தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரும் , பாடகரும், குணச்சித்திர நடிகரும் , நகைச்சுவை நடிகருமான பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ வல்லமை ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பிரபல இயக்குநர்களான வெங்கட் பிரபு – லிங்குசாமி -சீனு ராமசாமி- ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வல்லமை ‘ எனும் திரைப்படத்தில் பிரேம்ஜி அமரன், திவ்யதர்ஷினி, தீபா ஷங்கர், முத்துராமன், சி. ஆர். ரஞ்சித், சுப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பாட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இதன் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் பாடசாலையில் பயிலும் வளரிளம் பருவத்து மாணவி பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருப்பதாகவும், அதனை அவர் தந்தையுடன் இணைந்து எப்படி எதிர்க்கிறார் என்பது தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.