சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி திருகோணமலையில் இன்று (30) வெள்ளிக்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.
திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில்
கிழக்கின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்களிலும் ஏனைய மார்க்கங்களிலும் வந்து சேர்ந்து திருமலை கடற்கரையில் ஒன்றுகூடி மூன்று மாவட்ட தலைவிகளின் தலைமையில் போராட்டத்தை நடத்தினர்.
அதனைத் தடுக்கப் பொலிஸார் பலத்த முயற்சி எடுத்தனர். அப்போது அங்கே வாய்ப் போராட்டம் இடம்பெற்றது. அதன்போது ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக திருகோணமலை கடற்கரையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள். அதன்பின்னர் மேற்படி இளைஞர் விடுதலை செய்யப்பட்டார்.
இருந்த போதிலும் பொலிஸாரின் தலையீடு கூடுதலாக இருந்த காரணத்தால் ஆண்கள் சிலர் துன்புறுத்தப்பட்டார்கள்.
போராட்டத்தில் கலந்துகொண்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் நேரடியாக திருகோணமலையிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தமக்குப் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்தனர் என்று முறைப்பாடு செய்தனர்.
இறுதியாக அவர்கள் திருகோணமலை குரு முதல்வர் அருட்பணி றொபின்சனிடம் மகஜரைச் சமர்ப்பித்தனர்.