இட்லிக்கு சட்னி செய்யும்போது புளிக்குப்பதில் தோல் சீவிய மாங்காய்த் துண்டை சேர்த்து அரைத்தால் சட்னியின் சுவை பிரமாதமாகயிருக்கும்.
காலி ஃப்ளவர், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஏலக்காய், சோம்பு, கிராம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த கலவை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். காலிஃப்ளவர் சட்னி, இட்லி, சப்பாத்திக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
தோசை மா அரைக்கும்போது கொஞ்சம் சவ்வரிசி சேர்த்து அரைத்தால், தோசை பளபளவென்று மெல்லியதாக வரும்.
1 கரண்டி நெய் அல்லது எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ச்சி, அதை பஜ்ஜி மாவோடு கலந்து பஜ்ஜி செய்தால், பஜ்ஜி வாசனையாக இருக்கும்.
ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதைத் தவிர்க்கலாம்.
மீன்களை எண்ணெயில் பொரிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். இதைத் தவிர்க்க மீன்களைப் பொரிக்கும்போது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.
மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த்தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை துலக்கினால் மீன் வாடை போய்விடும்.
ரவா தோசை தயாரிக்கும்போது இரவே ரவையை தண்ணீரில் கரைத்து வைக்கவும். மறுநாள் காலை வார்ப்பதற்குமுன் இரண்டு ஸ்பூன் கடலை மா சேர்த்து செய்தால் தோசை சிவப்பாக மொறுமொறுவென இருக்கும்
பிரெட்டை முக்கோண வடிவில் டோஸ்ட் செய்து தாளித்த தயிரை அதன் மேல் ஊற்றினால் பிரெட் தயிர்வடை ரெடி.
பனீர் துண்டுகளை ஒரு டப்பாவில் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து உடன் ஒரு ஸ்பூன் வினிகரை ஊற்றி மூடி ஃபிரிட்ஜில் வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
வெள்ளை உளுந்தை வறுத்து மைய அரைத்து தக்காளி சட்னியுடன் சேர்த்தால் சட்னி கமகம வாசனையாக இருக்கும்.
முந்திரி, பாதாம், கசகசா போன்றவை அரைப்பதற்கு முன்பு ஊற வைத்து பிரிட்ஜில் வைத்து அரைத்தால் விரைவில் அரைபடும்.
அடைக்கு அரைக்கும்போது ஒரு கீற்று பரங்கிக்காயைச் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சுபோல இருக்கும்.
அரிசி கொதிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவினால், உலை கொதித்து வெளியே வழியாது.
தேங்காய் சாதம் செய்யும்போது சிறிதளவு வறுத்தரைத்த வெந்தயப்பொடி கலந்தால் சுவையும், மணமுமாக இருக்கும்.