இங்கிலாந்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவருடைய அரசில் இலஞ்ச ஒழிப்பு துறை அமைச்சராக இருந்தவர் துலிப் சித்திக் (வயது 42).
பங்களாதேஷ் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் (வயது 77) மருமகளான சித்திக், பங்களாதேஷில் நடந்து வரும் நிதி மோசடி தொடர்பான விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
இது இங்கிலாந்து பிரதமருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பங்களாதேஷ் பணமோசடி விசாரணைக்காக, ஹசீனாவின் மருமகளான துலிப் சித்திக், இங்கிலாந்து நாட்டின் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை முதல் தொடர்ந்து நடந்த மாணவர் போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. இதில், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, பங்களாதேஷில் இருந்து தப்பிய ஹசீனா, பின்னர் ஓகஸ்ட் 5ஆம் திகதி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
சித்திக் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், “தனிப்பட்ட முறையில் நடந்த மறு ஆய்வில், நான் அமைச்சுக்கான நடைமுறையை மீறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் முறைகேடாக நடந்து கொண்டேன் என்பதற்கான எந்தவித சான்றும் இல்லை.
எனினும், அரசுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக நான் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் பதவி விலகியது குறித்து பிரதமருக்கு விரிவான விளக்கத்துடன் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
அதில், “தேசத்தின் புதுப்பொலிவு மற்றும் உருமாற்றம் ஆகியவற்றுக்காக அரசுக்கு விஸ்வாசத்துடன் செயற்படுவேன்” என்று, அவர் வலியுறுத்தியுள்ளார்.