“காய்ந்த முகத்தோடு கஞ்சியில்லாமல் வந்து நின்றானே! தூரத்து உறவினன் என்ற ஒன்றைத் தவிர வேறு என்ன இருந்தது அவன்மேல் நான் கருணை கொள்ள! அன்போடு அரவணைத்து ஆடு மேய்க்க வைத்துக் கஞ்சி ஊற்றிக் காத்து வந்தேனே! இந்த இருபது வருடங்களாக அவனை என் பிள்ளையைப் போல்தான் நான் பாவித்து வருகிறேன். என்மகள் அவன்மேல் பிரியம் வைத்திருந்தாள் என்பதை அறிந்து அந்தஸ்து பார்க்காமல் கூட அவளை அவனுக்குக் கட்டி வைத்தது எவ்வளவு பெரிய தவறாகப் போய்விட்டது!” என்று மனம் வெதும்பி அழுது கொண்டே சிந்தித்துக் கொண்டிருந்தார் தருமர்.
அவனது பெயர் முருகன். தகப்பனை இழந்திருந்த அவனை இருபது வருடங்களுக்கு முன்பு அவனது தாயார் தருமரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றாள். அப்போது அவனுக்கு வயது பதினைந்து. இரண்டு வருடங்கள் கழித்து அவனது தாயும் இறந்து விட்டாள். முருகன் தருமரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அங்கேயே இருந்து விட்டான். ஆடு மேய்க்கும் தொழிலை வெகு சிரத்தையாகச் செய்து வந்தான். நல்ல பழக்க வழக்கங்களுடன் ஒழுக்கமான பையனாக வளர்ந்து வந்தான். ஆடு மேய்ப்பதுடன் விவசாய வேலைகளிலும் தருமருக்கு உதவியாக இருந்தான். தருமருக்கு இரண்டு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையும் இருந்தனர். குடும்பத்தில் இருந்த அனைவருமே முருகனைத் தங்களில் ஒருவனாகவே ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பத்து வருடங்களுக்கு முன்பு தருமரின் மகள் பாண்டியம்மாள் முருகனை விரும்ப ஆரம்பித்தாள். முருகனுக்கும் ஆசை இருந்தது. தனது ஏழ்மை நிலையை உணர்ந்து அவன் வாளாதிருந்தான்.
“என்னாதான் நல்லவனா இருந்தாலும் வெறும் பயலா இருக்கானே! இவனுக்கெப்பிடி நம்ம பிள்ளையக் குடுக்குறது?” என்று தருமரின் மனைவி அபிப்ராயப் பட்டாள்.
“சொத்து சொகம் இன்னக்கி இருக்கும் நாளைக்கு பூயிரும். ஆனா கொணம் காலத்துக்கும் கூடவரும். அது அவங்கிட்ட இருக்கு. அவன் நம்ம பிள்ளய கடசிவரைக்கும் வச்சுக் காப்பாத்துவான். பயப்படாத” என்று தருமர் தைரியம் சொன்னார். ஒருவழியாகத் திருமணமும் நடந்து முடிந்தது. ஆடுகளை நம்பிக் கொண்டிருந்தால் குடும்பம் நடத்த முடியாது என்று எண்ணி மதுரையிலுள்ள ஒரு பெரிய லாரிக் கம்பெனியில் தெரிந்தவர் ஒருவர் மூலமாக முருகனை லோடு மேனாக வேலைக்குச் சேர்த்து விட்டார் தருமர். அதற்கும்கூட சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்திற்கு ஒரு லட்ச ரூபாய் கட்ட வேண்டியிருந்தது. தருமர் தன் மகளுக்குப் போட்ட நகையில் ஒரு பகுதியை விற்றுத்தான் அந்தத் தொகையைக் கட்டினார். செல்லூர் பகுதியில் இருபதாயிரம் ரூபாய் முன்பணத்துடன் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பிடித்து அதில் மகளையும் மருமகனையும் குடிவைத்தார்.
இளந்தம்பதியருக்கு வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்தது. ஒரு பெண் குழந்தையையும் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தனர். முருகனின் நடவடிக்கைககள் வித்தியாசப் படுவதாக பாண்டியம்மாள் ஒரு கட்டத்தில் உணர்ந்தாள். பெண் சவகாசம் எதுவும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அவ்வப்போது குடித்துவிட்டு வேறு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் முருகன். அன்றாட சம்பாத்தியத்தை அப்படியே வீட்டில் கொடுத்துக் கொண்டு வந்த முருகன் கொஞ்ச நாட்களாக வருமானத்தை ஒளிக்க ஆரம்பித்திருந்தான். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. சில வேளைகளில் பாண்டியம்மாளை முருகன் அடிக்கவும் செய்தான். இந்த விபரங்கள் தருமருக்கும் தெரியும். அவரால் முடிந்தவரை இருவருக்கும் புத்திமதி சொல்லிக் கொண்டுதான் இருந்தார்.
