செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஆசைமுகம் | சிறுகதை | பெருமாள் முருகன்

ஆசைமுகம் | சிறுகதை | பெருமாள் முருகன்

12 minutes read

ரஸ்வதி எதையும் கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. காதுகளில் துண்டு துண்டாக விழுந்தவற்றை வைத்து ஊகம் செய்தாள். ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் அர்விந்த் சுவாமியைப் பற்றிய செய்தி, பேட்டி அல்லது எதுவோ வந்திருக்கிறது. அதில் ஒரு வரி படிப்பதும் சரஸ்வதியை ஒரு பார்வை பார்ப்பதும், பின் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு சிறு சத்தத்தோடு சிரிப்பதுமாக இருந்தனர் சக ஆசிரியைகள் இருவரும்.

அவளைப் பற்றிய ரகசியங்கள், அனைவருக்கும் தெரிந்தவையாக இருந்தன. அவை எந்த வழியாக அவர்களை வந்து சேர்ந்தன எனத்  தெரியவில்லை. பிறரைப் பற்றி அறிய ஆயிரம் வழிகள். இங்கிருந்து ஆசிரியர் சங்கக் கூட்டத்துக்கு, பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும்போது அங்கே வந்திருக்கும் யாராவது ஒருவர், ‘சரஸ்வதி, என் ஃப்ரெண்ட்தான்’ என ஆரம்பித்திருப்பார்கள். அப்புறம் ஏளனச் சிரிப்போடு அர்விந்த் சுவாமியைப் பற்றிய பேச்சு நடந்திருக்கும். இருவரும் இந்த விஷயத்தைப் பேசுவதிலேயே நெருக்கம் கூடி நண்பர்கள் ஆகியிருப்பார்கள். எனினும் ஒருவரும் அவளிடம் இதுவரை நேரடியாகக் கேட்டது இல்லை. திருமணத்தைப் பற்றி மட்டும் அக்கறையாக விசாரிப்பது உண்டு. அந்த விசாரணைகளை மெல்லிய புன்னகையோடு கடந்துவிடுவாள்.

சிலசமயம் தொலைக்காட்சியில் அர்விந்த் சுவாமி நடித்த படம் போடும் செய்தியையும் இப்படித்தான் பேசுவார்கள். முதல் மேஜையில் இருந்து கடைசி மேஜைக்குக் குரல் எழும்பும்… ‘இன்னைக்கு அர்விந்த் சுவாமியும் ஸ்ரீதேவியும் நடிச்ச படம். லீவு போட்டுட்டுப் பாக்கலாம்னு நினைச்சேன். லீவே இல்ல…’ – மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும்போது இவர்களுக்கு குரல் இவ்வளவு சத்தமாக எழுவது இல்லையே என எரிச்சல் வரும் சரஸ்வதிக்கு. இருந்தும், கட்டுப்படுத்திக்கொள்வாள். அன்றைக்கு முழுக்க அந்தப் படம் பற்றியே இடைவேளை கிடைக்கும்போதெல்லாம் பேசுவார்கள். ‘இந்த ஸ்ரீதேவி அவளைவிடச் சின்னப் பையன்கூட ஜோடி போட்டுக்கிட்டு நடிச்சிருக்கிறா பாரேன். என்ன தெகிரியம்?’ என்பார் ஒருவர். ‘ஆமா எல்லாம் தனக்கு ஏத்த ஜோடியைத்தான் பாக்கிறாங்களா?’ என ஜாடை பேசுவார் இன்னொருவர். சிலசமயம் ”தளபதி’ போட்டான், நீங்க பாத்தீங்களா டீச்சர்?’ என அவளிடமே கேட்டதும் உண்டு. உதட்டைப் பிதுக்கி, தலையை ஆட்டிவிடுவாள் சரஸ்வதி. என்றாலும் அவ்வப்போது அவளைச் சீண்டாமல் இருப்பது இல்லை.

