புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கேகாலை மாவட்டத்தில் அடுத்த முறை தமிழ் எம்.பி.! – மனோ நம்பிக்கை

கேகாலை மாவட்டத்தில் அடுத்த முறை தமிழ் எம்.பி.! – மனோ நம்பிக்கை

3 minutes read

“கேகாலை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் சில ஆயிரங்களால் கை தவறிப் போன எம்.பி. பதவி அடுத்த முறை கைகூடும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. “ஒன்றிணைந்து வெல்வோம், தேசிய அரங்கில் இடம்பெறுவோம்” என்ற கோஷம் கேகாலை மாவட்டம் முழுக்க ஒலிக்கின்றது. இது ஜனநாயக மக்கள் முன்னணியின் மாவட்டம் தழுவிய கட்டமைப்பு மாநாடு.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட மாநாடு, மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் முருகேசு ஏற்பாட்டில், எட்டியாந்தோட்டையில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது  இதில் கேகாலை ஐக்கிய மக்கள் சக்தி எம்பிகள் கபீர் ஹசீம், சுஜித் பெரேரா, கூட்டணி பிரதி தலைவர்கள் திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் மற்றும் வேலு குமார் எம்.பி.  ஆகியோர் உட்பட கட்சி, கூட்டணி அரசியல் குழு உறுப்பினர்களும், விசேட அழைப்பாளர்கள், அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் தலைமை உரை ஆற்றிய மனோ எம்.பி. மேலும் கூறியதாவது:–

“இங்கே பெருந்தொகையில் கூடி இருக்கும் நீங்கள் சும்மா அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல, என்பதை மேடையில் அமர்ந்துள்ள நண்பர்கள் கபீர் ஹசிம், சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு சொன்னேன். கேகாலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளில், அனைத்து தோட்ட பிரிவுகளில், அனைத்து நகர பிரிவுகளில் அமைந்துள்ள எங்கள் அமைப்பாளர்களின் தலைமையிலான கட்சி வலை பின்னலான செயற்குழு உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் என்னிடம் இதோ இங்கே என் கையில் உள்ளது.

“மலைநாடு” என்பது புவியியல் அடையாளம். “மலையகம்” இனவியல் அடையாளம். ஆகவே, மலையகம் என்பது நுவரெலியா மாத்திரம் அல்ல. நூரளையையும் உள்ளடக்கி கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கொழும்பு, பதுளை, மாத்தளை, கம்பஹா, மொனராகலை, காலி, மாத்தறை, குருநாகலை  இன்னும் பல மாவட்டங்களில் பரந்து வாழும் தமிழர்களின் அரசியல் அடையாளம். எமது இந்தக் கேகாலை மாவட்ட கட்டமைப்பு மாநாடு இந்த மகத்தான உண்மையை அரங்கேற்றியுள்ளது. ஆகவே, இன்று இங்கே அமைப்பு ரீதியாக அடி எடுத்து வைத்து விட்டோம். இனி நிற்க நேரமில்லை.

தேர்தல் வேளையில் சென்னை தொலைகாட்சிகளில் முழு நாளும் சினிமா பார்க்காதீர்கள். அன்றைய நாளை விடுமுறை விருந்து தினமாக கருதி செயற்படாதீர்கள். அதன் விளைவுதான் சில ஆயிரக்கணக்கானோர் வாக்களிக்கத் தவறியதால், எமது பிரதிநிதித்துவம் கைதவறிப் போனது. அந்தத் தொலைகாட்சிகளில் மெட்னி ஷோ, ஈவினிங் ஷோ, நைட் ஷோ, பின் மோர்னிங் ஷோ பின் மீண்டும் மெட்னி ஷோ. இதில் ரஜனிகாந்த் வருவார். அஜித் குமார் வருவார். விஜய் வருவார். ஆனால், நாளை உங்களுக்கு துன்பம், துயரம் வரும் போது, ரஜனிகாந்த், அஜித் குமார், விஜய் ஆகியோர் வர மாட்டார்கள்.

உங்களுக்காக நான்தான் வர வேண்டும். நாம்தான் வர வேண்டும். ஏனெனில், அவர்கள் சினிமா ஹீரோ. நான் நிஜ ஹீரோ. உங்களுக்காக பிரச்சினை என்றால் ஓடோடி வருகிறேன். இப்படி நான் நாடு முழுக்க போக வேண்டியுள்ளது. இனிமேல் நீங்கள் உங்கள் மாவட்ட மண்ணின் மைந்தன் ஒருவனை தெரிவு செய்ய வேண்டும். அது உங்களை உரிமை. வாழ் நாள் முழுக்க வாக்கு கேட்டு வருபவர்கள் எல்லோருக்கும் வாக்கு கொடுத்து விட்டு மேலே பார்த்துக்கொண்டு நிற்க முடியாது.

நம்பர் கபீர் ஹஷிம் எனது கண்ணியமான நண்பர். அவருக்கு நாம் எமது விருப்பு வாக்கு ஒன்றை வழங்குவோம். அவருக்கு அதிக எண்ணிக்கையான விருப்பு வக்குகள் கிடைக்கும் போது அவர் பலமிக்க அமைச்சர் ஆவார். அதேவேளை அவர் அவரது ஆதரவு வாக்காளர்களிடமிருந்து எமக்கு ஒரு விருப்பு வாக்கு வழங்க விரும்புகிறார். ஆகவே நாம் வாக்குகளை பகிர்ந்து கொள்ளுவோம்.

அதேபோல். என் இளமை கால நண்பர் சுஜித் சஞ்சய் பெரேராவுக்கும் நாம் நாம் எமது விருப்பு வாக்கு ஒன்றை வழங்குவோம். அவரையும் நாம் பலமிக்க அமைச்சர் ஆக்குவோம். அவரும் அவரது ஆதரவு வாக்காளர்களிடமிருந்து எமக்கு ஒரு விருப்பு வாக்கு வழங்க விரும்புகின்றார். ஆகவே நாம் வாக்குகளை பகிர்ந்து கொள்ளுவோம்.

இது கட்சி தலைவர் என்ற முறையில் எனது கனவுத் திட்டம். இப்படித்தான் நாம் கேகாலை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் சில ஆயிரங்களால் கை தவறிப்போன எம்.பி. பதவியை, இம்முறை பெறுவோம். எனது கனவை நனவு ஆக்குங்கள். அது உங்கள் கைகளில் இருக்கின்றது. கேகாலையின் எட்டியாந்தோட்டை நான் பிறந்த ஊர். ஆகவே, கேகாலையின் வெற்றி எனது தனிப்பட்ட வெற்றியும் கூட என்பதையும் மறவாதீர்கள்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More