உலக அளவில் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகியுள்ளார்.
இதனையடுத்து, அமெரிக்க மக்களின் நலனை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட கடினமான முடிவு இது என்று தாம் நம்புவதாக இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜோ பைடனுக்கு உலகத் தலைவர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர். பைடன், அதிக மரியாதைக்குரியவர் என்று கூறிய பல தலைவர்கள், அவரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பைடனின் சாதனைகளைப் புகழ்ந்தார். போட்டியிலிருந்து விலக அவர் எடுத்திருக்கும் முடிவும் பாராட்டத்தக்கது என்று ஷோல்ஸ் கூறினார்.
கனடாவின் உண்மையான தோழனாக இருந்ததற்காக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ பைடனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அதேபோல, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, தமது நாட்டிற்கு ஆதரவு அளிக்க தைரியமான நடவடிக்கைகளை எடுத்த பைடனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
மேலும், ஜனநாயகக் கொள்கைகள் மீது பைடன் கொண்டுள்ள கடப்பாட்டை ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி பாராட்டினார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெற சுமார் 4 மாதங்களே உள்ள நிலையில், இந்தக் காலக்கட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் நிலைமையை தாம் கண்காணித்து வருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.