இங்கிலாந்தில் இன்று (04) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறை இங்கிலாந்து மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, 1945க்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் ஜூலை பொதுத் தேர்தலில் மில்லியன் கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
உள்ளூர் பாடசாலைகள் மற்றும் சமுதாய கூடங்கள் போன்ற கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில், இன்று வியாழக்கிழமை (04) காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்கெடுப்புகள் இடம்பெறவுள்ளது.
650 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க சுமார் 46 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஒவ்வொரு பகுதி அல்லது தொகுதிக்கான முடிவுகள் இரவு முழுவதும் மற்றும் வெள்ளிக்கிழமை காலை வரை அறிவிக்கப்படும்.
பெரும்பான்மையான ஆட்சியை அமைக்க அரசியல் கட்சிகள் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை, அதாவது 326 இடங்களை கைப்பற்ற வேண்டும்.
இதேவேளை, இந்தத் தேர்தலில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 6 பேர் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில், ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான தமது அணுகுமுறை மற்றும் போர்க்குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்வதில் தாம் கொண்டிருக்கும் கடப்பாடு என்பன குறித்த கருத்துகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.