இந்திய திரையுலகில் கடந்த கால தசாப்தங்களில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி ‘சில்க் ஸ்மிதா -குயின் ஆஃப் சவுத் ‘எனும் பெயரில் புதிய திரைப்படம் தயாராகிறது. இது தொடர்பான பிரத்யேக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஜெயராம் சங்கரன் இயக்கத்தில் உருவாகும் ‘சில்க் ஸ்மிதா கிங் ஆஃப் சவுத்’ எனும் திரைப்படத்தில் நடிகை சந்திரிகா ரவி சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவரது பிறந்த நாளான இன்று அவரது சுயசரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பை பிரத்யேக காணொளி மூலம் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தை எஸ் டி ஆர் ஐ மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்பி விஜய் அமிர்தராஜ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்படும் என தெரிவித்திருக்கும் படக் குழு அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியிட்டிருக்கும் பிரத்யேக காணொளியில் சில்க் ஸ்மிதாவை பற்றி அன்றைய காலகட்டத்திய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவருடைய உதவியாளரிடம் விசாரிப்பது போல் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது.
மேலும் சில்க் ஸ்மிதா கடற்கரை ஒன்றில் கவர்ச்சியான உடையில் ஆடம்பரமான வாகனத்தில் வந்து இறங்கி செல்ல பிராணிகளுக்கு உணவிடுவது போலும் அவருடைய தீவிர ரசிகர்கள் அவரிடம் கைசாத்து கேட்பது போலும் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.