சிறுகதை

‘அதுல அர்விந்த் சுவாமியைப் பாக்கோணுமே… மாவுல புடிச்சுவெச்ச சிலையாட்டம்’ எனச் சொல்லியபடியே அவளைப் பார்ப்பார்கள். சிரிப்பாளே தவிர, பதில் சொல்ல மாட்டாள்.

பட்டென மேஜை மேல் போட்டுவிட்டு இருவரும் எழுந்துபோனபோது பத்திரிகையின் பெயர் தெரிந்தது. ‘எடுத்துப் பார்க்கலாமா?’ என சரஸ்வதிக்குத் தோன்றியது. ஆனால்,  கட்டுப்படுத்திக்கொண்டாள். அவள் எடுக்கிறாளா எனக் கவனிப்பதற்காகக்கூட இப்படிப் போட்டுவிட்டுப் போயிருக்கலாம். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகவே அர்விந்த் சுவாமியைப் பற்றி எந்தச் செய்தியும் வருவது இல்லை; புகைப்படம் எதுவும் பிரசுரம் ஆவதும் இல்லை. அவற்றைச் சேகரிக்கும் ஆர்வம் அற்றுப்போய்விட்டதால், சரஸ்வதியின் கண்களுக்குப் படாமலும் இருந்திருக்கலாம். இந்த மாதிரி பத்திரிகைகள் வாங்குவதைக்கூட அவள் தவிர்த்துவிட்டாள். ஒரு சமயத்தில் அர்விந்த் சுவாமியைப் பற்றி செய்தி வெளியிடாதவை எல்லாம் பத்திரிகைகளா எனும் கோபம் எல்லாம் இருந்தது உண்டு.

ரஸ்வதி, ஊரில் இருந்து சென்று நகரத்துக் கல்லூரி ஒன்றில் இளங்கலை சேர்ந்திருந்த காலம் அது. அரசு நல விடுதியில் இடம் கிடைத்திருந்தது. அப்பனையும் அம்மாளையும் சிரமப்படுத்தாமல் படிக்க முடிந்தது. கையலக நிலத்தில் கீறிக்கொண்டு விவசாயம் செய்யும் அவர்கள், ஐந்து பிள்ளைகளை வளர்க்கப் பட்டபாடு பெரிது. நான்கைந்து வெள்ளாடுகளும் எருமைக் கன்றுகளும்தான் வயிற்றை நனைத்தன. ‘விவசாயப் பெருங்குடி’ என அவ்வப்போது பெருமை பீற்றிக்கொள்வார் அப்பன். நகரத்துக்கு வந்த பின் அவளுக்கு அந்தப் பெருமையில் துளியும் அர்த்தம் இல்லை என ஆனது.

பெருநகரம் கொஞ்ச நாள் தன் அரக்க வாயைக் காட்டிப் பயமுறுத்தியது. பழகப் பழக அதன் கோரப் பல் இளிப்பு அவளுக்குத் தென்படத் தொடங்கியதும் இயல்பாகிவிட்டாள். தன் செலவுகளுக்குச் சம்பாதிக்க எளிதான சில வேலைகளை நகரம் வைத்திருந்தது. பகுதி நேர வேலை கொடுக்கும் கடைகள் பல. அவற்றிலும்  வாடிக்கையாளரைக் கவனிக்க சரஸ்வதியை நிறுத்த மாட்டார்கள். உள்வேலைகள் செய்யப் பலர் வேண்டியிருக்கும். அந்த வேலைகள்தான் அவளுக்கும் சரியெனப்பட்டது. அதில் அவ்வப்போது விடுப்பு எடுத்தாலும் பாதிப்பு இல்லை. ஒரு கடையில் பிரச்னை என்றால், இன்னொன்றுக்கு எளிதாக மாறலாம். ஒவ்வொரு சமயம் எல்லா செலவுகளும் போக கை நிறையக் காசுகள் இருந்தன. அப்போது ஊருக்கும் செல்வாள்.

