சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நாள் அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் முழுமையாக மறைந்திருக்கும் நாளை அமாவாசை அமைவாதல்,மறைமதி என்றும் சொல்வதுண்டு. ஆங்கிலத்தில் ‘NEW MOON’ என்று சொல்வார்கள்…. அதாவது புது நிலவு… அது ஒரு இருள் நிறைந்த வட்டம் போல இருக்கும். சமஸ்கிருத்ததில் “அமா’ என்றால் “ஒன்றாக” மற்றும் “வஸ்யா” என்றால் இணைந்து வாழ்வது என்று பொருள்.
அயற்சொல் அகராதியில் பேராசிரியர் அருளி அவர்கள் அமாவாசைக்கான தமிழ்ச் சொல் ‘காருவா’ என்று குறிப்பிடுகிறார். கார் என்றால் கரிய உவா என்றால் நிலா. கருத்த நிலா என்று பொருள். மலையாள மொழியில் இன்றும் வழக்கிலிருக்கும் கருத்த வாவு என்பது அமாவாசையை குறிக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தையும் நாஞ்சில் நாடன் அவர்கள் தனது “கருத்த வாவு” கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளார்.
சந்திரன் இயக்கத்தை வைத்து காலத்தை கணிக்கும் முறைக்கு சந்திரமானம் என்று பெயர். சந்திரன் பூமியை முழுமையாக சுற்றி வர எடுக்கும் காலம் சந்திர மாதம் ஆகும். நம் கண்ணுக்கு முற்றிலும் தெரியாத நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழு வட்டமாக தெரியும் நிலைக்கு வரும். பின்னர் சிறிது சிறிதாக தேய்ந்து முற்றிலும் தெரியாத நிலைக்கு வரும். அதன் கால அளவு 29 நாட்கள் 12 மணி 44 நிமிடங்கள் 3.00 வினாடி என்று கணக்கிட்டு உள்ளார்கள்.
சந்திரன் தேய்வது வளர்வது தொடர்பாக கால கணிப்பு முறையில் சந்திர மாதத்தை இரு பிரிவுகளாக குறிப்பிடுகிறார்கள். வளர்பிறை காலம் ‘சுக்ல பட்சம்’ என்றும் தேய்பிறை காலம் ‘கிருஷ்ண பட்சம்’ என்றும் அழைக்கப்படுகிறது.இந்த இரண்டும் 14 திதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கு சந்திர நாட்கள் என்று பெயர். அவைகள் முறையே பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி,சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி ஆகும்.
இந்துக்கள் தங்கள் குடும்பத்தில் முக்கியமான விசேஷங்களை வளர்பிறையில் வைப்பார்கள். முக்கிய பண்டிகையான தீபாவளி ஐப்பசி மாத அமாவாசை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அமாவாசை-ன்னு சொன்னதும் 80 ஸ் கிட்ஸ் களுக்கு கவுண்டமணி தான் ஞாபகத்துக்கு வருவார். புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜ் அவர் கதாபாத்திரத்துக்கு ‘அமாவாசை’ என்று பெயர் சூட்டியிருப்பார். அதில் பண்ணையாராக நடித்த ‘ஜி.சீனிவாசன்’ அமாவாசை …என்று சொன்னதும்…கவுண்டமணி ‘உள்ளத சொல்றேங்க’ என்று பதில் சொல்வார்.
ரஜினி நடித்த ‘மனிதன்’ திரைப்படம் அமாவாசையை அடிப்படையாக வைத்து கதையம்சம் கொண்ட படம். அமாவாசையில் பிறந்தவன் திருடனாக இருப்பான் என்ற தவறான சிந்தனையால் கதாநாயகன் படும் இன்னல்கள் பற்றி விவரித்திருப்பார் கதாசிரியர் திரு.வி.சி.குகநாதன் அவர்கள். அது உண்மையல்ல என்பது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டது.
அமாவாசை, பவுர்ணமி குறித்து திரு.லண்டன் சுவாமிநாதன் அவர்கள் அற்புதமான இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அதைத் தேட’லண்டன் சுவாமிநாதன்’ என்று டைப் பண்ணி கூகுளில் தேடிப் பாருங்கள்…’படிக்காதது பசிபிக் அளவு’ என்று புதுமொழி சொல்லுமளவுக்கு விஷயங்களை தனது கட்டுரைகளில் வாரி வழங்கி இருப்பார்.
