தயாரிப்பு : ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள் : பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மரியம் ஜார்ஜ், தேனப்பன் மற்றும் பலர்.
இயக்கம் : அஸ்வத் மாரிமுத்து
மதிப்பீடு: 3 / 5
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ எனும் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றதால் அவரின் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை படக்குழுவினர் நிறைவேற்றினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழக மாநகரான வேலூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பொறியியல் பட்டதாரியாக படிக்கிறார் D. ராகவன் எனும் டிராகன்( பிரதீப் ரங்கநாதன்) . கல்லூரியில் படிப்பதை தவிர வேறு அனைத்து அட்டகாசங்களையும் செய்து மாணவர்களிடத்தில் கெத்து காட்டுகிறார் டிராகன். இவரை அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவியான கீர்த்தி (அனுபவமா பரமேஸ்வரன்) காதலிக்கிறார். கல்லூரி முதல்வரான மிஷ்கினுடன் ஏற்படும் பிரச்சனை காரணமாக பட்டப் படிப்பை நிறைவு செய்யாமல் எந்த தேர்விலும் சித்தி அடையாமல் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார். நண்பர்களுடன் அவர்களுடைய அறையில் தங்கி வேலை வெட்டி எதுவும் செய்யாமல் தன் காதலியுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அத்துடன் வேலைக்கு செல்கிறேன் என்று பெற்றோரையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார். ஒரு தருணத்தில் இவருடைய பொறுப்பின்மையை உணர்ந்து கொண்ட காதலி கீர்த்தி இவரை விட்டு பிரிந்து, வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இது தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதும் டிராகன் ,அவளை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியை தெரிவு செய்கிறார். போலி கல்வி சான்றிதழை தயாரித்து, அதன் மூலம் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்குகிறார். வாழ்க்கையில் வளர்ச்சியை அடைந்து வெற்றி நோக்கி பயணிக்கத் தொடங்குகிறார். மிகப் பெரும் தொழிலதிபரான கே. எஸ். ரவிக்குமாரின் மகளை திருமணம் செய்து கொள்வதற்கான நிச்சயமும் நடைபெறுகிறது. இந்த நிலையில் அவருடைய கல்லூரி முதல்வர் மூலமாக ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அது என்ன சிக்கல்? அதிலிருந்து டிராகன் எப்படி வெளியில் வந்தார்? அவருடைய வாழ்க்கையில் கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டாரா? இல்லையா?என்பதை விவரிப்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.
கல்லூரி மாணவராகவும், தனியார் நிறுவன ஊழியராகவும் நடிப்பில் அதகளம் செய்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
இவருக்காகவே திரைக்கதை எழுதப்பட்டிருப்பது போல் உணர முடிகிறது. குறுக்கு வழியில் வெற்றி பெற்றவர்கள் அந்த வெற்றிக்காக தோல்வியை ஒப்புக்கொண்ட ஒருவனை நேரில் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதை உணர்வு பூர்வமாக இயக்குநர் விவரித்திருப்பது இந்த படத்தின் தனித்துவமாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. அதே தருணத்தில் ‘கோணலாக இருந்தாலும் உளவியல் ரீதியாக எந்தவித நெருக்கடியும் இல்லாமல் நேர்மையுடன் பயணிக்கும் வாழ்க்கையே வெற்றிகரமானது’ என்பதை இந்த கால தலைமுறை இளைஞர்களுக்கு அவர்களுக்கு பிடித்த முறையில் ஜனரஞ்சகமாக சொல்லி அனைவரையும் கவர்கிறார் இயக்குநர்.
காதல், பிரேக் அப் ,என இளைஞர்களின் பல்ஸையும், லட்சக்கணக்கில் சம்பாத்தியம், சொகுசு வாழ்க்கை, பெற்றோர்கள் மீதான அன்பு, என மற்றொருபுற இளைஞர்களின் பல்ஸையும் பிடித்த இயக்குநர் – இதற்குள் தான் சொல்ல நினைத்த விடயத்தை சொல்லியதால் இந்தப் படம் வணிக ரீதியான படமாகவும் மாறி இருக்கிறது.
கீர்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் முதல் பாதியில் கவர்ச்சி கொப்பளிக்கும் தோற்றத்திலும், இரண்டாம் பாதியில் நாயகனுக்கு உதவும் வேடத்திலும் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.
கயாடு லோஹர், தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகம் என்றாலும் இளமையும் அழகும் கொட்டிக் கிடப்பதால் ரசிகர்கள் அவர் திரையில் தோன்றினாலே கரவொலி எழுப்பி வரவேற்கிறார்கள். காட்சிகளும் குறைவு நடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றாலும் தன் திரை தோற்றத்தை ரசிக்க வைக்கிறார் புதுமுக நடிகை கயாடு.
இவர்களைக் கடந்து ரசிகர்களின் மனதில் நீக்கமற இடம் பிடித்திருப்பவர் கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் மிஷ்கின். வழக்கமான திரைப்படங்களில் இடம்பெறும் கல்லூரி முதல்வராக இல்லாமல் தன்னுடைய மாணவன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் எடுக்கும் முடிவுகள் ரசிக்க வைக்கிறது. இந்த கதாபாத்திரத்தை எழுதிய இயக்குநரும் வெற்றி பெறுகிறார். மிஷ்கினும் தன் இயல்பான தொனியில் இருந்து மாறி நன்றாக நடித்திருக்கிறார்.
ஏனைய பிரபலங்கள் அனைவரும் இருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குநர் நேர்த்தியாக எழுதி, ரசிகர்களின் மனதில் பதிய வைக்கிறார். குறிப்பாக டிஜிட்டல் திரை பிரபலங்களான ஹர்ஷத் கான் பெரிய திரை ரசிகர்களிடமும் வரவேற்பை பெறுகிறார்.
வசனங்களும் சில இடங்களில் பளிச். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும், லியோன் ஜேம்ஸின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.
டிராகன் – வராகன்