இங்கிலாந்தின் Brantham, Suffolk பகுதியில் நாயுடன் நடைப்பயிற்சி சென்ற போது மர்மநபரால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அனிடா ரோஸ் (Anita Rose) எனும் 57 வயதுடைய குறித்த பெண், கடந்த புதன்கிழமை தான் நடைப்பயிற்சி சென்ற வீதியில் பலத்த காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, அம்பூலன்ஸ் துணையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி Addenbrooke’s வைத்தியசாலையில் நேற்று (28) இவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஏற்கெனவே கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 45 வயது ஆண் ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், அனிடா ரோஸின் உடைமைகளைக் கையாண்ட சந்தேகத்தின் பேரில் 37 வயதுப் பெண் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக சஃபோல்க் பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன ரோஸின் அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளதாகவும் ரோஸ் அணிந்திருந்த ஒரு இளஞ்சிவப்பு ஜாக்கெட் இன்னும் மீட்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் Martlesham Heath விசாரணை மையத்தில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.