உடன் இருந்த பெண்களின் தொந்தரவைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. சரஸ்வதி கறுப்பு நிறம். கறுப்பு என்றால் அப்பிவைத்த கறுப்பு. அம்மாவே ஒரு சமயம் ‘தார்ல போட்டுப் பொரட்டி எடுத்தாப்ல எங்கடி இப்பிடி வந்து பொறந்த?’ எனக் கேட்டிருக்கிறாள். வீட்டில் எல்லாரும் கறுப்புதான். ஆனால் அவள் அளவுக்குக் கறுப்பு இல்லை. தங்கைகள் மூன்று பேர். தம்பி ஒருவன். பையனுக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து நான்கு பெண்களைப் பெற்றிருந்தார்கள். விடுதியில் தோழிகளுக்கு  விளையாட்டுப் பொருள்போல் ஆனாள் சரஸ்வதி. அது விடுதி ராகிங்கிலேயே தொடங்கிவிட்டது. அவள் உடம்பில் பல பாகங்களை நன்றாகத் தெரியும்படி நிற்க வைத்தார்கள். கையை உயர்த்தி ஒயிலும் காட்ட வேண்டும். ஒவ்வொருத்தியாக வந்து அவள் உடம்பில் அழுந்த விரல் பதித்து எடுத்து, தம் நெற்றியில் பொட்டிட்டுக்கொண்டார்கள். சிலர் கண்களுக்கும் தடவி அலங்கரித்தனர். 50 பேருக்கு மேல் பொட்டிட்டும் அவள் உடம்பின் மை குறையவே இல்லை.

‘கறுப்பழகி’ என்றார்கள். அதுவே பெயராகவும் ஆயிற்று. ‘ ‘சரஸ்வதி’னு உனக்கு ஏன் பேரு வெச்சாங்க? ‘பார்வதி’னு வெச்சிருந்தாப் பொருத்தமா இருக்கும்’ எனச் சொன்னார்கள். தினசரி ஒருத்தியாவது சரஸ்வதியின் உடலைத் தொட்டுப் பொட்டிடுவாள். இந்தத் தொடுதலில் ஆரம்பத்தில் உடல் கூசியது படிப்படியாகக் குறைந்து, யாராவது விரலை நீட்டிக்கொண்டு வந்தால் ‘இந்தா தொட்டுக்கோ’ என முகத்தை, இடுப்பைக் காட்டிக்கொண்டு நிற்கும் அளவுக்குத் தைரியம் ஆனாள். பெரும்பாலோர் அவள் இடுப்பை அழுந்தக் கிள்ளித்தான் மை எடுப்பார்கள். சில சமயம் பிருஷ்டத்தைக் காட்டுவாள். ‘இவளுக்கு எல்லாம் அத்துப்போச்சு’ எனக் கோபித்துச் சிரிப்பார்கள். எல்லாரும் தன்னால் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதில் திருப்திதான். ‘இந்தக் கறுப்புக்கு ஏத்தாப்ல மாப்பிள்ளையை எங்கிருந்து புடிப்ப?’, ‘உன்னைத் தொட்டதும் மாப்பிள்ளை உடம்பும் கறுப்பு ஆயிடுமே…’ என்றெல்லாம் கேலி செய்வார்கள்.

