வியட்நாமில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கு விசித்திரமான நிபர்ந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளமை, அந்நாட்டு கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, வியட்நாம் ஹானோய் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தின் தகுதி நிபந்தனைகளில் ஒன்று மாணவர்களுக்கு நல்ல உயரம் இருக்க வேண்டும் என்பதாகும்.
பெண்கள் குறைந்தது 1.58 மீட்டர் உயரமும் ஆண்களின் உயரம் குறைந்தது 1.65 மீட்டராக இருக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கு நல்ல கண் பார்வை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தேசிய வியட்நாம் பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் நிர்வாகப் பள்ளி விதித்த இந்த நிபந்தனையால் சர்ச்சை மூண்டுள்ளது.
எதிர்காலத் தலைவர்களுக்கு நல்ல தோற்றமும் ஆரோக்கியமும் இருப்பது முக்கியம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் நம்புவதாக VnExpress செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், ஒருவரின் ஆற்றலுக்குச் சம்பந்தமில்லாத காரணத்தை வைத்து மாணவர்களை நிராகரிக்கக்கூடாது என்று வியட்நாமின் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து, நிர்வாகம் மற்றும் பாதுகாப்புத் துறையில் படிக்க விரும்புவோருக்கு மட்டுமே குறிப்பிட்ட உயரம் தேவைப்படும் என்று தற்போது பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.