புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயலாதீர்கள்”

“நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயலாதீர்கள்”

1 minutes read

“போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்துவது அடிப்படை மனித உரிமையாகும். அதனை எவரும் நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரித்து மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயல வேண்டாம்.”

– இவ்வாறு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

‘வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்ந்துள்ளார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. மாவீரர் தினத்தை நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும்.’ – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் தெரிவித்திருந்தனர். அவர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே  அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த காலங்களில், போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும்போது அதற்கு எதிராக தெற்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள். அதேபோல் போரில் உயிரிழந்த தமது உறவுகளை தெற்கில்  உள்ள உறவுகள் நினைவேந்தும்போது அதற்கு எதிராக வடக்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள். ஒவ்வொரு வருடமும் மே, நவம்பர் மாதங்களில் இத்தகைய இனவாதக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன. இந்த இனவாதக் கருத்துக்கள் இனியும் இருக்கக்கூடாது.

நினைவேந்தல் உரிமை சகல இனத்தவர்களுக்கும் உரியது. அதில் இன வேறுபாடு இருக்கக்கூடாது.

இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் எவரும் பார்க்கக்கூடாது.

நாட்டில் அமுலில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை எவரும் நடத்தலாம். அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதேவேளை, சட்டங்களை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அது பொலிஸாரின் கடமையாகும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More