இந்நிலையில் திடீரென ஒருநாள் பாண்டியம்மாள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். செய்தியறிந்து கண்ணீரும் கம்பலையுமாக தருமர் குடும்பத்துடன் செல்லூர் வந்து சேர்ந்தார். வழக்கமாக ஏற்படும் கணவன் மனைவி சண்டையில் பாண்டியம்மாளை முருகன் அடித்திருக்கிறான் என்றும், அகஸ்மாத்தாக படாத இடத்தில் அடிபட்டு அவள் இறந்து விட்டாள் என்றும், அதை மறைக்க அவளைத் தூக்கில் தொங்கவிட்டு முருகன் நாடகமாடுகிறான் என்றும் தெருவில் பேசிக் கொண்டார்கள். அந்தப் பேச்சு தருமர் காதையும் எட்டியது. அவரால் மகள் இறந்த துக்கத்தையும் முருகன் மீது ஏற்பட்ட கோபத்தையும் தாங்க முடியவில்லை. அன்பாக வளர்த்த அருமை மகளைப் பிணமாக அவரால் பார்க்க முடியவில்லை. அதற்குக் காரணமான முருகனை அங்கேயே அப்போதே கொன்றுவிட வேண்டும்போல் தோன்றியது.
காவல் துறையினர் வந்து விசாரணை செய்து கொண்டிருந்தனர்.
“அய்யா! முருகன்தான் என் மகளைக் கொன்றவன். குடிக்கக் கஞ்சி இல்லாம என் வீட்டுக்கு வந்தான். அவன ஒரு பிள்ளையா நெனச்சு நான் வளத்தேன். வளத்த கெடா மார்புல பாஞ்சிறுச்சு. அவன சும்மா விடப்படாது. தூக்குல தொங்கவிடணுமையா” என்று காவலரிடம் கெஞ்சி அழவேண்டுமென அவரது மனம் துடித்தது.
“பொணத்த போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பணும். இந்தப் பிள்ளையோட அப்பா யாரு?” என்று காவலர் கேட்டார். உடனே தருமர் முன்வந்து நின்றார்.
“சொல்லுங்க அய்யா! ஒங்க மக சாவுல சந்தேகம் ஏதும் இருக்கா? யார் மேலயாவது புகார் சொல்லணுமா?” என்று காவலர் கேட்க
“அய்யா..” என்ற தருமர், எதுவும் பேச முடியாமல் ஓ.. வென்று அழத் தொடங்கி விட்டார். அவரது அழுகை அடங்க வெகு நேரமானது. பின்பு கண்ணீரைத் தன் தோள் துண்டால் துடைத்துக் கொண்டு தெளிவாகப் பேச ஆரம்பித்தார்.
“எல்லாம் என் விதி அய்யா!
மகளை இழந்து துக்கப்படணும்னு என் தலையில எழுதி இருக்கு. இதுல நான் யாரக் குத்தஞ் சொல்றது! மருமகன் என் மகன் மாதிரி, ரெம்ப நல்லவரு. அவர் தனி ஆளா நின்னு இந்த ரெண்டு பிள்ளைகளையும் எப்பிடி வளக்கப் போறார்னு தெரியல. யாரு மேலயும் எனக்கு எந்தப் பெராதும் இல்ல அய்யா” என்று முடித்தார்.
ஆனால் போலீஸ் அதனால் திருப்தி அடையவில்லை. பிணத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு முருகன் மேல் வழக்குப் பதிவு செய்யப் போவதாகச் சொன்னார்கள். அந்தப் பகுதியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் மூலமாக போலீசுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார் தருமர். வழக்கு வம்பு இனிமேல் வராது; பிரேதப் பரிசோதனையில் எதுவந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று காவல் துறையினர் சொல்லிச் சென்று விட்டனர்.
பிரேதப் பரிசோதனை முடிந்து பாண்டியம்மாள் உடலை தத்தநேரி சுடுகாட்டில் தகனம் செய்துவிட்டு ஊர் திரும்பி விட்டனர் தருமர் குடும்பத்தினர். முருகனைத் தான் மன்னித்தது அவருக்கே புரியாத புதிராக இருந்தது. அவனது தீய பழக்க வழக்கங்களுக்கு தன் மகள் அல்லவா பலியாகி விட்டாள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் தருமர். கொலை செய்ய வேண்டுமென்ற உள்நோக்கம் முருகனுக்கு இல்லை என்பது உண்மைதான். பாண்டியம்மாளின் மரணம் ஒருவகையான விபத்துதான். அதை மறைக்க முற்பட்டது முருகனின் குற்றம்தான். அதற்காக அவனைத் தண்டிக்க வேண்டுமா? அவனும் தனக்கு ஒரு மகன்தானே! மகளைத்தான் இழந்து விட்டோம். மகனையும் இழக்க வேண்டுமா? அவனைச் சிறைக்கு அனுப்பி விட்டால் பாண்டியம்மாளின் குழந்தைகள் அனாதைகளாகிவிட மாட்டார்களா? இப்படியும் யோசித்துக் கொண்டிருந்தார் அன்று இரவு முழுவதும் . அவர் அசந்து தூங்குவதற்கு அதிகாலை ஆகிவிட்டது.
அதிகாலை சுமார் ஐந்து அளவில் அவரது அலைபேசி அலறியது. அழைத்தவர் பாண்டியம்மாள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்.
“ஹலோ! தருமருங்களா?”
“ஆமா, சொல்லுங்க”
“ஒரு வருத்தமான செய்தி! உங்க மருமகன் மருந்தக் குடிச்சு எறந்துட்டாரு”
– மனோந்திரா
நன்றி : கீற்று இணையம்