செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அநுரவின் கன்னி பட்ஜட் இனிப்பு என எழுதிய நஞ்சு! – சுரேஷ் கடும் சாடல்

அநுரவின் கன்னி பட்ஜட் இனிப்பு என எழுதிய நஞ்சு! – சுரேஷ் கடும் சாடல்

3 minutes read
புதிய அரசின் கன்னி வரவு – செலவுத் திட்டமானது தமிழ் மக்களின் உணர்வுகளைத் திசைதிருப்பி அவர்களின் அபிலாஷைள் ஒருபோதும் நிறைவேறாமல் தடுப்பதற்கான நஞ்சை மறைப்பதற்காக கவர்ச்சிகரமான திட்டங்களை முன்மொழிந்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது இலங்கையில் எத்தகைய ஆட்சி வந்தாலும் தமிழத் தேசிய இனத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என்பதை நிரூபித்துள்ளதாகவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் குறித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“இப்போது ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற தேசிய மக்கள் சக்தி என்று சொல்லக்கூடிய ஜனதா விமுக்தி பெரமுன என்ற இடதுசாரிக் கட்சியானது தனது முதலாவது வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக ஆளும் கட்சி தரப்பினர் ஆஹா ஓஹோ என்றும் எதிர்க்கட்சிகள் அதனை கடுமையாக விமர்சித்தும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் முதன் முறையாக முழுமையாக ஒரு இடதுசாரிக் கட்சி ஆட்சியில் அமர்ந்திருக்கின்றது. ஆகவே, அவர்களது பொருளாதாரக் கொள்கையானது இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கையைவிட மாறுபட்டதாகவும், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதாகவும், அடித்தட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் சமத்துவமான சமுதாயத்தை நோக்கிச் செல்லக்கூடிய ஒரு வரவு – செலவுத்திட்டம் அமைந்திருக்க வேண்டும். அது அவ்வாறு அமைந்திருக்கின்றதா என்றால் இல்லை என்றே கூற முடியும்.

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து புதிய அரசின் பொருளாதாரக் கொள்கையில் எத்தகைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்று பார்க்கின்றபோது எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. அதே பழைய விடயங்கள், பழைய உறுதிமொழிகள், ஐ.எம்.எவ்வைத்  திருப்திப்படுத்துதல், கற்பனையில் வரக்கூடிய திட்டங்கள் என்றவாறு இந்த வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர இதில் பிரத்தியேகமாகவோ அல்லது மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகவோ எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கு மிக அதிகபட்ச நிதியை ஒதுக்கியிருப்பதாக ஒரு மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது வந்திருக்கின்ற அரசு தமிழ் மக்களின் மேல் அக்கறை கொண்டு 5000 மில்லியன் ரூபாவை வடக்கு மாகாண அபிவிருத்திக்காக ஒதுக்கியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. 5000 மில்லியன் ரூபா என்பது தமிழில் 500 கோடி ரூபா. வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாகாணங்களுக்கும் இதிலிருந்து சராசரி 100 கோடி ரூபா போகலாம். ஆகவே, இந்த 100 கோடி ரூபாவை வைத்துக்கொண்டுதான் 2025ஆம் ஆண்டுக்கு வடக்கு மாகாண அபிவிருத்தியைக் கவனிக்க வேண்டும்.

அபிவிருத்தி என்பது அடிப்படையில் இரண்டு வகைப்படும். ஒன்று நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவது. இரண்டாவது நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி மக்களின் நலன் சார்ந்து சிந்தித்து அவர்களின் வாழ்வாதார வளங்களைப் பெருக்குவது. இந்த அடிப்படையில்தான் இந்த வரவு -செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதா?

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள். இதில் பல்லாயிரக்கணக்கான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இன்னும் பல்லாயிரக்கணக்கில் மாற்றுத் திறனாளிகளும் இருக்கின்றனர். பாதிப்படைந்த கிராமங்களும் பிரதேசங்களும் நிறையவே இருக்கின்றன. இவை பற்றி பிரத்தியேகமாகக் கருத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை. கடந்த அரசுகளைப் போலவே இந்த அரசும் அவைகளைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த அரசின் வரவு – செலவுத் திட்டத்தினூடாக வடக்கு மாகாணத்தில் காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் போன்ற பகுதிகளில் தொழிற்சாலை பூங்காக்களை அமைக்கப்போவதாகக் கூறுகின்றனர். தொழிற்சாலை பூங்காவுக்கு இடங்களை ஒதுக்குவது மாத்திரமல்ல அங்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இவற்றை உருவாக்குவதற்கான முதலீட்டாளர்களை அடையாளம் காண வேண்டும். முதலீட்டாளர்களைக் கவர்வதற்கான கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்க வேண்டும். இவை எதுவும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் காணப்படவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த வாக்குகளை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தனது நிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும் வடக்குக்கு மிக அதிகபட்சமான நிதி ஒதுக்கப்படுவதாகக் காட்டப்படுகின்றதே தவிர இதில் எத்தகைய உண்மையும் இல்லை.

இந்த வரவு – செலவுத் திட்டமானது வெறும் கடிதாசியில் எழுதப்பட்டிருக்கின்றதே தவிர உண்மையான அடிப்படையில் உருவாக்கப்பட்டதல்ல. அரசு எதிர்பார்க்கின்ற நிதி வருவாயில் துண்டுவிழும் தொகையான 2200 பில்லியன் ரூபாவை எங்கிருந்து திரட்டுவது என்பதே அரசுக்குப் புரியாமல் இருக்கின்றது. இந்தநிலையில் முக்கியமான விடயங்களுக்குத்தான் அரசு முன்னுரிமை அளிக்குமே தவிர, இவர்கள் உறுதியளித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்பதல்ல.

இதேபோன்றுதான் வடக்கு மாகாணத்துக்கு உறுதியளிக்கப்பட்ட அபிவிருத்தி நிதி என்பதும் இப்போது வெறும் கடதாசியில் இருக்கின்றதே தவிர, அது வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட செயலகங்களை சென்றடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் சில கவர்ச்சிகரமான விடயங்கள் இருக்கின்றன போன்ற ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அரச உத்தியாகத்தர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் உயர்வு, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்த கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்தியாவின் உதவி… இப்படி சில கவர்ச்சிகரமான சொல்லாடல்களால் மக்களைத் திருப்திப்படுத்தி வருகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பிரதேச சபைகளைiயும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியில்தான் இந்த வரவு – செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படக்கூடிய வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்றார்கள். அதுகூட நீக்கப்படாமல் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் வரும் என்று கூறுகின்றார்கள். அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தவொரு அரசியல் கைதியும் விடுவிக்கப்படவில்லை.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போர் மற்றும் படுகொலைகள் தொடர்பாக பொறுப்புக்கூறல் என்பதை மறுதலித்து இப்போது அவருக்கு வக்காலத்து வாங்கவும் முப்படைகளைப் பாதுகாக்கவுமாக ஜெனிவா சென்றிருக்கின்றார்கள்.

ஆகவே, இந்த அரசினுடைய கபடத்தனங்களையும் மாயத்தோற்றத்தையும் பொய்யான உறுதிமொழிகளையும் தமிழ் மக்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய நேரம் வந்திருக்கின்றது. தமிழ் மக்களாகிய நாம் இந்த நேரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு செயற்படாவிட்டால், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்பது இருண்டதாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கின்றது.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More