுக்கு போய் வருவதுண்டு.அப்போது சுபனீசன் பேராதணையில் படித்துக்கொண்டிருந்தான்.
அவனுடன் தயாளனுக்கு பழக்கமில்லை.
இருந்தும் புரிந்துகொண்டான்.புகையிரதம் மோதிக் தள்ளி தூண்டாக்கிய அந்த இளைஞன் தாராக்காவின் இரண்டாவது மகன் என.இரண்டாவது மட்டுமல்ல கடைக்குட்டியும் அவன் தான்.
“சுபச் செல்வியிட்ட குடுங்கோவன்”
தாராவின் அமைதியைக் கலைத்தான் தயாளன்.
” செல்வி”
” என்னம்மா”
வீட்டில் பரபரப்பாக வேலையில் இருந்தவள் கேட்டவாறே மேசையில் பரவிக் கிடந்த புத்தகங்களை சீராக அடுக்கிக் கொண்டிருந்தாள்.
” இந்தாம்மா.உன்னட்ட குடுக்கட்டாம்.”
தாராவின் பேச்சில் சோர்விருந்தது.இனம் புரியாத கலக்கம் குடிகொண்டிருந்தது. எப்போதும் கலகலப்பாக இருக்கும் தாராவின் முகத்தில் சோகம் குடிகொள்ள ஆரம்பித்திருந்ததை கவனித்தாள் சுபச்செல்வி.
கைப்பேசியை வாங்கியவள் காதோரம் வைத்துக் கொண்டாள்.
” ஓம்.நீங்கள் யார்?”
” சுபச்செல்வி.”
” நான் தயாளன்.”
ஒரு கணம் சுபச்செல்வி திகைத்துப் போனாள்.
2009 க்கு முன்னர் தயாளனும் சுபச்செல்வியும் பகிர்ந்துகொண்ட அலுவலகங்கள் பலவிருந்தன.
இரு வேறு பிரிவுப் பொறுப்பாளர்களாக இருந்த போதும் அண்ணன் தங்கைகளாகவே வாழ்ந்திருந்தார்கள்.
தயாளன் சுபச்செல்வியின் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினராகவே அப்போதெல்லாம் பார்க்கப்பட்ட நாட்களுண்டு.
ஒவ்வொரு போராளியும் அன்று ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீட்டில் ஒருவராகவே மக்கள் கருதியிருந்ததனர் என்று சொல்லக் கேட்ட நினைவுகளை சுபச்செல்வி மீட்டுக் கொண்டாள்.
பதினைந்தாண்டுகளின் பின்னர் இன்றுதான் மீண்டும் தயாளனின் குரலைக் கேட்கின்றாள்.
” தயாளண்ணையா?”
” ஓம் சொல்லுங்கண்ணா”
பாசம் பிணைப்பின் ஆர்ப்பரிப்பை வார்த்தைகளில் கொட்டிவிட்டாள் சுபச்செல்வி.
” அம்மா யாரோடை கதைச்சுக் கொண்டிருந்தவா?”
” தம்பியோட”
“யார் உங்கட தம்பியா?”
” ஓமண்ணா. ஏன் கேக்கிறிங்கள் ?”
” அவனை புகையிரதம் மோதிற்று.”
” என்னண்ணா சொல்றிங்கள்?”
” ம்ம்.பதட்டப்படாதையுங்கோ”
” தண்டவாளத்தால நடந்துகொண்டு கைப்பேசியில் கதைச்சுக்கொண்டு வந்திருக்கிறான்.புகையிரதம் பின்னால் வந்ததை கவனிக்காதவனாய் அதில் மோதியிருக்கிறான்.”
நடந்ததை மெல்ல மெல்ல சொல்லிக்கொள்ள முயன்று கொண்டிருந்தான் தயாளன்.
ஒரு துயரமிகு செய்தியை பட்டென சொல்லி விடும் பழக்கத்தில் தயாளன் வளர்க்கப்படவில்லை.
பல வீரச்சாவுச் செய்திகளை பெற்றோருக்கும் உற்றாருக்கும் கொண்டு சென்று சேர்த்த அணுகு முறைப் பழக்கம் தயாளனிடம் இருந்தது.
இடர் மிகுந்த போர்க்காலச் சூழலில் விடுதலைப்போரில் வீரச்சாவடையும் போராளிகளின் வீரச்சாவினை அவர்களது பெற்றோரால் தாங்கிக்கொள்ளக் கூடியளவிற்கு அவர்களின் மனதை திடப்படுத்தி சூழலை புரிந்து அந்த நிகழ்வை ஏற்றுக்கொள்ளும் படி உரைப்பதில் நீண்டகால பழக்கம் இருந்தது.
இப்போதும் கூட அது பயன்பட்டுக்கொள்வதை சுபச்செல்வி புரிந்து கொண்டாள்.அவளுக்கும் இந்த பழக்கம் இருந்தது.அவளும் பல துயரச்செய்திகளை தாங்கிக்கொள்ளும்படி கொண்டு போய் சேர்ந்திருந்தாள்.
” பரவாயில்லை தயாளண்ணா.சொல்லுங்கோ?
மௌமனமானாள்.சுபனீசனிற்கு நடந்ததை ஊகித்தவளாக அவள் கண்கள் மெல்ல கலங்கத் தொடங்கி விட்டன.
” சொல்லுங்கோ அண்ணா?
தம்பிக்கு ஏதும்……”
குரலில் கலக்கத்தோடு தொக்கு விட்டாள் தன் பேச்சில்.
