செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கார்த்திகை தீபம் | நதுநசி

கார்த்திகை தீபம் | நதுநசி

1 minutes read

கார்த்திகை தீபம்
ஒளி விட்டு சுடரும்
நாளொன்றில் வந்து
தடுத்து அணைத்து போனார்.

அன்று கார்திகை
விளக்கீடு என்று தான்
அம்மா சொல்லியிருந்தார்.
நினைவில் மாற்றமில்லை.

வீட்டு வாசலில் எல்லாம்
தீப்பந்தங்கள் எரிந்தன.
காற்றில் சுடரை அசைத்து
வீடெங்கும் ஒளி பரப்பி.

வீதியிலும் கூட
வீட்டுக்கு வரும் அந்த
பிரதான வாசலிலும்
வாழைத்தண்டில் எரிந்தது.

அப்பா ஏற்றிவிட்டார்.
தேங்காய் பாதியொன்றில்
எண்ணெய் ஊறிய திரி
தீப்பற்றி எரிந்து கொண்டது.

எங்கள் ஊரில்
ஒளியால் ஒளிர்ந்தது
அன்றைய மாலைப்பொழுது.
இருள் ஓடி மறைந்து போக.

அன்று கார்த்திகை
தீபத்திருநாளாக இருந்தது.
கூடவே மற்றொன்றும்
சேர்ந்தே வந்ததாம்.

வழமைக்கு தனித்து வரும்
இரு நாட்கள் அன்று
ஒன்றாகி வந்து நின்றது.
ஆச்சரியம் தான்.

தமிழ்க்கடவுள் முருகன்
வழிபாட்டு நாளன்று.
மாவீரர்களை நினைவிருத்தும்
மகத்துவ நாளுமன்று.

வாய்ப்பு நன்றேயானது.
இருந்தும் பகைவர் வந்து
பந்தாடிப் போனது கவலை
முகம் வாடிப் போனது.

அண்ணாவுக்கு ஒரு
விளக்கேற்றி வழிபடவும்
அக்காவுக்கு இன்னொரு
விளக்கேற்றி வழிபடும் நாளாம்.

விழிகள் கசிந்து
மனமுருகி பேசினார்.
படங்களின் முன்னே
நின்று அம்மா அன்று.

அண்ணாவும் அக்காவும்
எங்கே என்று கேட்ட
எந்தனுக்கு வந்தது
அன்று தான் பதிலொன்று.

ஆம் அன்றைய நாள்
மதத்தாலும் மானத்தாலும்
ஒன்றாகி வென்று நின்ற
வீரர்களின் ஒளித் திருநாள்.

கார்த்திகை தீபம்
முருகனுக்கேற்றி வழிபட
மாவீரர்களுக்கும் நாம்
தீபமேற்றி வழிபடும் நாளானது.

காலச்சக்கரம் அப்படி
அச்சொட்டி பொருத்தி வர
விரட்டி வந்தனர்
சிங்களரசின் படையினர்.

போரில் களமாடி
சாவினை அணைத்து
துயிலில்லம் மீளாத்துயில்
கொள்ளும் மாவீரர்களின் நாள்.

அந்த ஒன்றை அன்று
அவர்கள் காரணமாக்கி
எரிந்த தீபங்களை
தட்டி விட்டு அணைத்தனர்.

இறந்தவர்களை நினைக்க
தடுத்து விடும் அராஜகம்.
அரங்கேறிய போது
மனிதநேயம் எங்கே என்றது.

மனக் குமுறல் கோபமாக
முகம் சிவந்தது.- சிந்தை
மெல்ல சூழல் சொல்ல
மௌனமாகிப் போனது.

உள்ளக் கோவிலில்
சுடரிடும் கார்திகை தீபம்
என்று அணையும் இங்கே.
எவரால் முடியும் அணைக்க.

விடுதலை தாகத்தோடு
இறுதி மூச்சையும்
மண்ணுக்காக விட்டவர்
வீரத்தை பேசிடும் சுடரல்லவா?

தமிழ்க் கடவுள்
முருகனாரும் போர்வீரர்.
போருக்காக பிறந்தவர்
தந்தைக்கு சுவாமியானவர்.

எங்கள் ஈழத்தின்
மாவீரத்திற்கு அணி சேர்த்து
திரண்ட நாளாக அன்று
அந்த நாளை நோக்கினேன்.

கார்திகை பிறந்தால்
தமிழர்களின் ஒளி விழா
வாழ்வை ஒளியூட்டும்
நல்ல நாட்கள் இந்த மாதத்தில்.

தலைவர் பிறந்த நாள்.
மாவீரத்தின் ஒளி நாள்.
கார்த்திகேயரின் திருநாள்.
கார்திகை நமக்கு சூரிய மாதம்.

மறுத்து மிதித்து
வஞ்சம் தீர்த்து சிதைக்க
மீண்டும் எழுவோம்
புது முளையாகி இங்கே.

பெரு விருட்சம் ஆகிட தான்
பலர் விதைகளாக
மண்ணில் புதைந்தார்.
செவ்வொளி பட்டு முளைப்பார்.

சுடர் விட்டு எரிந்து
சூட்சுமம் சொல்லட்டும்.
கோவில்கள் வீடுகள்
எல்லாம் கார்த்திகை தீபம்.

நினைவுகள் மீட்டி இங்கே
வரலாறு பேசுவோம்.
தீபமேற்றி நடந்தவை மீண்டும்
சொல்லி வைப்போம்.

நாளையும் நமக்கொரு
வாய்ப்பு வந்திடலாம்.
விட்டதில் இருந்து மீண்டும்
விடுதலையாகி மகிழ்ந்திடலாம்.

நதுநசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More