“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கப்பால், யாரை நிராகரிக்க வேண்டும் என்பதில் எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி – புன்னைநீராவி வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, மக்களோடு கருத்துக்களைப் பரிமாறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாற்றம் என்னும் மாய அலையின் பின்னாலும், இளையவர்கள் – புதியவர்கள் என்ற போர்வையிலும் மக்களைக் குழப்பி, வாக்குகளைச் சிதறடிக்கும் சமநேரத்தில் தேசியக் கட்சிகளோடு ஐக்கியமாகி இனத்தின் இருப்பையே இல்லாமல் செய்யும் பேரினவாத நிகழ்ச்சி நிரல்கள் குறித்து எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
எமது மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் அபிலாஷைகளை நீர்த்துப்போகச் செய்யும் சக்திகளை, சமரசங்களுக்கு இடமற்று எமது மக்கள் நிராகரிக்க வேண்டும்.” – என்றார்.
இந்தக் கலந்துரையாடலில், புன்னைநீராவி வட்டாரத்தின் செயற்பாட்டாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.