செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழரசின் பதில் செயலாளர் உடன் பதவி விலக வேண்டும்! – சிவமோகன் வலியுறுத்து

தமிழரசின் பதில் செயலாளர் உடன் பதவி விலக வேண்டும்! – சிவமோகன் வலியுறுத்து

4 minutes read

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்தப் பதவி நாசமாக்கப்பட்டுள்ளது. கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு உடன் பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன்.

“வடக்கு மாகாண சபையில் ஊழல், மோசடி செய்ததால் அமைச்சரவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சத்தியலிங்கம் தற்போது வன்னி மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.” – என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இம்முறை தேர்தலில் தமிழரசுக் கட்சி வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது. ஆனால், இன்று சுயநலவாதிகளின் டம்மி விளையாட்டால் ஓர் ஆசனம் பெறுவதே பெரும் போராட்டமாக மாறியுள்ளது. எமது கட்சியின் தேர்தல் நியமனக் குழுவானது கடந்த 2018இல் தேர்வு செய்யப்பட்டது. அதில்  சட்டத்தரணி தவராசா, சார்ள்ஸ் நிர்மலநாதன், ஈ.சரவணபவன், நான் உட்பட நான்கு பேர் அந்தக் குழுவில் இருந்தோம். இந்தநிலையில் திடீர் என நிகழ்ச்சி நிரல் இல்லாமல் எமது நான்கு பேரின் பெயர்களையும் வெட்டிவிட்டு புதிதாக சாணக்கியன், சேயோன், ரஞ்சினி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனாலேயே இந்த மோசமான நிலை கட்சிக்கு ஏற்பட்டது.

டம்மி விளையாட்டே இது

தான் மட்டும் வன்னியில் வெல்ல வேண்டும் என்ற தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரின் டம்மி விளையாட்டே இது. எனவே, பதில் பொதுச்செயலாளருக்கு எதிராக நான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளேன். இவர்களை இப்படியே விட்டால் கட்சிக்கு இன்னும் பல கேடுகளைச் செய்வார்கள். இவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

தோல்வியடைந்தவர்களை வேட்பாளராகப் போடுவதில்லை என்று கட்சி ஒரு போதும் முடிவெடுக்கவில்லை. அப்படி ஒரு தீர்மானம் பொதுக் குழுவிலும், மத்திய குழுவிலும் இல்லை. கட்சியை வெட்டிவிட்டு ஒரு சிலர் வெல்லலாம் என்பது மிகவும் மோசமான செயல். எப்படி இந்தச் சதிவேலையைத்  திட்டமிட்டுள்ளார்கள் என்று பாருங்கள்.

மாவை இராஜிநாமா

தலைவராக இருந்தும் நியாயமான முறையில் வேட்பாளர் நியமனங்களை செய்ய முடியவில்லை என்பதாலும், நியமனக் குழுவில் இருந்த ஏனையவர்களை இணைக்க முடியாமல் போனதாலும் மாவை சேனாதிராஜா கட்சியின்  தலைவர் பதவியில் இருந்து விலகினார். நீ இங்கு வென்றால் மட்டும் காணும் நானும் யாழ்பாணத்தில் வென்றால் காணும் என்று சத்தியலிங்கமும், சுமந்திரனும் கருதுகின்றார்கள். தமிழரசுக் கட்சி அதுவல்ல. இவர்களால் இன்று ஒரு அணியே பிரிந்து சென்றுள்ளது.  ஒருவரைத் தவிர இவர்கள் போட்ட அனைத்து வேட்பாளர்களுமே டம்மிகள். இவர்களால் எப்படி வெல்ல முடியும்?

செயலாளர் பதவி தரம் தாழ்ந்தது

இன்று வன்னியில் புதிதாகப் போடப்பட்ட வேட்பாளரான ரவீந்திரகுமார் மாவட்டக் குழுவில் விண்ணப்பம் தராதவர். ஆஸ்ரேலியாவில் நிரந்தர வதிவுரிமை கொண்டவர்.

வேட்பாளராக என்னைத் தெரிவு செய்யுமாறு நான் ஒருபோதும் கோரவில்லை. எனக்குப் பதிலாக புதுக்குடியிருப்பு பிரதேச கிளையின் செயலாளரான விமலதாசையே நான் பரிந்துரை செய்தேன்.

கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி இவர்கள் செயற்பட்ட விதமானது தமிழரசுக் கட்சியை இன்று கீழ்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

பொதுச்செயலாளர் பதவி என்பது விட்டுக்கொடுப்புடன் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக இணைத்துச் செல்லும் ஒரு பதவி. தமிழரசுக் கட்சியின் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் இந்தப் பதவியினூடாக தங்களுக்குள்ளேயே விட்டுக் கொடுத்து செயற்ப்பட்டிருந்தனர். ஆனால், அந்தப் பதவி இன்று டம்மியான புல்லுருவிகளால் நாசமாக்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியல் வழங்க விடோம்

தேர்தலில் போட்டியிட வரமாட்டேன் என்று சொல்பவர்களை வாருங்கள் தேசியப்பட்டியல் தருகின்றோம் என்று அழைக்கிறார்கள். இதுவா தேர்தல் நியமனக்குழுவின் வேலை. உங்களுக்குள்ளேயே பிரித்துக்கொள்ளவா இந்தக் குழுவைப் போட்டோம். தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் நியமனக்குழுவில் இருந்து விலத்தியிருக்க வேண்டும் என்று கேட்டோம். அது நடக்கவில்லை. ஆனால், தேசியப்பட்டியல் ஆசனம் எக்காரணம் கொண்டும் தோற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது.

