செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் செல்வம் | சிறுகதை | விமல் பரம்

செல்வம் | சிறுகதை | விமல் பரம்

7 minutes read

“அம்மா நேரமாச்சு. கடை திறக்க முதலே போய் நிக்கவேணும் பிந்திப் போனால் முதலாளி கத்துவாரம்மா” கடைக்குப் போக அவசரப்பட்டேன்.

“சாப்பிட்டிட்டுப் போ. இனி வேலை முடிஞ்சு வந்துதான் சாப்பிடுவாய். இதுக்குத்தானே படிப்பையும் விட்டு உழைக்கிறாய்” கண் கலங்கியபடி சாப்பாட்டைத் தந்தாள் அம்மா.

“உங்கட ஆசைக்கு பவித்ரா படிக்கிறாள்தானேம்மா பிறகேன் கவலைப்படுறீங்கள்”

“உனக்கு ஏ எல் சோதினை முதல்தரம் பிழைச்சுப் போச்சு. அதை இரண்டாம்தரம் எடுத்து பாஸ் பண்ணியிருந்தால் ஏதாவது வேலைக்கு முயற்சி செய்திருக்கலாம். அதை விட்டிட்டு கடைவேலைக்குப் போயிட்டியே நினைக்க மனம் ஆறுதில்லையடா”

அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போது அறைக்குள் இருந்து அப்பாவின் இருமல் சத்தம் கேட்டது. அம்மாவை மேற்கொண்டு கதைக்கவேண்டாம் என்று சைகை செய்தேன். நான் படிப்பை விட்டு வேலைக்குப் போவது அவருக்கும் கவலைதான். அதையே நாமும் அடிக்கடி சொல்லும்போது தன் இயலாமையை எண்ணி அதிகம் கவலைப்படுவார்.

எங்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர் அந்த விபத்துக்குப் பின் ஓய்ந்து போனார். வயல்வேலை, தோட்டவேலை, கட்டிடவேலை என்று எந்த வேலை கிடைத்தாலும் போய்விடுவார். குமரபுரத்துக்கு வீட்டுத்திட்டம் வந்தபின் கட்டிடவேலை தொடர்ந்து வந்தது. எந்தவித கவலையுமின்றி நானும் பவித்திராவும் படித்துக் கொண்டிருந்தோம். ஏ. எல் பரீட்சைக்கு மூன்று மாதங்கள்தான் இருந்தது. அன்று வழமைபோல் காலையில் வேலைக்குப் போனவர் வேலை நடந்து கொண்டிருந்த வீட்டின் மேல்பகுதியில் ஏறி நின்று வேலை செய்து கொண்டிருந்தபோது கால் சறுக்கிவிட்டது யாரும் எதிர்பார்க்கவில்லை. பிடிமானம் இல்லாமல் விழுந்ததால் இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. மாதக் கணக்கில் ஆஸ்பத்திரியில் இருந்தாலும் எழுந்து நடக்க முடியவில்லை. அப்பாவோடு உடனிருந்ததால் என்னாலும் படிக்க முடியவில்லை. படிக்காமலே பரீட்சைக்குப் போனேன் இரண்டு பாடங்கள்தான் பாஸ் பண்ண முடிந்தது. திரும்பவும் படிக்கச் சொல்லி வற்புறுத்தினாலும் என்னால் முடியவில்லை. அப்பாவின் வருமானம் இல்லாமல் கஷ்டமாகயிருந்தது. கட்டிடவேலை செய்ய அம்மா அனுமதிக்கவில்லை. கடைவேலையைத் தேடிக் கொண்டேன்.

சாப்பிட்டு எழுந்தபோது பாடசாலைக்குப் போக ஆயத்தமாகி புத்தகப்பையோடு பவித்ரா வந்தாள். என்னை விட ஐந்து வயது இளையவள்.

“அண்ணா கணக்குக் கொப்பி முடிஞ்சுது. தமிழ் கொப்பியில இரண்டு ஒற்றைதான் இருக்கு. கடையால வரேக்க வாங்கி வாறீங்களா பேனையும் வேணும்” என்றாள்.

சம்பளக்காசு பதினைந்தாயிரம் வந்ததும் அம்மாவிடம் கொடுத்து விடுவேன். அந்தப் பணத்தை எப்படித்தான் மாதம் முழுவதும் இழுத்து வைத்து சமாளிக்கிறாளோ. செலவை நினைத்ததும் அம்மாவுக்கு சிறிது கைகொடுக்கும் கோழிகளும் கிணற்றடியிலுள்ள வாழைமரங்களும் சின்ன மரக்கறித் தோட்டமும் நினைவுக்கு வந்தது. பணத்தை வாங்கிக் கொண்டு சைக்கிளில் விரைந்தேன். பரந்தனிலிருந்து மூன்று மைல் தூரத்திலுள்ள கிளிநொச்சியில் இருக்கும் தேவன் பலசரக்கு கடையில் ஒரு வருடமாக வேலை செய்கிறேன்.

கரடிப்போக்குச்சந்தியை நெருங்கும்போது பார்த்தேன் மூன்று நாட்களாய் எரிபொருளுக்காக பெற்றோல் நிலையத்துக்கு முன்னால் நீண்ட வரிசை காத்திருந்தது. முதல் ஆளாய் நின்றிருந்த வரதன் அண்ணை தன் வாகனத்தில் சாய்ந்தபடி பின் வரிசையில் நின்றவர்களோடு கதைத்துக் கொண்டிருந்தார். நேற்று வேலை முடிந்து போகும்போது அவரோடு கதைத்தேன்.

“கொழும்புக்குப் போய் வர வாகனம் கேட்கினம். இருக்கிற டீசல் காணாது. டீசல் வருகுது எண்டு சொல்லுறாங்கள் மூண்டு நாளாய் வீட்டுக்கும் போகாமல் இங்கேயே கிடக்கிறன் எப்ப வருமோ தெரியேல. உழைப்பில்லாமல் கஷ்டமாயிருக்குதடா”

அவருக்கு எப்பிடி ஆறுதல் சொல்வது இவரைப்போல எத்தனை பேர். வரிசையில் வாகனங்களுடன் நிற்பவர்களின் கவலை தோய்ந்த முகங்களைப் பார்க்கும்போது மனம் பிசைகிறது. வரிசையும் இன்று நீண்டிருக்கிறது. இன்றாவது டீசல் வருமா…

அவர்களைக் கடந்து போகும்போது மறுபக்கம் காஸ் சிலிண்டர் கடையின் முன்பும் காலி சிலிண்டர்களோடு ஒரு வரிசை நின்றிருந்தது. இன்று சிலிண்டர்கள் வரும் என்று அறிவித்து இருந்ததால் அந்த சுற்று வட்டாரத்திலுள்ளவர்கள் வந்து வரிசையில் காத்திருந்தார்கள். இன்று வாங்காவிட்டால் அடுத்தமுறை எப்போது வரும் என்று தெரியாது. வரும் சிலிண்டர்களை இன்றே கொடுத்து முடித்து விடுவார்கள். வாங்கும் சிலர் கஷ்டத்தினாலோ அல்லது லாபம் கருதியோ அதை மூன்று மடங்கு விலைக்கு விற்றும் விடுவார்கள். வாங்க முடியாதவர்கள் பழையபடி விறகு அடுப்பில் சமைக்க தொடங்கி விட்டார்கள். எங்கள் வீட்டில் எப்பொழுதும் விறகு அடுப்புத்தான். அதனால் இதன் பாதிப்பு எங்களுக்குத் தெரியவில்லை.