‘தளபதி’ படம் வெளியாகி மும்முரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம். விடுதியில் இருந்து கும்பலாகப் படத்துக்குப் போனார்கள். படம் பற்றியே கொஞ்சநாள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் அறிமுகம் ஆகியிருந்த அர்விந்த் சுவாமியும் முக்கியமான பேசுபொருள். ‘உன்னை மாதிரியே உன் குழந்தைகளும் கறுப்பாப் பொறந்தா என்னடி பண்ணுவ?’ என அறையில் உடனிருந்த பத்மா அக்கறையாக விசாரிப்பதுபோல கேலி செய்தாள். ‘எங்க அப்பா அம்மா என்னையை வளத்துனாப்லதான் நானும் வளத்துவன்’ என சொல்ல வாய் வந்தது. ஆனால், ஏனோ அதைத் தவிர்த்து, ‘அர்விந்த் சுவாமியைக் கல்யாணம் பண்ணிக்குவேன்டீ. அப்பறம் பாரு குழந்தைங்க எல்லாம் அப்பிடி கலராப் பொறக்கும்ல’ எனச் சொல்லிவிட்டாள். ‘தளபதி’ படம் பார்த்ததில் இருந்து அர்விந்த் சுவாமியின் முகம், அவள் மனதுக்குள் பதிந்திருந்து வெளிப்பட்டுவிட்டது போலும்.

‘சாக்ரடீஸ்கிட்டயோ பெர்னாட்ஷா கிட்டயோ ஒரு பொம்பளை கேட்டாப்ல இருக்குதே. அதுசரி, உன் கலர்லயே பிள்ளைங்க பிறந்துட்டா?’ என்றாள் பத்மா. ‘அர்விந்த் சுவாமி சுடருடி. அதுக்கு முன்னால எல்லாம் பொசுங்கிரும்’ என கவிதைபோல வார்த்தைகள் வந்துவிட்டன. விடுதி முழுக்க அவள் வார்த்தைகள் தீப்போல பரவின. ‘அர்விந்த் சுவாமி என் ஆளுடி. நீ எப்படிச் சொல்லலாம்?’ எனச் சண்டைக்கு வந்தவர்களும், ‘போனாப்போவுது நீயும் வெச்சுக்க’ எனப் பெரிய மனது செய்தவர்களும் இருந்தனர். இந்தப் பேச்சு இப்படியே போய் சரஸ்வதி என்றாலே அர்விந்த் சுவாமி என்றாகிவிட்டது. யோசிக்க யோசிக்க அர்விந்த் சுவாமி மீதான ஈடுபாடு அபரிமிதமாகக் கூடிக்கொண்டே வந்தது. விடுதியில் அவளையும் அவள் கறுப்பையும் பற்றி பேசுவதற்குப் பதிலாக, அர்விந்த் சுவாமியைப் பற்றி பேசும்படி ஆயிற்று. அது அவளுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது.

சிறுகதை

ள்ளியில் அவளுக்கு வேலையே ஓடவில்லை. ‘அந்தப் பத்திரிகையை வாங்கிப் பார்த்துவிடலாமா?’ எனக் குறுகுறுத்தது மனசு. ‘சாசனம்’  படத்துக்குப் பிறகு எதுவும் வரவில்லை. அதுவும்கூட நடித்து ரொம்ப நாள் கிடப்பில் இருந்து பின் வெளியானது. இப்போது மீண்டும் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வருகிறாரோ? திரும்ப எதற்கு வர வேண்டும்? அப்படி இருந்தால் அது தப்பான முடிவு எனத் தோன்றியது. வேறு செய்தியாக இருக்கும். தொழில்ரீதியானவை, அவர் கலந்துகொண்ட விழாக்கள் என எதையாவது போட்டிருப்பார்கள். அவர் தோற்றம் மாறிப்போனதுகூட முக்கியமான செய்திதான். அதைப் படிக்கவும் நிறையப் பேர் இருப்பார்கள். வயதானால் தோற்றம் மாறத்தானே செய்யும். அதுசரிதான். ஆனால் அவருக்கும் மாறுமா? ஏன் மாறாது. ‘தளபதி’ படத்தில் பார்த்ததற்கும் ‘பம்பாய்’ படத்தில் பார்த்ததற்கும் வித்தியாசம் இல்லையா? அப்போதெல்லாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்ததால் மாற்றம் எதுவும் தெரியவில்லை. நேசம் கண்களைக் கட்டிவிடும்.