இனி அமாவாசை அன்று செய்ய வேண்டிய கடமைகள் பற்றி பார்ப்போம். அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை வழிபட வேண்டும். நமது மூதாதையர்களை குறிக்கும் சொல் ‘பித்ரு’ ஆகும். அன்றைய தினத்தில் முன்னோர்கள் நம் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். இது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. கிண்டலடிக்கும் நாத்திகர்கள் அவர்களின் தலைவர்களின் சமாதிகள் மேல் மலர் வளையம் மற்றும் சிலவற்றை வைத்து வழிபடுவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவரவர்களின் நம்பிக்கை அவரவர்களுக்கு பெரிது.
அப்படி முன்னோர்கள் வரும் அந்த நாளில் அவர்களுக்கு பிடித்தமானவற்றை செய்து படையலிட்டு வழிபட வேண்டும். அன்றைய தினத்தில் பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக இருக்கும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதை போக்கி அவர்களை வழிபட்டால் அக்குடும்பத்திற்கு நீண்ட ஆயுள் அழியாப் புகழ், உடல் வலிமை, செல்வம் ஆகியவற்றை அவர்கள் வழங்குவார்கள்.
முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபாடு செய்வது தர்ப்பணம் ஆகும். பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது தர்ப்பணம் ஆகும்.
அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து அதை படையலிட்டு பிறகு அதில் கொஞ்சம் எடுத்து காக்கையை சாப்பிட அழைத்து வைக்க வேண்டும். கூடி வாழ்ந்து சேர்ந்து உண்ணும் வழக்கம் காகங்களிடம் மட்டுமே உள்ளது. நம் முன்னோர்கள் காகங்கள் வடிவில் வந்து நாம் அளிப்பதை பெற்றுக் கொள்வார்கள் என்பது காலம் காலமாக உள்ள நம்பிக்கை.
கருட புராணத்தில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றி எடுத்துரைக்க பட்டுள்ளது. பெருமாள் கருடனுக்கு போதிப்பது போல அமைந்துள்ள புராணமிது
அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்யலாம். அன்றைய தினத்தில் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. வசதிக்கு ஏற்றது போல ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்களை செய்யலாம்.
அமாவாசை வரும் தினத்தில் நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். ஜீரண மண்டலம், மூளை,நீர் சத்து ஆகியவைகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது அதனால்தான் அந்த நாட்களை விரத நாட்களாக நம் முன்னோர்கள் மாற்றி விட்டார்கள். அதை சரி செய்யும் காய்கறிகள் பாகற்காய், புடலங்காய், கொத்தவரங்காய், வாழைக்காய், வாழைத்தண்டு, பூசணிக்காய், மிளகு, கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நியதியை காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள் இந்துக்கள். பூண்டு, வெங்காயம் சமையலில் தவிர்க்கப்பட வேண்டும்.. அஜீரண கோளாறு வரும் வாய்ப்புகள் இருப்பதால் அசைவம் கூடாது.
அமாவாசை திதி துவங்குவதற்கு முன்பு வீட்டில் தரையை மெழுகி சுத்தம் செய்வது, உடுத்திய துணிமணிகளை துவைத்து உலர வைப்பது, பூஜை பாத்திரங்களை விளக்கி வைப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும். பொதுவாக அமாவாசை விரதம் பகலில்தான் நடத்தப்படுகிறது. ஒரு திதி முதல் நாளில் தொடங்கினால் மறுநாள் பகல் பொழுதிலும் இருக்கும். அமாவாசை விரதம் இருப்பவர்கள் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கலாம். ஊறவைத்த பச்சரிசி, வெல்லம் கலந்து கொடுக்கலாம். வீட்டில் பூஜை அறையில் தெய்வ படங்களுக்கு பூ சாற்றி அலங்காரம் செய்து வழிபடலாம்.
மதிய உணவு வாழை இலை போட்டு படையல் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். காகங்களுக்கு உணவு வைத்த பிறகு வீட்டில் உள்ளவர்கள் உணவு உண்ணவேண்டும்…குறிப்பாக வாழை இலையில் பரிமாற வேண்டும். விரதம் இருப்பவர்கள் அன்று இரவு பால் பழம் மட்டும் எளிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்…என்று விளக்கமாக எடுத்துரைத்துள்ளார் – பல வார இதழ்கள் மற்றும் நாளிதழ்களில் ஜோதிடம் பற்றி எழுதியுள்ள ஜோதிடமாமணி மதுரை சங்கர் ஜி அவர்கள்.
ஆடி அமாவாசை : ஆடி அமாவாசை அன்று சந்திரனும் சூரியனும் கடக ராசியை ஆக்கிரமிக்கிறார்கள். மிகவும் முக்கியமான நாள் இது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் மூன்று விசேஷமான அமாவாசை களில் இதுவும் ஒன்று. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள்.
