செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சஜித், அநுர வந்தால் மீண்டும் அழிவுதான்! – ரணில் எச்சரிக்கை

சஜித், அநுர வந்தால் மீண்டும் அழிவுதான்! – ரணில் எச்சரிக்கை

2 minutes read
செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்தத் திட்டமும் இல்லை எனவும், அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீர்குலைந்தால் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் எவராலும் நம்பிக்கை வைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

“நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும்போது திருக்கோவில் பகுதியையும் பலப்படுத்துவோம்.

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்த வேளையிலேயே நாட்டை ஏற்றேன். 2022 ஆம் ஆண்டு அத்தியாவசியப்  பொருட்கள் ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை. மின்சாரமும் இருக்கவில்லை. கஷ்டங்களுடன் வாழ்ந்தோம். பெண்கள் அதனை மறந்திருக்க வாய்ப்பில்லை. அன்று இப்போதிருக்கும் முன்னேற்றம் கிட்டும் என்று நினைக்கவில்லை.

அநுரவும் சஜித்தும் அன்று இருக்கவில்லை. ஆனால், நான் ஏற்றதால் நாட்டில் தட்டுப்பாடுகள் நீங்கி நல்ல நிலைமை காணப்படுகின்றது. அதனால் மக்கள் சுமுகமாக வாழ முடிந்துள்ளது.  அன்று பொருட்களின் விலை அதிகரித்துக்  காணப்பட்டது. ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்திருந்தது.

இன்றும் மக்கள் வாழ்க்கை சுமைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். இருப்பினும் எனது முயற்சிகள் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்கச் செய்தமையால் ஓரளவு சுமுகமான நிலைமை வந்திருக்கின்றது. பொருட்களின் விலையும் குறைந்திருக்கின்றது.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே மக்கள் மீது சில சுமைகளை சுமத்த வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் எமது கடன் சுமை அதிகரித்தால் நாட்டின் நெருக்கடி மேலும் உக்கிரமடையுமென அறிவுறுத்தியது. நான் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீத கடனை மட்டும் பெறுவதற்கு மாத்திரம் அனுமதி கிடைத்தது. இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே முன்னேற்றங்களை ஏற்படுத்தினோம். அதற்காகவே மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம்.

அடுத்த ஐந்து வருடங்களில் சுமையை மேலும் குறைக்க எதிர்பார்க்கின்றோம். பொருட்களைக் கொள்வனவு செய்யவும் வாய்ப்பளிப்போம். இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்திருக்கின்றோம். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை இங்கும் முன்னெடுக்கலாம்.

திருக்கோவில் பகுதியிலும் விவசாய அபிவிருத்திக்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இங்குள்ள கடல் வளத்தினாலும் பயனடைய முடியும். மீன்பிடித் தொழில், சுற்றுலாத்துறை, கனிய வள வர்த்தகத்தைப் பலப்படுத்த எதிர்பார்க்கின்றோம். விவசாயத்தை நவீனமயப்படுத்தி உலக உணவு உற்பத்தியில் பங்கெடுப்போம். திருகோணமலையில் பாரிய முதலீட்டு வலயத்தை உருவாக்குவோம். நாட்டின் அபிவிருத்தியை விரிவுபடுத்துவோம்.

மாகாண சபையை செயற்படுத்தி இப்பகுதி மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும். இன்றைய சிறுவர்களுக்கு 25 வயதாகும்போது அவர்கள் முன்னேற்றமடைந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

சஜித்தினாலும், அநுரவினாலும் அதனைச் செய்ய முடியாது. வாய் பேச்சினால் எவர் வேண்டுமானாலும் சாதிக்கலாம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியாது. எனவே, பொருளாதார வீழ்ச்சியை விரும்பாதவர்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, திருக்கோவிலுக்கு அபிவிருத்தியும் கிட்டாது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More