அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ ப்ரீஸ்ட் டிரைவ் அருகே கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடந்த போது அலுவலகத்திற்குள் யாரும் இல்லை. சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடந்தது எனத் தெரியவந்தது.
அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அதேசமயம், இதுவரை துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்படவில்லை.
சமீபத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பை பிரசார கூட்டத்தில் ஒருமுறையும், கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு முறையும் என இரு தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்ல முயற்சி நடந்தமை குறிப்பிடத்தக்கது.