சைக்கிளின் வேகத்தை அதிகமாக்கினேன். அடுத்து வந்த பெற்றோல் நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக அங்கேயும் நீண்டதொரு வரிசை காத்திருந்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து லீற்றர் எண்ணெய் அவர்களின் குடும்பகாட் பார்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த வரிசையில் வயது போனவர்களும், சிறுவர்களும் அதிகமாக இருந்தார்கள். அதிகாலையிலேயே வந்து காத்திருப்பார்கள் வெயில் உச்சத்துக்கு வந்தாலும் அசைய மாட்டார்கள். சண்டை நடந்தபோது உயிரோடு இருக்க வீட்டை விட்டு ஓடினோம். கோவிட் வந்தபோது உயிருக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தோம். இன்று உயிர் வாழ எல்லோரும் வீதியில நிற்கிறோம். பார்க்கும் இடமெல்லாம் நீண்ட வரிசைகள். பொருட்களின் தட்டுப்பாட்டாலும் விலையேற்றத்தாலும் மக்கள் படும் துன்பம் கணக்கில்லாமல் நீண்டு கொண்டே போகிறது.

நினைவுக்குள் என் கடை முதலாளி வந்தார். பொருளாதார நெருக்கடி வந்ததும் சாமான்களின் விலை இரண்டு மடங்கு அதிகமாகிவிட்டது. இவர் மூன்று மடங்கு விலை சொல்லுவார். இப்போதெல்லாம் அடிக்கடி அவரோடு வாக்குவாதம் வருகிறது. ஈவிரக்கம் இல்லாமல் சாமான்களின் விலையைக் கூட்டிச் சொல்லும்போது கோபம் வருகிறது. அவசரத்துக்குக்கூட கடன் கொடுக்கமாட்டார். நேற்று கடைக்கு கைக் குழந்தையோடு ஒரு அம்மா வந்திருந்தார். ஆயிரம் ரூபா தந்து அங்கர்மா பெட்டி கேட்டார். நான் முதலாளியை பார்த்தேன்.

“என்ர மூஞ்சியை ஏன் பாக்கிறாய். மாப்பெட்டி ஆயிரத்தி இருநூறு ரூபா. மீதி இருநூறை வாங்கிக் கொண்டு ஒரு பெட்டி குடு” என்றார்.

“இருந்த காசைக் கொண்டு வந்தனான் அண்ணை. மிச்சக் காசை பிறகு கொண்டு வந்து தாறன். பிள்ளைக்கு மா வேணும்” அந்தப் பெண் தன் குழந்தையைப் பார்த்தபடி சொன்னார்.

“கஷ்டம் எண்டு வந்து கேக்கிறவைக்கெல்லாம் கடன் குடுத்தால் நான் என்னண்டு கடையை நடத்துறது. காசு தந்திட்டு வாங்கிக்கொண்டு போங்கோ”

பட்டென்று சொல்லி விட்டு உள்ளே போனார். நான் அவர் பின்னால் போனேன்.

“அண்ணை விலை ஏற முதல் வாங்கின மா பெட்டியள். ஆயிரம் ரூபாவுக்கு குடுத்தாலும் நட்டம் வராது. குழந்தையைப் பாக்க பாவமாயிருக்கு அண்ணை” என்றேன்.

“வாயை மூடிக் கொண்டு உன்ர வேலையை ஒழுங்காய் பார் இல்லையெண்டால் கலைச்சுப் போடுவன்” பல்லை நெருமியபடி உறுமினார். திரும்பி அந்த அம்மாவைப் பார்த்தேன். பிள்ளையோடு படியிறங்கிப் போய்க் கொண்டிருந்தார். ஆற்றாமையோடு முதலாளியைப் பார்க்க அவர் ஒன்றும் நடவாதமாதிரி கொப்பியில் கணக்கு எழுதிக் கொண்டிருந்தார். இப்படி மனதை நோக வைக்கும் சம்பவங்கள் நிறைய நடக்கிறது. என்னால் என்ன செய்ய முடியும். வருமானத்திற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கடைக்கு வந்து சேர்ந்தபோது வாசலில் முதலாளி நின்றிருந்தார்.

“வெள்ளன வா எண்டு சொல்ல ஆடி அசைஞ்சு வாறாய். சனம் வந்து காவல் நிக்குதுகள் கெதியாய் போடா போய் வேலையைப் பார்” கத்திய சத்தத்தில் அங்கு நின்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். தலை நிமிராமல் உள்ளே போய் வேலையைத் தொடங்கினேன். சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் சாமான்களின் விலையேற்றத்தால் வாங்கும் அளவு குறைந்திருந்தது. ஐம்பது கிராம் நூறு கிராம் என்று வாங்குபவர்கள்தான் அதிகம்.

