அமெரிக்காவில் வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியான அப்ரஹாம் லிங்கனின் (Abraham Lincoln) மெழுகு உருவச்சிலை உருகியுள்ளது.
வாஷிங்டன் DC நகரில் அமைக்கப்பட்டிருந்த 6 அடி மெழுகுச் சிலையே இவ்வாறு கடந்த வார இறுதியில் உருகியதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
அப்ரஹாம் லிங்கன் நாற்காலியின் இரு பக்கங்களிலும் கைகளை வைத்தவாறு அமர்ந்திருப்பதைப் போல் அந்த சிலை அமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்த விரும்புவோர் குறித்த சிலையில் இருக்கும் மெழுகுவர்த்தியை ஏற்றமுடியும். ஓரிரு நிமிடங்களில் அதனை அணைத்துவிடும்படி கோரிக்கை விடுக்கும் பதாகையும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடும் வெப்பம் காரணமாக முதலில் தலைப் பகுதி கலைந்தது. பின்னர் கால் பகுதி உருகி ஊற்றியது, நாற்காலி கீழே சாய்ந்தது.
எனினும், சிதைந்த சிலையைச் சீர்செய்யும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன. குறித்த மெழுகுத் தலை மீண்டும் இந்த வாரம் பொருத்தப்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்காவில் வெப்ப நிலை மேலும் சில வாரங்கள் நீடிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.