செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழரசின் வெற்றிக்காக நாம் உழைக்க வேண்டும்!- சிறீதரன் வலியுறுத்து

தமிழரசின் வெற்றிக்காக நாம் உழைக்க வேண்டும்!- சிறீதரன் வலியுறுத்து

3 minutes read

“தற்போதைய களச்சூழலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்காக நாங்கள் உழைக்க வேண்டும்.” – என்று அக்கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகமான அறிவகத்தில் விஜயதசமி விழாவும், கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வட்டார உறுப்பினர்களுக்கான கலந்துரையாடலும் நடைபெற்றன.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சிறீதரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள். தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எங்களது முழுச் செயற்பாடுகளையும் முன்னிறுத்தி இருந்தோம்.

குறிப்பாக தமிழ் மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழ் மக்களுக்கு வடக்கு – கிழக்கு இணைந்த அரசியல் தீர்வு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள் என்பது உண்மையாகும்.

அதற்காகப் பாவிக்கப்பட்ட சங்கு சின்னத்தை வேறு சிலர் கையில் எடுத்திருப்பது என்பது முரண்பாடான ஒரு விடயமாகும். அதனை அவர்கள் அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும்.

குறிப்பாக தமிழரது ஒற்றுமை, தேசத் திரட்சி, தமிழர்களை ஒன்றுபடுத்துதல் போன்ற காரியத்துக்காக ஆற்றப்பட்ட அந்த விடயத்தில் தமது சின்னமாக அதனைக் கையில் எடுத்திருப்பது ஒரு முரணான விடயம்.

ஜனாதிபதித் தேர்தல்கள்  நடைபெறுகின்றன. பல்வேறு சின்னங்களுக்காக மக்கள் வாக்களிக்கின்றார்கள். அந்த அடிப்படையிலே நாங்களும் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு ஆதரவுகளை வழங்கி இருக்கின்றோம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் நியமனங்களில் திருப்தி இருக்கின்றதா, இல்லையா என்பதற்கு அப்பால் இப்போதைய களச்சூழலில் கட்சியினுடைய வெற்றிக்காக நாங்கள் உழைக்க வேண்டும். இதுவே எனது  நிலைப்பாடு.” – என்றார்.

மேற்படி கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More