அர்விந்த் சுவாமியை மனதுக்குள் தீவிரமாக நேசித்தாள். தன் பிரச்னைகளை எல்லாவற்றையும் தீர்க்க வந்த அவதாரம்போல கருதினாள். பெயரைச் சொல்வதைத் தவிர்த்து ‘அவர்’ எனச் சொன்னாள். ‘ரோஜா’ படம் வெளியானபோது கூடுதலாக ஒரு சீட்டு வாங்கினாள். அதற்கான இருக்கையை ‘அவருக்கு’ வழங்கினாள். உடன் வந்த தோழிகள் யாரையும் அதில் உட்கார விடவில்லை. அவள் அருகில்  ‘அவர்’ உட்கார்ந்து படம் பார்ப்பதை நினைக்கவே பெரும் சந்தோஷமாக இருந்தது. பேருந்தில்கூட அவருக்கும் ஒரு டிக்கெட் வாங்கத் தொடங்கினாள். தன்னுடன் எப்போதும் இருப்பவர் அவர் என உணர்ந்தாள். படுக்கையில் பெரும்பகுதியை அவருக்கு ஒதுக்கினாள். தன் வாழ்வில் எப்போதும் அவருக்கான இடத்தை ஒதுக்குவதில் தயக்கம் வந்ததே இல்லை. அவருடன் என்னென்னவோ பேசினாள். திடுமென அவள் சிரிப்பதையும் தானாகப் பேசுவதையும் பொது இடத்தில் பலரும் வித்தியாசமாகப் பார்த்தனர். அவள் யாரையும் பொருட்படுத்தவில்லை.

அவர்தான் இந்த உலகத்திலேயே பேரழகன். மாசு மருவற்ற உருண்டை முகம். சிறுபுள்ளி கறுப்பாகப் படிந்தாலும் சட்டெனத் துலங்கிவிடும். இரு கைகளாலும் அள்ளிக்கொள்ளலாம். இந்த உருண்டை வடிவம் எந்த நடிகருக்காவது உண்டா? தமிழ்நாட்டில் ஒருவருக்கும் இருக்காது. ஒரு துளி எண்ணெய் வடிதல் உண்டா? தந்தத்தில் செதுக்கிவைத்ததுபோல. நடுவில் இறக்கை சுருக்கிப் படுத்திருக்கும் கருவண்டைக்கொண்ட கண்கள் மொழி பேசும். ரோஜா நிற இதழ்கள் பிரிபடும்போது பெட்டகம் திறப்பதைப்போல் இருக்கும். இதழ் பிரிந்தாலே சிரிப்பு கூடிவிடும். அது முகம் முழுக்கப் பரவி உற்சாகத்தை ஊட்டும். சத்தமாகச் சிரிப்பதே அவரிடம் இல்லை. வாய் என்ன ஒலிபெருக்கியா? அந்தக் குரலுக்குத்தான் என்ன மகிமை. கண்களை மூடிக்கொண்டு கேட்டால் புல்லாங்குழல் காற்றில் இசைந்து வந்து தழுவி அழைத்துச் செல்வதைப் போல் இருக்கும். உடலில் அப்படியொரு துள்ளல். உற்சாகமே பிறப்பு எடுத்து வந்தது மாதிரி. நினைத்துக்கொண்டே இருக்கலாம்.

‘என்னடி மொகம் அது? அனுமாருக்கு வெண்ணெய்க் காப்புப் போட்டாப்ல. கொஞ்சமாச்சும் அசையுதா பாரேன்’ என்பாள் உமா. ‘பொறாமைடி பொறாமை. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனாத்தான் நடிப்பா? அந்தக் கண்களில் ஒரு சோகம் காட்டுவாரே அது போதாதா?’ என்பாள். ‘ஏன்டி, நிஜமாலுமே அர்விந்த் சுவாமியைக் கலியாணம் பண்ணிக்க முடியுமாடி? எதுனாலும் ஒரு அளவோட இருக்கணும். கனவு கண்டு வாழ்க்கையை அழிச்சுக்காத’ என அவளுக்கு அறிவுரை சொல்லாதவர்கள் இல்லை.  ‘அவருக்குக் கலியாணம் ஆயிருச்சு, சரி. அவர் மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைச்சா பண்ணிக்கலாம்’ என்பாள். அவரது படங்கள், செய்திகள் எல்லாவற்றையும் கொண்ட பெரிய ஆல்பம் ஒன்றைத் தயாரித்திருந்தாள். அதை ஒருமுறையாவது எடுத்துப் பார்ப்பதும் அதில் புதியவற்றைச் சேர்ப்பதும் தினசரி கடமை ஆனது. ‘மறுபடியும்’ படத்தின் ஒரு புகைப்படம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. உட்கார்ந்த கோணத்திலான புகைப்படம். அதற்கு நிகரான ஒரு புகைப்படம் இல்லை.
அரவிந்த் சாமி

பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்ப நடந்தாள். நடந்துசெல்லும் தொலைவில்தான் வீடு. வங்கிக் கடனில் வாங்கிய வீடு. நான்கு கல் தூரத்தில் இருந்த சிறுநகரத்துக்குப் போனால் அந்தப் பத்திரிகையை வாங்கலாம். வீட்டுக்குப் போகலாமா, பேருந்து பிடித்து நகரத்துக்குப் போகலாமா என ஊசலாட்டமாக இருந்தது. இப்போதைய அந்த முகத்தைப் பார்க்கலாமா… வேண்டாமா? முதுமையின் சாயல் படிந்த முகமும் உருவமும் என்ன தரப் போகின்றன? எல்லாரும் சொல்வதுபோல இருக்காது. இன்னும் அந்த வசீகரம் வற்றியிருக்காது. அது ஜீவன் ஊற்று. அவளால் ஒன்றும் தீர்மானிக்க முடியவில்லை. அந்த முகத்தைப் பார்க்கும் ஆவலையும் கட்டுப்படுத்த இயலவில்லை. அது சாதாரண முகம் அல்ல. அவள் மேற்கொண்டு படிக்கவும் உற்சாகமாக முன்னேறவும் ஊக்கம் கொடுத்த முகம். அவளைக் கைப்பிடித்து வழிகாட்டிச் சென்ற முகம்.

அவளுடைய தங்கைகள் பள்ளிப் படிப்போடு நின்றுவிட்டார்கள். முதல் பெண்ணை விட்டுவிட்டு அடுத்த பெண்களுக்குத் திருமணம் செய்வதைப் பற்றி தயக்கம் இருந்தாலும், சரஸ்வதி தன் படிப்பைக் காரணம்காட்டி தப்பித்துக்கொண்டாள். தங்கைகளுக்கு அடுத்தடுத்து கல்யாணம் ஆயிற்று. இரண்டு தங்கைகளுக்குத் திருமணம் ஆன பின் அவள் ஆசிரியை ஆனாள். அரசு வேலை. கை நிறையச் சம்பளம். அடுத்த தங்கையின் திருமணத்தை அவளே முன்னின்று நடத்தினாள். அப்போது மற்ற தங்கைகளும் மனநிறைவு கொள்ளும்வகையில் எல்லாம் செய்தாள். தம்பிக்கு மணம் ஆகும் முன் அவளுக்குச் செய்துவிட வேண்டும் என பெற்றோர் எங்கெங்கிருந்தோ மாப்பிள்ளை கொண்டுவந்தார்கள். அவளும் எல்லார் புகைப்படங்களையும் பார்க்கத்தான் செய்தாள். அர்விந்த் சுவாமி சாயல்படிந்த ஒரு முகம்கூட இல்லை. எல்லா முகங்களும் சப்புளிந்து ஒடுக்கு விழுந்தவை. இல்லையேல் குதிரை முகமாக நீண்டவை. முக அமைப்பே பொருந்தாதபோது நிறத்தைப் பற்றி என்ன கவலை? உதடு பிதுக்கலில் எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டாள். ‘படிக்கவெச்சிருக்கக் கூடாது இவளை… படிச்ச திமிர். எல்லாத்தையும் எடுத்தெறியுது’ என அம்மாவே பேசினாள்.

