செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழர்களின் மீதான யுத்த மனநிலையில் இன்னும் இராணுவம்! – கஜேந்திரகுமார் விசனம்

தமிழர்களின் மீதான யுத்த மனநிலையில் இன்னும் இராணுவம்! – கஜேந்திரகுமார் விசனம்

2 minutes read
தமிழ் மக்களுக்கு எதிராகப் போரை நடத்திய இராணுவம் அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பிரிவினைகளை ஏற்படுத்தும் இனவாத நடவடிக்கைகளிலேயே இராணுவம தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது என்று நான் தொடர்ந்து சொல்லி வருகின்றேன். தமிழ் மக்களுக்கு எதிராக அவர்கள் ஒரு போரை நடத்தியதோடு, அவர்கள் அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை. தமிழ் நலன்களுக்கு எதிரான மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு நிறுவனமாகவே இராணுவம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது என்பதைப் பொறுப்புடன் கூறுகின்றேன்.

யாழ். தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரையைக் கட்டுவதில் இராணுவத்தினர் எவ்வாறு செயற்பட்டனர் என்பது இதற்குச் சிறந்த உதாரணமாகும். அப்போதைய இராணுவத் தளபதியால் தனியாருக்குச் சொந்தமான காணியில் அடிக்கல் நாட்டப்பட்டு விகாரை கட்டப்பட்டிருக்கின்றது.

அடிக்கல் நாட்டப்பட்ட சில நாட்களிலேயே யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்  கூட்டத்தில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டது.  அதில் யாழ். மாவட்ட அரச அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலர், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு, தையிட்டி திஸ்ஸ விகாரையானது தனியார் காணியில் இருப்பதும், இந்தக் காணியானது எந்த விகாரைக்கும் சொந்தமானது அல்ல என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தனர்.

குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொண்டு எந்தவொரு கட்டுமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்றும், கட்டுமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையிலும், இராணுவமே சட்டவிரோத விகாரையைக் கட்டியது.

குறித்த விடயம் தொடர்பாக 2024 டிசம்பர் 13 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய போதும் மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அப்போது தையிட்டி திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ள நிலம் தனியாருக்குச்  சொந்தமான நிலம் என்றும், எந்தவொரு முறையான சட்ட நடைமுறையும் இன்றி, சட்ட விரோதமாகவே விகாரை கட்டப்பட்டது என்றும், இவ்விடயம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டிருந்தேன்.

இந்த நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவரிடம் புதியதொரு விடயத்தைக் கொண்டு வருகின்றேன். அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் எழுதிய கடிதம் தொடர்பாக ‘உதயன்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவ்விடயம்  தொடர்பான கடிதத்தை சபையில் சமர்ப்பிக்கின்றேன். அந்தக் கடிதத்தில் சந்திரா நிமல் வாக்கிஸ்கா என்பவர் அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் என்று அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானமுள்ள  6 ஏக்கர் காணியும், உண்மையில் தனியாருக்குச் சொந்தமானதான இருக்கும் நிலையில், சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ள இடம் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் இருந்து திஸ்ஸ விகாரைக்குச் சொந்தமானது எனவும், திஸ்ஸ விகாரைக்கு 14 ஏக்கர் காணி இருந்தது எனவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தனியாருக்குச் சொந்தமான காணிகளையும், அதனுடன் சேர்த்து மேலும் பல ஏக்கர் நிலத்தையும் பறிமுதல் செய்து வழங்க வேண்டும் என்றும், தனியாருக்குச் சொந்தமான காணிகளை காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் ஓர் இனவாதக் கட்டமைப்பில் செயற்படுகின்றது என்று நான் குறிப்பிடுவது இதனால்தான். அது அதன் மனநிலையையிலிருந்து மாற்றவில்லை. நான் கூறும் கூற்றுக்களில் ஓரளவு உண்மை இருப்பதாக நீங்கள் கருதினால் நீங்கள் சட்டபூர்வ செயல்முறையொன்றுக்கு செல்ல வேண்டும். இராணுவமென்றால் எந்தச் சட்டத்தையும் மீறலாம் என்ற நிலை இருக்க முடியாது. காட்டுச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாது.  ஆனால், இன்னும் அந்த அடிப்படையிலேயே அவர்கள் செயற்படுகின்றார்கள்.

இந்தக் கடித்தை எழுதியிருந்த அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தற்போதைய தலைவர் யார் என்று நான் தேடியபோது, அவர் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் செயற்பட்ட ஒருவராவார்.  எனவே, இங்கே ஒழுங்கமைக்கப்படும் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளின் இணைப்பை நீங்கள் பார்க்கலாம்.

இந்த அரசு இனவாதக் கொள்கைகளைப் பின்பற்றப் போவதில்லை என்றும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டப் போகிறது என்றும் கூறிய உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருக்குமாயின் சட்டம் நியாயமானதாக இருக்க வேண்டும். எவரும் சட்டத்தை மீறுவதற்கு அனுமதிக்க முடியாது.

எனவே, தனியார் காணிகளில் கட்டப்பட்ட இந்த தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை விவகாரத்தை எப்படிக் கையாள்கிறது என்பதைப் பொறுத்தே இந்த அரசு இனவாதமுடையாதா? இல்லையா? என்பது புலப்படும். திஸ்ஸ விகாரைக்குச் சொந்தமான நிலத்தில் விகாரை அமைக்கக் கூடியதாக இருந்தும், இந்தச் சட்டவிரோதச் செயலுக்காக தனியாருக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்க அவர்கள் தேர்வு செய்திருப்பது விரும்பத்தகாத ஒன்றாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.