தை அமாவாசை : இதுவும் மிகவும் சிறப்பு வாய்ந்த அமாவாசையாகும். தனது பக்தன் ஒருத்தனை சோதனைக்குள்ளாக்கி அவனை அன்னை அபிராமி ஆட்கொண்ட நாள். அவர் சுப்பிரமணிய ஐயர் என்ற இயற்பெயர் கொண்ட அபிராமி பட்டர். தை அமாவாசை நாளன்று அம்மன் முன் தியான நிலையில் இருந்த அவரிடம் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டதாகவும் அதற்கு பவுர்ணமி என்று சொல்லிய தாகவும் வரலாறு தெரிவிக்கிறது. தன்னை சொல்ல வைத்தவள் அன்னை அபிராமி தான் என்பதை அவர் அனைவருக்கும் அம்மனின் அருளால் நிரூபித்தார். திருக்கடையூர் அபிராமி கோயிலில் அபிராமி பட்டர் விழா தை அமாவாசை அன்று சிறப்பாக நடந்து வருகிறது.
மகாளய அமாவாசை : புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி அமாவாசை வரையில் உள்ள 15 நாட்கள் மஹாளயம் என்று அழைக்கப்படுகிறது. பட்சம் என்றால் பாதி மாதம். முன்னோர்கள் இந்த 15 நாட்கள் பித்ரு லோகத்திலிருந்து வந்து நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
பல்வேறு காரணங்களால் விடுபட்டு போன தாத்தா,பாட்டி மற்றும் பல முன்னோர்களுக்கு திவசம் இந்த மகாளய பட்சத்தில் கொடுப்பது நல்லது. அவரவர்கள் வசதிக்கு ஏற்றவாறு இந்த பட்சத்தில் அருகே உள்ள விசேஷமான ஊர்களுக்கு சென்று தங்களால் முடிந்ததை முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நல்லது. இதை கட்டாயம் அனைவரும் செய்ய வேண்டும்.
போதாயன அமாவாசை : பகவான் கிருஷ்ணரால் உருவான அமாவாசை இது. மகாபாரதப் போர் அமாவாசை அன்று ஆரம்பிக்க நாள் குறிக்கப்பட்டது. பாண்டவர்கள் வெற்றி பெற அமாவாசைக்கு முதல் நாளன்றே கிருஷ்ணன் தர்ப்பணம் செய்ய அதை உண்மை என்று நம்பிய துரியோதனன் முதலான கௌரவர்கள் பித்ரு தர்ப்பணம் செய்தார்கள். பகவான் செய்த லீலையால் கௌரவர்கள் போரில் தோற்றுப் போனார்கள். இப்படி உருவானதுதான் போதாயன அமாவாசை. சதுர்த்தசி திதியில் அமாவாசை வந்தால் அது போதாயன அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
அனுமன் ஜெயந்தி : மார்கழி மாத அமாவாசையில் மூல நட்சத்திர நாளில் அவதரித்தவர் அனுமன். அதனால் மார்கழி மாத அமாவாசையும் சிறப்பாக கொண்டாடப்படும். ஒவ்வொரு அமாவாசையும் ஆஞ்சநேயர் கோவில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து சித்தர்களின் ஜீவசமாதிகளில் அமாவாசை பூஜைகள் நடத்தப்படும். அத்தினத்தில் சித்தர்கள் சூட்சும நிலையில் வந்து நமக்கு உதவுவார்கள்.
சோமாவதி அமாவாசை : திங்கள் கிழமை வரும் அமாவாசைக்கு சோமாவதி அமாவாசை என்று பெயர். சந்திரன் ஆதிக்கம் அதிகமாக உள்ள திங்கள் கிழமையில் அமாவாசை வருவது இன்னும் சிறப்பு. இந்த நாளில் அரச மரத்தை குறைந்தது 7 முறையாவது சுற்றுவது நல்லது. அரசமரம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் சொரூபமாக சொல்வார்கள். “மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத சிவ ரூபாய விருட்ச ராஜாயதே நமஹ” – இந்த மூல மந்திரம் சொல்லி வணங்கினால் நல்லது நடக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
பிரித்யங்கரா தேவி கோவில், அய்யாவடி
பிரித்யங்கரா தேவி கோவில், அய்யாவடி
புகைப்படம் : திருமாளம் எஸ்.பழனிவேல்
சனிக்கிழமை அன்று அமாவாசை வந்தால் அதுவும் சிறப்புதான். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு உகந்த நாள். அந்த நாளில் முன்னோர்கள் வழிபாடு முடித்துவிட்டு பகவானின் வாகனமான காகத்திற்கு உணவு வைக்க வேண்டும். கிரக தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அருளுவான் சனீஸ்வரர்.