“இனி வாற ஆக்களை நான் பாக்கிறன். இரண்டு இடத்தில இருந்து ஓடர் வந்திருக்கு. ஒரு மணிக்கு முதல் குடுக்க வேணும் நீ போய் குடுத்திட்டு வா” சுட்டெரிக்கும் வெயிலில் அலைய வேண்டுமே என்ற சலிப்பு வந்தபோது வீதியில் நாள் முழுவதும் வெயிலையோ மழையையோ பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் தவமிருக்கும் சனங்கள் நினைவுக்கு வந்தார்கள்.

ஓடர் வந்த இடத்தைப் பார்த்தேன். ஒன்று கரடிப்போக்குச்சந்தி. மற்றது பரவிப்பாஞ்சான். இரண்டும் இரண்டு திசை. முதல் கரடிப்போக்குச்சந்திக்குப் போக சாமான்களை எடுத்தேன்.

“குடுத்திட்டு உடன வா. சொன்ன நேரத்துக்கு குடுக்கவேணும்”

தலையை ஆட்டியபடி சைக்கிளை எடுத்தேன். விலாசம் தேடி சாமான்களைக் கொடுத்து விட்டு வரும்போது காலையில் மண்ணெண்ணெய்க்காக நின்றிருந்த வரிசையைப் பார்த்தேன். பாதி குறைந்திருந்தது. வரிசையின் முன்னால் நின்ற ஆச்சி கண்ணில் பட்டாள். சீலைத் தலைப்பால் தலையை மூடியிருந்தாள். காலில் செருப்பு இல்லை எண்பது வயதிருக்கும்.

“சூட்டுக்கு காலெல்லாம் வெந்து போச்சு மயக்கம் வாறமாதிரி தலையும் சுத்துது. ஏலாமல் இருக்குது மோனை கெதியாய் எண்ணெயைத்தா” வாங்கிக் கொண்டு திரும்பினாள். இந்த வயதிலும் கஷ்டப் படுகிறாளே என்று நினைத்தபடி விரைந்தேன்.

திடீரென ஆச்சியின் அலறல் சத்தம் கேட்டது. மயங்கி விழுந்து விட்டாளோ.. பதறியபடி திரும்பிப் பார்த்தேன்.

“படுபாவி ஒரே இழுவையில பறிச்சுக் கொண்டு போட்டானே. கால்கடுக்க நிண்டு வாங்கினதை ஒரு நிமிசத்தில கொண்டு போட்டானே பாவி”

சுடுமணலிலிருந்து பெருங்குரலில் அலறிக் கொண்டிருந்தாள். சைக்கிளை விட்டு ஓடினேன். நிலைமையை ஊகித்துக்கொண்டேன். தட்டிப்பறிக்க எப்படி மனம் வந்தது. எடுத்துக்கொண்டு ஒடினவனைத் தேடினேன் கண்ணில் அகப்படவில்லை. சனங்கள் தங்கள் இடம் போய் விடுமோ என்ற அச்சத்தில் அசையாது நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“எடுத்தவன் ஓடிட்டான் ஆச்சி எழும்புங்கோ” விட்டிட்டுப் போக மனம் வரவில்லை.

“இருந்த காசையெல்லாம் பொறுக்கிக் கொண்டு வந்தன் எண்ணெய் இல்லாமல் எப்பிடி வீட்டுக்குப் போறது” இடுங்கிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அடிபட விழுந்ததினால் எழுந்து நிற்க முடியவில்லை. சைக்கிளை கடை வாசலில் பூட்டி விட்டு ஆச்சியை கைத்தாங்கலாய் கூட்டிப்போய் பக்கத்திலுள்ள அவளின் வீட்டில் விட்டு வந்தேன். ஆச்சியின் கலங்கிய முகமே கண்ணில் நின்றது. சைக்கிளை வந்து எடுத்தபோதுதான் உடனே வாவென்று முதலாளி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நேரம் பார்ததேன் இரண்டுமணி கடந்து விட்டிருந்தது. கத்தப் போகிறாரே…

கடைக்குள் கால் வைத்ததும் நெருப்புக் கண்களால் சுட்டெரித்தார்.