” ஓம்.தம்பி சம்பவ இடத்திலேயே இறந்திட்டான்.”
சுபச்செல்வி விம்மி அழத்தொடங்கி விட்டாள்.
அவளின் அழுகையை கைப்பேசி சொல்லிக்கொண்டிருந்தது.தொடர்பை துண்டித்து விட்டான் தயாளன்.
பல இழப்புக்களை எல்லாம் முன்பு சந்தித்த போது , கூடப் பழகியவர்களை எல்லாம் பிரிந்த போது, காலையில் சேர்ந்து உணவுண்டவர்கள் மதியத்தில் வீரச்சாவடைந்த நிகழ்வுகளை எதிர் கொண்டவள் சுபச்செல்வி.
இறுதிச் சண்டைகளில் கூட தன்னோடு நின்றவர்கள் எதிரியின் சூட்டில் வீழ்ந்த போதும் கூட மனம் தளராதவள் இப்போது கண் கலங்கி விம்மி அழுது கொண்டிருந்தாள்.
அம்மாவை விட அவளுக்கு அவளின் அப்பாவில் தான் அதிக பாசம் இருந்தது.
அந்த அப்பா கூட முள்ளிவாய்க்காலில் விழுப்புண் பட்டிருந்த போது, அவருக்கு சிகிச்சையளிதும் காப்பாற்ற முடியாத போது, உடலோடு அணிந்திருந்த கருவித்தொகுதிகளை இறந்த அப்பாவின் உடலில் இருந்த அகற்றிய போதும் கூட பிரிவின் துயரில் சுபச்செல்வி கண் கலங்கியது கிடையாது.
ஆனாலும் இப்போது கண் கலங்கிக்கொண்டாள்.காலம் பதினைந்தாண்டு கடந்து விட்டது.உறுதி மிக்க மனங்களில் சூழல் மாற்றங்களை கொண்டு வந்து விட்டது போலும்.
” என்னடி செல்வி?”
” சுபனீசனை புகையிரதம் மோதி விட்டதாம்”
“அவனுக்கு ஒன்டும் இல்லையே”
” ஓம் அம்மா.அவன் அதிலேயே இறந்திட்டானாம்.தயாளண்ணை தான் சொன்னவர்”
தாராவுக்கு இப்போதே உரத்துக் கத்திவிட வேண்டும் போல் இருந்தது.இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
சுபச்செல்வியின் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்த வீட்டின் உள் தளத்தில் தார இப்போது இருந்தாள்.
“என்னுடைய துயரத்தின் அலறல் எனக்கு ஆறுதலாக இருக்கும்.ஆனாலும் சின்னஞ் சிறுசுகளுக்கு அப்படி இருக்கப் போவதில்வையே!”தனக்குள் எண்ணிக்கொண்டாள் தாரா.
மௌனமாகவே இருந்தவளை
” அம்மா”
அழைத்தாள் விம்மலோடு சுபச்செவ்வி.
” ஒருக்கா சுபனிட்ட கேட்டிருக்கலாம்.தம்பி எங்கட நின்டு கதைக்கிறாய் என்டு.”
புரியாதவளாக கேட்டாள் சுபச் செல்வி “என்னம்மா சொல்றிங்கள்.சுபனுக்கு இப்படி நடந்த பின்னுமா?…..”
தாராவின் நடத்தையின் கோலத்தில் சுபச்செல்வி தன்னை அன்றைய பூவிழியாக பார்த்தாள்.
ஆம்.
அன்று இப்படித் தான் பிரிவின் துயரங்களில் தனக்கிருந்த வெளிப்பாட்டை கட்டுப்படுத்தி தங்களுக்கு முன்னுள்ளவர்களின் துயரங்களை களைவதில்; அவர்களை தேற்றுவதில் அக்கறையாக இருந்தாள் பூவிழியாக சுபச்செல்வி.
“இருந்தும் சுபன் எங்க நின்டு கதைக்கிறாய்? என்று கேட்டிருக்கலாம்.” ஏன் அப்பிடி அம்மா கேட்க எண்ணியிருந்தார்?” விடையை மீண்டும் அம்மாவிடமே கேட்க எண்ணியவள் அதற்காக எத்தனித்தாள்.
அதற்குள்ளாகவே தாரா சொன்னாள்.
” எங்க நின்டு கதைக்கிறான் என்று கேட்டிருந்தாள் புகையிரதம் மோதாமல் இருக்கும் படி பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாமெல்ல. கைப்பேசியில் கதைக்கும் போது பாதுகாப்பாக இருந்து கதைக்கச் சொல்லி இருந்திருக்கலாம்.”
அப்போது தான் புரிந்தது சுபச்செல்விக்கு சுபனீசன் விட்டிருந்த தவறு புரிந்தது.
கைப்பேசியில் பேசிக்கொண்டு புகையிரத தண்டவாளத்திற்கிடையில் நடந்து கொண்டிருந்ததாக தயாளன் சொன்னது.
எவ்வளவு படித்த கெட்டிக்காரன் விட்ட சின்னத் தவறு இன்று அவனை அவன் உறவுகளிடமிருந்து பிரித்து விட்டது.
” சுபச்செல்வி”
மறுமுனையில் அழைத்தான் தயாளன்.
” என்ன அண்ணா?”
அதே விம்மலோடு தான் இப்போதும் சுபச் செல்வி.
” சுபனுக்கு உயிர் இருக்கு.இரண்டு காலும் முழங்காலோடு இல்லை.அவ்வளவு தான்.அவனைகாப்பாற்றிடலாமாம்.”
………………..
நதுநசி