அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் லா பிளாட்டா நகரைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ். 60 வயதாகும் இவர், சட்டத்தரணியாகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார்.
இவர் ‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்று, வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.
இவரது சாதனை அழகு ராணிப் போட்டி துறையில் ஒரு புது பரிணாமத்தை உருவாக்கி, முன்னுதாரணமாக மாறியுள்ளது.
இந்த போட்டி மூலம் அதிக வயதில் அழகி பட்டம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனையை ரோட்ரிக்ஸ் படைத்துள்ளார்.
வழக்கமாக, அழகு ராணிப் போட்டிகளுக்கு இருக்கும் விதிமுறைகளை இந்த மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ் கலைத்துள்ளது.
எந்தவொரு அழகு ராணிப் போட்டிகளிலும் பங்கேற்க வயது வரம்பு உள்ள நிலையில், இந்த போட்டியில் வயது வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 18 வயதில் இருந்து 73 வயது வரை சுமார் 34 பேர் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட ரோட்ரிக்ஸ் வெற்றி பெற்றார்.
வெற்றிக்குப் பின் அவர் பேசுகையில், “அழகு ராணிப் போட்டிகளில் இந்த புதிய முன் உதாரணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் பெண்களைப் பொறுத்தவரையில் உடல் மட்டும் அழகல்ல, அதையும் தாண்டி நல்ல மதிப்புகள் உள்ளன” என்றார்.
மேலும், இவரது வெற்றி உடல் தோற்றத்திற்கு அப்பாற்பட்டு, பண்புகளை அங்கீகரித்துக் கொண்டாடுவதற்கான மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும், அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ் ‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டம் வென்றதன் மூலம் தேச அளவிலான ‘மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா’ அழகு ராணிப் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார்.
இதனால் மே 25ஆம் திகதி நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா அழகு ராணிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.