உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் அவர்களுக்கென்று ஒரு தினமும் வகுக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. அதுதான் சர்வதேச சிறுவர் தினமாகிய ஒக்டோபர் 1 ஆம் திகதியாகும்.
அந்தவகையில் 1954ஆம் ஆண்டில் சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை ஐ.நா வலியுறுத்தியது. 18வயதிற்குக் குறைந்த சகலரும் சிறுவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991ம் ஆண்டு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.
உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்றிலொரு பகுதியினர் சிறுவர்களாக காணப்படுகின்றனர் எனக் கூறப்படுகின்றது. சிறுவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்க்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டங்களின் பங்கினை மறுப்பதற்கில்லை.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் 2008 ஜுன் மாதம் 12ம் திகதி சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறுவர்கள் ஒரு நாட்டினதும்இ ஒரு சமுதாயத்தினதும் அச்சாணி என்பது நாம் அறிந்த விடயம். ஒரு சமூகத்தினது தூண்களாகவும்இ ஒரு நாட்டினது முதுகெலும்பாகவும் செயற்பட இருப்பவர்களும் இவர்களேதான். இவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவார்களேயானால் அந்த சமூகம் அந்த நாடு தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சிறுபராயம் என்பது ஒரு இனிமையான, பெரியோர்களாகிய நாம் அனைவரும் கடந்து வந்த பருவமாகும். இதில் மகிழ்ச்சியடையாத மற்றும் தமது கடந்த கால சிறு பராயத்தினை நினைத்து இனிமையாக அசைபோடாத எவரும் இருக்கமாட்டார்கள்.
எதிர்கால உலகின் தலைவர்களாகவும் இந்த உலகை காப்பதற்கு தயாராகும் பாதுகாவலர்களாகவும் இருப்பவர்கள் சிறுவர்கள் ஆகும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து எனும் வாக்கிற்கமைய சிறுவயதிலேயே சிறுவர்கள் வாழும் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது.