ஈழத்து வித்தகம் சி. கணேசையர் திருவுருவ சிலைத்திறப்பு விழா
எங்கள் கிராமங்களின் மீள் எழுச்சிக்கான உயிர்விசையாகும்
– மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் பெருமிதம்
.
எங்கள் மண்ணின் புலமை அடையாளமாய் நிமிர்ந்த வித்துவசிரோமணி சி.கணேசையர் அவர்களை சிலையெடுத்துப்போற்றும் இத்தருணம் பெறு மதியானது. இலக்கண , இலக்கிய ஆய்வாளனாக தமிழ் கூறும் நல்லு லகம் எங்கணும் தடம் பதித்த அவர், வீற்றிருந்து ஆட்சி செய்த எங்கள் மரு தடி விநாயகர் மருங்கிலேயே 02.03.2025 ஞாயிறு காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது .சங்கம் வளர்த்த எங்கள் கிராமங்களின் பண்பாட்டு எழுச்சியிலும் கல்வி மேம்பாட்டிலும் அவரது தலைமைத்துவத்தின் இடம் பிரிக்கமுடியாதது.
எங்களின் ஆதர்சபுருஷராக எங்களின் கல்வி மேம்பாட்டில் வழிகாட்டி நின்ற அவரின் மேன்மைகளை இளைய தலைமுறையினர் அறிந்திடவும் பகிர்ந்திடவும் இந்தச் சிலை நிலைக்களனாகும்; எங்கள் கிராமங்களின் மீள் எழுச்சிக்கான உயிர்விசையாகவும் விளங்கும் என்பேன்.
எதிர்காலத்தில் ஐயாவின் ஆச்சிரமம் அமைந்த சூழமைவில் அவர் பெய ரில் ஓரு தமிழியல் ஆய்வு நிறுவனம் அமைந்திடுதல் வேண்டும். ’கணேசை யர் பதிப்பு’ என்ற முத்திரையுடன் வெளியான அவரது வாழ்நாள் ஆய்வுப் பொருண்மையான தொல்காப்பிய விளக்கங்கள்; இலக்கண ஆராய்ச்சி மட்டுமன்றி ‘செந்தமிழ்’ முதலாய இதழ்களில் வெளிவந்த அவரது இலக் கிய ஆராய்ச்சி நுட்பங்கள் ; மரபுவழி தமிழ்க் கல்விக்கான பேராசானாக அவர் கையாண்ட மேலான வழிமுறைகள் ,இந் நிறுவனத்தின் வழி இன்றைய தமிழியல் மாணவர் வசப்பட அனைவரும் ஒன்றிணைந்து இந் நாளில் உறுதி பூணுவோம்! அரிய இச் சமூகப்பணியில் இசையும் அனைவ ரையும் எல்லையிலா அன்புடன் வாழ்த்துகின்றேன் –
என சிலைத்திறப்புவிழா மலருக்கான வாழ்த்து செய்தியில் குறிப்பிடுவார் பேராசிரியர் என் . சண்முகலிங்கன்.
சமய தலைவர்கள் ,பேராசிரியர்கள், மாணவர்கள் ,ஊரவர் சங்கமமாக திறப்புவிழா அமையவுள்ளது. ’ஈழத்து வித்தகம் சி.கணேசையர் ’ – திருவுருவ சிலை திறப்புவிழா சிறப்பு மலரும் வெளியிடப்படவுள்ளது.
வித்துவ சிரோமணிக்கான ஊர் மக்களின் காணிக்கையாக அமைந்த திருவுருவ சிலையை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சிற்பத்துறைத் தலைவர் சிற்பக்கலைஞர் மா.மனோகர் தத்துவரூபமாக வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.