புதிய வரி உயர்வை எதிர்த்து கென்யாவில் மக்கள் போராடி வருகின்ற நிலையில், போராட்டத்தை தடுக்க அந்த நாட்டு அரசு எடுத்த நடவடிக்கையில் இதுவரை 39 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கென்யா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், மக்கள் போராட்டம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்ட எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 18ம் திகதி முதல் இது வரையிலான போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 32 பேர் மாயமாகி உள்ளதாகவும், 620-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
வரி உயர்வை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்களில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் வரி உயர்வு சார்ந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 25ம் திகதி அன்று அங்கு போராட்டம் வன்முறையாக மாறியது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். அதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலமையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 30ம் திகதியன்று போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்ததுடன், முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த சூழலில் அவர் பதவி விலக வேண்டும் என சமூக வலைதளத்தில் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.