அரசியல் போட்டித்தன்மையைக் குறைத்து, அமெரிக்கர்கள் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் வைத்துச் செயல்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக்கொண்டார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்பைப் படுகொலை செய்ய மேற்கொண்ட முயற்சி குறித்து பைடன் கருத்துரைத்தார். நல்ல வேளையாக டிரம்புக்கு மோசமான காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அந்தப் படுகொலை முயற்சி இடம்பெற்றிருக்கிறது. அனைவரும் அன்றாட அரசியல் நிலவரத்திலிருந்து சற்று விலக வேண்டும். இத்தகைய வன்முறை வழக்கமான ஒன்றாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
அரசியல் என்றுமே உயிரைப் பறிக்கும் களமாக மாறிவிடக் கூடாது. அமெரிக்கர்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுவதைவிட வேறு எதுவும் முக்கியம் இல்லை. டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது என்று கேட்டுக்கொண்ட பைடன், டிரம்ப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.