முக்கியமான வழிபாட்டு தலங்கள் : கும்பகோணம் அருகே அய்யாவடி கிராமத்தில் காளியின் வடிவமான பிரித்யங்கரா தேவி கோயில் உள்ளது. ஒவ்வொரு அமாவாசை அன்றும் இங்கு நிகும்பலா யாகம் நடைபெற்று வருகிறது. எதிரிகளின் தொல்லைகளிலிருந்து அனைவரும் விடுபடவே இந்த யாகம் நடத்தப்படுகிறது. குண்டத்தில் மிளகாய் வத்தல் போடுவது இந்த யாகத்தின் சிறப்பு…ஆனால் நெடி சிறிதும் இருக்காது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அமாவாசை அன்று இங்கு வந்து அதில் கலந்துக் கொள்வார்கள். திருவாரூர் மாவட்டம் செதலபதி கிராமத்தில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இவ்வூரை திலதர்ப்பணபுரி என்றும் சொல்வார்கள். இங்குதான் ராமர் தனது தந்தை தசரதர், ஜடாயு இருவருக்கும் தர்ப்பணம் கொடுத்தார். எப்போது வேண்டுமானாலும் இக்கோயிலுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். You tube- ல் இக்கோயில் சிவாச்சாரியார் சுவாமிநாதன் அவர்கள் இது குறித்து விவரமாக சொல்லியிருக்கிறார்.
இறைவனை வரவேற்பதற்காக வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடக்கூடாது. அன்று முன்னோர்களை வருவதால் அதைச் செய்ய கூடாது. கோலம் இருந்தால் வரமாட்டார்கள் என்பது நம்பிக்கை. கடினமான வேலைகள் எதுவும் அன்று செய்யக்கூடாது. நகம் வெட்டுதல்., முடி வெட்டுதல், முகச் சவரம் செய்தல் கூடாது. அதன் மூலம் சிறு காயம் ஏற்பட்டால் அதன் வீரியம் அன்று அதிகமாக இருக்கும் என்பதால் அவைகளை தவிர்க்க வேண்டும்.
திருவையாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ,ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இன்னும் பல இடங்களிலும் ஆடி , தை மற்றும் மகாளய அமாவாசை தினங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் செல்வார்கள். கரூர் அருகே உத்தம சோழர் கால வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அமாவாசை அன்று விளக்கேற்றி வழிபாடு நடந்தது என்று குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் – பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளில் காற்றை தவிர மற்றவைகளை நாம் கண்களால் பார்க்கலாம். காற்றை நாம் உணரத் தான் முடியும். இறைவனை சிலை வடிவில் பார்த்து வணங்கி மகிழ்கிறோம். ஆனால் காற்றுக்கு சிலை வடிக்கிறோமா…? நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் அந்த காற்றில் கலந்துவிட்டன. அவர்களை நாம் உணரத் தான் முடியும். நம்பிக்கையில்லாமல் மற்றவர்களின் நம்பிக்கைகளை கிண்டலடிக்கும் சில போலிகளுக்காக தான் இதை குறிப்பிடுகிறேன்.
பல்வேறு வேத மந்திரங்களின் தொகுப்பு ஸ்ரீ சூக்தம். ஒவ்வொரு வழிபாட்டுக்கும் ஒரு சூக்தம் உள்ளன. அதில் ஒன்றுதான் ஸ்ரத்தா சூக்தம். ஸ்ரத்தா என்றால் சிரத்தை. நாம் எதை செய்தாலும் அதில் நம்பிக்கை வைத்து முழு ஈடுபாட்டுடன் செய்வதே சிரத்தை.இறைவனுக்கு செய்யும் பூஜைகள், முன்னோர்களுக்கு செய்யும் பித்ரு காரியங்கள் சிரத்தையுடன் முழு ஈடுபாட்டுடன் செய்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்கிறது.
எனக்கு தெரிந்த, படித்த விஷயங்களை இங்கே தந்துள்ளேன். இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள திரு.லண்டன் சுவாமிநாதன், மற்றும் திரு.நாஞ்சில் நாதன் அவர்கள் கட்டுரைகளை படித்து பயன் பெறலாம். இந்த கட்டுரையை கீழ்க்கண்ட சுலோகம் சொல்லி முடிக்கிறேன்.”லோகா சமஸ்தா சுகினோ பவந்து” – அதன் விளக்கம் உலகில் உள்ள அனைவரும் இன்பம் அடைய வேண்டும்.