“எங்கையடா போய் தொலைஞ்சனி. சொன்ன நேரத்துக்கு குடுக்க வேணும் எண்டு உனக்கு சொன்னனான்தானே. ஓடர் தந்தவன் இரண்டு மூண்டுதரம் போன் பண்ணினான் குடுக்காததால ஓடரை கான்சல் பண்ணிட்டான். உன்னால என்ர வியாபாரம் போச்சு”

“கியூவில நிண்டு வாங்கின மண்ணெண்ணையை ஒருத்தன் பறிச்சுக் கொண்டு ஓடிட்டான். பாவம் அந்த ஆச்சி விழுந்த வலியில துடிச்சுக் கொண்டிருக்க என்னெண்டு விட்டிட்டு வாறதண்ணை. அதுதான் வீட்டில விட்டிட்டு வாறன்”

“என்னட்ட சம்பளம் வாங்கிக் கொண்டு ஊர் உத்தியோகம் பாக்கிறாய். உன்னையெல்லாம் வைச்சுக் கொண்டு கடையை நடத்தேலாதடா. என்ன சொன்னாலும் எதிர்த்துக் கதைக்கிறாய். உன்னோட கத்திறதே எனக்கு வேலையாய்ப் போச்சு. வேலை கேட்டு கெஞ்சிக் கொண்டு வருவியள் பழகிட்டால் திமிர் வந்திடும். எனக்கு உது சரிவராது. ஒழுங்காய் இரு இல்லையெண்டால் கலைச்சுப் போடுவன்” கத்தினார்.

கோபத்தை அடக்கிக் கொண்டு உள்ளே போனேன். வேலை முடியும் நேரம் கடைக்கு சாமான்கள் வந்தது. எல்லாவற்றையும் எடுத்து உரிய இடங்களில் அடுக்கினேன். அரிசி மூட்டைகளை உள் அறையில் வைக்கச் சொன்னார் வைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.

அடுத்தநாள் கடை திறக்க முதலே வந்து முதலாளிக்காக காத்திருந்தேன். அவர் வந்ததும் கடை திறந்து உள்ளே போக என் அருகில் வந்து மெல்லச் சொன்னார்,

“அரிசி கேட்டால் இல்லை எண்டு சொல்லு. விலை ஏறப் போகுதாம் பார்த்துக் குடுப்பம்” இதுக்குத்தான் வந்த அரிசி மூட்டைகளை உள் அறைக்குள் வைக்கச் சொன்னாரா…

“வேண்டாம் அண்ணை. ஏற்கனவே நூறு ரூபாவிற்கு வித்த அரிசி முன்னூறுக்கு உயந்திட்டுது. இதுக்கு மேலையும் கூட்டி வித்தால் சனங்கள் பாவமண்ணை. பசியோட வந்து கேக்கேக்கை வைச்சுக் கொண்டு இல்லையெண்டு என்னெண்டு சொல்லுறது. அதுகளின்ர வயித்தெரிச்சல் எங்களைச் சும்மா விடாது” என்னை மீறிய படபடப்போடு சொன்னேன்.

இன்று வரும்போது, டீசல் இண்டைக்கு வந்திடுமாம் அடிச்சுக் கொண்டு வீட்டை போகேக்க அரிசி சாமான்கள் வாங்கிக் கொண்டு போகவேணுமடா. அரிசிக்கும் தட்டுப்பாடாம் உங்கட கடையில அரிசி இருக்கோ என்று வரதன் அண்ணை கேட்டதும் இருக்குது வாங்கோ என்று நான் சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது.

நாலு நாளாய் கியூவில் காத்திருந்த களைப்பும் நித்திரையின்மையும் பசியுமாய் வரும் அவரிடம் அரிசி இல்லையென்று எப்பிடிச் சொல்லுவேன் என்னால் முடியாது.

“கடைக்கு நான் முதலாளியோ இல்லை நீயோ. பேசாமல் நான் சொன்னதைச் செய்” என்றார்.