தோற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டால் அதனை மட்டும் எப்படி கொடுக்க முடியும்? யாழ்பாணத்தில் தான் தோற்றால் தனக்கு ஒரு தேசியப்பட்டியல் என்று அங்கு ஒருவர், இங்கால ஒருவர் அது தனக்காம் என்கிறார். கட்சி என்ன றோட்டில் விக்கிற அப்பமா நீங்கள் பிய்த்துக் கொண்டு போறதுக்கு? பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்கே தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும்.

மாகாண சபையில் ஊழல் செய்தார்

ஊழல்வாதிகளை அகற்றுவேன் என்றே அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தார்.  தமிழரசுக் கட்சி தெரிவு செய்த வன்னி வேட்பாளர் சத்தியலிங்கம் ஊழல், மோசடிக்காரர். வடக்கு மாகாண சபையில் ஊழல் என்று சொல்லி நிரூபிக்கப்பட்டு முதலமைச்சரால் இடைநிறுத்தப்பட்டவர். பின்னர் நீதிமன்றத்துக்குச் சென்று தான் நியாயவாதி என்று இன்று வரை நியாயப்படுத்த முடியாதவர். இவர்தான் ஊழல்வாதிகள். அவர் வன்னியில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

முல்லைத்தீவு  மாவட்டத்தில் போடப்பட்ட மூவரும் ஏதோ ஒரு விதத்தில் அப்படியானவர்கள். ஒருவர் தேர்தல் கேட்பதற்கே பொருத்தமில்லாதவர். இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர். அவர் நாடாளுமன்றத்துக்குச்  செல்ல முடியுமா? அடுத்தவர் விடுதலைப்புலிகள் காலத்தில் ஊழல், மோசடிக்காக அடைத்து வைக்கப்பட்டவர். இன்னொருவர் பகிரங்கமாகவே ஊழல், மோசடியில் சிக்கியவர். இன்று அவர்கள் எல்லாம் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள். நல்லதே நடக்கட்டும். நிச்சயமாக நான் குற்றப்பத்திரிகையைத் தனித்தனியாக தாக்கல் செய்வேன்.

செயலாளரால் நீதிமன்றத்துக்குச் சென்ற கட்சி

இன்று கட்சியானது சரியான தீர்மானம் எடுக்க முடியாமல் வழக்கில் சிக்கியுள்ளது. எதனால் அது? கட்சியின் மாநாடு நடப்பதற்கு முன்னர் அல்லது பொதுக்குழு கூடுவதற்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தில்தான் பிரச்சினைகள் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி வழிநடத்துவது என்று தீர்மானிப்பது. பதவிகளில் யாரை போடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதும் அந்தக் கூட்டதிலேயே. அதுவே ஆலோசனைக் குழுவின் பணி. அந்தக் கூட்டம் வாக்கெடுப்பிற்கு முதள்நாள் திருகோணமையில் நடப்பதாக இருந்தது. நாங்க அதற்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கும்போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று  தெரிவிக்கப்பட்டது.

சத்தியலிங்கம் ஐயா நிமோனியாவாலோ கொரோனாவாலோ படுத்துக்கிடக்கின்றார் என்றார்கள். அதனால் கூட்டம் இரத்தாகியது. அந்தப்  பதில் செயலாளர் உண்மையில் சுகவீனமுற்றுத்தான் கூட்டத்துக்கு  வரவில்லை என்றால் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்? அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் விபரங்களைத் தர வேண்டும். ஊடகங்களுக்குப் பொறுப்பு உள்ளது. நீங்கள்  போய் அவரிடம் கேட்டுப் பாருங்கள். மக்களுக்கு அதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படி இல்லாதுவிடின் இது நடத்தப்பட்ட சூழ்ச்சி. அந்தச் சூழ்ச்சியினாலேயே அந்தத்  தெரிவுகள் போட்டிக்குச் சென்றது. பின்னர் நிர்மூலமாக்கப்பட்டது.

செயலாளரும, பேச்சாளரும் விலகினால்தான் விடிவு

எனவே, பதில் செயலாளர் சகல பொறுப்புக்களையும் ஏற்று கட்சியை  உருக்குலைத்ததையும் ஏற்றுக்கொண்டு இராஜிநாமா செய்யவேண்டும். அடுத்தது ஊடகப் பேச்சாளராக ஒருவர் இருப்பதாக இருந்தால் கட்சி எழுதிக்கொடுப்பதை மாத்திரமே சொல்ல வேண்டும்.  தனிப்பட்ட கருத்தை அவர் சொல்ல முடியாது. ஊடகப் பேச்சாளர் அந்தத் தர்மத்தை மீறியபடியால் அவரும் நீக்கப்பட வேண்டும். நாம் பயந்தவர்கள் அல்லர். இறுதி வரை தமிழரசுக் கட்சிக்கு உள்ளே இருந்து குரல் கொடுப்போம். உயிர் இருக்கும் வரை தமிழரசுக் கட்சியோடுதான் பயணிப்பேன்.” – என்றார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More