ஊரில் இருந்து வெகுதூரத்தில் பணியிடம். உடன் இருக்க அம்மா வந்தாள். அப்பனுக்கு ஊரைவிட முடியவில்லை. வெள்ளாட்டின் பின் திரிய விதித்திருப்பதற்கு அவள் என்ன செய்வாள்? இனி அவள் திருமணம் செய்துகொள்ள மாட்டாள் என ஒருவழியாக முடிவு எடுத்து எல்லாரும் நிம்மதியானார்கள். எந்தத் தேவை என்றாலும் அவளைத் தேடி ஓடி வருவார்கள். ஒருபோதும் அவள் ‘இல்லை’ எனச் சொன்னது இல்லை. அவரால்தான் எல்லாருக்கும் உதவ முடிகிறது என நினைப்பாள். இப்போதும் அவளுக்கு எல்லா இடத்திலும் இரண்டு இருக்கைகள் தேவைப்பட்டன. பணியிடத்தில் அது கொஞ்சம் கஷ்டம். வீட்டில் எல்லாம் இரண்டு இரண்டுதான். உணவு மேஜையில் இரண்டு தட்டுக்களை வைத்துப் பரிமாறி உண்பதில் விருப்பம். அம்மா இல்லாதபோது அது நிறைவேறும். இருக்கும்போது கொஞ்சம் ஏமாற்றி இரண்டாவது தட்டையும் வைத்துவிடுவாள். ‘ஒருத்திக்கு எதுக்கு ரெண்டு வட்டலு?’ என அம்மா முணுமுணுப்பாள். அம்மாவின் நச்சரிப்பு மட்டும் மழைச் சிணுங்கல்போல இன்னும் தொடர்கிறது. அங்கே இருக்கிறது மாப்பிள்ளை, இங்கே இருக்கிறது மாப்பிள்ளை எனச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறாள்.

வீட்டுக்குள் நுழைந்ததும் முகத்தைக் கழுவிக்கொண்டு கண்ணாடி முன்னால் சென்று நின்றாள். கறுப்பு போகவில்லை என்றாலும் கொஞ்சம் மாநிறம் வந்து சேர்ந்திருக்கிறது. ஆசிரியர் வேலையாகிய நிழலால் இது அமைந்திருக்கலாம். முகத்தில் லேசான ஒரு வாடல் தவிர, வயதாகிவிட்ட பதிவு ஏதும் இல்லை. தன் வயதுப் பெண்கள் திருமணம் செய்து பிள்ளைபெற்று இப்போது நடக்க முடியாமல் உடம்பைத் தூக்கிச் சுமப்பதுபோல இல்லை. முகத்தையும் இடுப்பையும் பார்த்தால் இப்போதும் கிள்ளி மை வைத்துக்கொள்ளத்தான் தோன்றும். ஒன்றும் கெட்டுப்போகவில்லை. அம்மாவிடம் சொன்னால் மாப்பிள்ளை பார்த்துவிடுவாள்.

அர்விந்த் சுவாமிக்கு வழுக்கை விழுந்துவிட்டதாம். தொப்பை பெருத்துவிட்டதாம். முகத்தில் சதை பிதுங்கிச் சுருக்கங்களும் கூடியிருக்கலாம். தலைமயிரும் படிந்த மீசையும் அடங்கிய புருவமும்கூட நரைத்திருக்கலாம். நரைக்கு மை தடவியிருப்பாரோ, அந்த முகம் இன்னும் தேவைப்படுகிறதா, அதனால் இனியென்ன பலன் இருக்கும்? கனவுக்காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போது அருகில் இருப்பதாகக் கற்பனை செய்ய ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. சிலசமயம் முகம் நினைவில் இருந்து அகன்று போய்விடுகிறது. இனி அப்படித்தான் என்றால் என்ன பயன்? மிச்சக் காலம்? அம்மா சொல்கிறாளே… ‘என் காலத்துக்கு அப்பறம் உனக்கு யாருடி துணை, தனியாவே காலத்துக்கும் ஒரு பொம்பளை இருந்திட முடியுமா? தம்பி தங்கச்சி எல்லாரும் பாசமா வருவாங்க போவாங்க. அள்ளிக்கொடுக்கிறது நின்னு போயிருச்சுனா யாரும் வர மாட்டாங்க… பாத்துக்க.’

பத்திரிகையில் அந்தப் படத்தைப் பார்த்தால் என்ன தோன்றும்? தனக்குள் இருக்கும் முகம் குலைந்து சிதறலாம். புன்னகை இறுகலாம். பொலிவில் தூசிப்படலம். அப்படித்தான் நேர வேண்டும். அதுதான் இப்போதைய தேவையும்கூட. ஒருவழியாக அதை வாரிக்கொட்டிவிட்டுப் புதுமுகம் ஒன்றை உண்மையாகவே குடியேற்றலாம். வெறும் படுக்கையில் இடம் ஒதுக்கியது போய், தொட்டால் உடலை உணர வாய்க்கலாம். குருவிக் கூட்டுக்குள் ஒடுங்குவதைப்போல பாதுகாப்போடு இருக்க, முதலில் அந்த முகத்தைச் சிதைக்க வேண்டும். பத்திரிகைப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் சிதைந்துபோகும். சோகம் போக்க ஓரிரு நாள் ஆகலாம். துக்கம் கொண்டாடத் தயாரானாள். அவளுடைய நடையில் வேகம் கூடியது.

பேருந்து நிறுத்தத்தை அடையும் முன் வழியில் ஆறாம் வகுப்பு சுகிதாவைப் பார்த்தாள். ‘அய்யோ… டியூசனை மறந்துவிட்டோமே’ என இருந்தது.  ”டீச்சர் இன்னைக்கு டூசன் இல்லையா டீச்சர்?” என்றாள் சுகிதா.  ”இருக்கு. நீ போய் வீட்டுல உட்கார்ந்து எழுதிக்கிட்டிரு. டீச்சர் கடைக்குப் போயிட்டு வந்திர்றன்” என்றாள் சரஸ்வதி. ”எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு அண்ணன் ஏழாப்புப் படிக்கறாங்க. அவங்களுக்கும் பணம் வாங்காம சொல்லிக் குடுப்பீங்களானு கேட்டுட்டு வரச் சொன்னாங்க டீச்சர்” என்றாள் சுகிதா.

ஒரு கணம் என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றாள் சரஸ்வதி. உடனே ”வரச் சொல்லும்மா. யாரு வேண்ணாலும் வரலாம், டீச்சர் பணம் வாங்க மாட்டாங்கனு சொல்லு, சரியா?” என்று சொல்லிக்கொண்டே சுகிதாவின் முகத்தைப் பார்த்தாள். மாசு மருவற்ற உருண்டை முகம். அழிவற்ற கருமுகம். கைகளைச் சேர்த்து இரு கன்னத்திலும் வைத்து அப்படியே அள்ளி நெட்டி முறித்தாள். அருகில் இருக்கும் முகம்.  வழிகாட்ட வந்து சேர்ந்த முகம். உள்ளத்தில் எழுதிய முகம். அதன் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டுப் பக்கம் நடந்தாள் சரஸ்வதி!

– பெருமாள் முருகன்,

ஓவியங்கள்: சிவகுமார்

(22.10.2014 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More