“காலமை வரேக்க வழியில கேட்டவைக்கு இருக்கு எண்டு சொல்லிப் போட்டனண்ணை. நம்பி வருவினம் குடுப்பம் அண்ணை” கெஞ்சாத குறையாய் கேட்டேன்.

“வாயை மூடு. கடை நடத்த எனக்குச் சொல்லித்தாறியோ. நீ என்ன சொல்லுவியோ எனக்குத் தெரியாது இண்டைக்கு அரிசி குடுக்கிறதில்லை” கோபத்தோடு கத்தினதைக் கேட்டு எனக்கு வெறுத்தே போய்விட்டது.

“இது உங்கட கடையண்ணை நீங்கள் விரும்பினபடி நடத்துங்கோ. கோவம் வந்தால் கலைச்சுப் போடுவன் எண்டு நெடுகவும் சொல்லுறீங்கள். நீங்கள் கலைக்கவேண்டாம் நானே போறன். இதையெல்லாம் பாத்துக்கொண்டு என்னால வேலை செய்யேலாது. நாங்கள் நல்ல மனசோட நியாயமாய் நடந்தால்தான் எங்கட குடும்பம் நல்லாய் இருக்கும். ஏனோ தெரியேல குடும்பத்தைக் குறை இல்லாமல் பாக்க வேணுமெண்டு உழைச்ச அப்பா விழுந்து படுக்கையில கிடக்கிறார். படிக்க ஆசைப்பட்ட எனக்கும் படிப்பு கிடைக்கேல தங்கச்சியையாவது படிக்க வைக்க வேணும் எண்டு ஆசைப்படுறன். அதுக்கு நேர்மையாய் இருக்கவேணும். இப்பிடி உழைக்கிற காசு எனக்கு வேண்டாம் அண்ணை. வீட்டில இப்ப படுற துன்பமே போதும் இனி ஏதாவது வந்தால் எங்களால தாங்கேலாது. இண்டையோட நான் போறன் நீங்கள் வேலைக்கு வேற ஆளைப் பாருங்கோ” துணிந்து சொல்லிவிட்டு என் வேலையைத் தொடங்கினேன்.

முகத்தில் அறைந்தது போல் திகைத்து நின்றவர் மனதில் பாரிசவாதத்தால் படுக்கையில் இருக்கும் அவரின் தாயின் நினைவும் அவர் படும் துன்பமும் நினைவுக்கு வந்திருக்குமோ என்னவோ இறுகிய முகத்தோடு ஒன்றும் சொல்லாமல் தன் இருக்கையில் போயிருந்தார்.

மாலை ஆறுமணியாகி விட்டது. இந்த நேரத்தில்தான் கடைக்கு நிறைய பேர் வருவார்கள். வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தாலும் மனம் அமைதியில்லாமல் கொதித்துக் கொண்டிருந்தது.

“அரிசிக்கும் தட்டுப்பாடு வந்திட்டுது எனக்கு இரண்டு கிலோ அரிசி தாங்கோ”

வரதன் அண்ணையின் குரல் திடுமெனக் கேட்கவும் திக்கென்றது.

இருந்த அரிசியெல்லாம் குடுத்து முடிஞ்சுது என்று சொல்ல வாயெடுத்தேன் அதற்குள்

“அரிசி மூட்டையை எடுத்து வந்து பழைய விலைக்கு குடு செல்வம்”

என் பெயரோடு சொன்னார் முதலாளி . ஒரு நிமிடம் உறைந்து நின்றேன். அடுத்த நொடி

“வாங்கோ வாங்கோ அரிசியிருக்குது” உரத்த குரலில் சொல்லிவிட்டு அரிசி மூட்டையை அறையிலிருந்து வெளியே எடுத்து வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தேன். வரதன் அண்ணையை எதிர்பார்க்க அவர் பின்னால் ஒரு வரிசை மெல்ல நீண்டு கொண்டு போனது.

மனநிறைவோடு என் வேலையைத் தொடங்கினேன்.

 

நிறைவு…

 

விமல் பரம்

 

நன்றி : சிறுகதை மஞ்சரி

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More