முட்டை என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் முட்டையில் குழம்பு செய்தால் சாதம் அதிகமாக சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு முட்டை குழம்பானது டேஸ்டாக இருக்கும். ஒவ்வொருவரும் முட்டை குழம்பினை பல ஸ்டைலில் செய்வார்கள். வேக வைத்த முட்டையில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளது. நாம் டேஸ்டியான முறையில் முட்டை குழம்பு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இன்றைக்கே இந்த முட்டை குழம்பை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க..
முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 3
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
பட்டை – 1/2
கறிவேப்பிலை – சிறிதளவு
கிராம்பு – 1
அரைக்க தேவையான பொருள்:
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2
பூண்டு – 4-5 பற்கள்
இஞ்சி – 1/2
மல்லி – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி
முட்டை குழம்பு வைப்பது எப்படி – செய்முறை விளக்கம்:
கிராமத்து ஸ்டைலில் சுவையான முட்டை குழம்பு செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை வேக வைப்பதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, முட்டைகளைப் போட்டு வேக வைத்து முட்டையின் மேல் இருக்கும் ஓடுகளை உடைக்க வேண்டும்.
பிறகு முட்டையை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைக்கவும்.
இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். வாணலியில் மேல் அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் லேசாக வறுத்து எடுத்துவிட்டு, மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் இன்னொரு வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதனுடன் பட்டை, கறிவேப்பிலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
தாளித்த பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறத்திற்கு வதக்கவும்.
வதக்கிய பிறகு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 3-4 நிமிடம் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
பின் அதில் 1/2 -1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் கரம் மசாலா மற்றும் வேக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் சூப்பரான சுவையான கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு தயார்.. இப்போது சாதத்தில் சுட சுட முட்டை குழம்பை ஊற்றி பரிமாறலாம்.