பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை என அவரின் மகள் தெரிவித்துள்ளார்.
கல்பனா ஐதராபாத்தில் உள்ள வீட்டில் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்று அதிகமான தூக்க மாத்திரைகளை பயன்படுத்தியதாக தகவல் வெளியானது.
வீட்டில் சுயநினைவின்றி கிடந்த கல்பனாவை மீட்ட, பொலிஸார் அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், கல்பனாவின் மகள் செய்தியாளர்களை சந்தித்து, இது தற்கொலை முயற்சி இல்லை என தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நிஜம்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாடகி கல்பனா வசித்து வந்துள்ளார்.
பாடகி கல்பனாவின் வீடு, இரண்டு மூன்று நாட்களாக மூடப்பட்டு, கதவு திறக்காமலே இருந்துள்ளது. செவ்வாய்க்கிழமை குடியிருப்பு வாசிகள் நடத்தும் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக கல்பனாவை அழைக்க பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்ற போது, பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள், கல்பனாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உறவினர்கள், கல்பனாவின் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்த போதும். அதில், எந்த பலனும் இல்லாமல் போனதால், குடியிருப்பு வாசிகளால் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைவாக வந்து கதவை உடைக்க முயற்சி செய்தனர்.
ஆனால், கதவை உடைக்க முடியாததால் பின்பக்கமாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது. பாடகி கல்பனா கட்டிலில் மயங்கிய நிலையில், சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார்.
இதையடுத்து, பொலிஸார் கல்பனாவை மீட்டு அருகில் உள்ள, தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பாடகி கல்பனாவின் மகள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், நான் கல்பனாவின் மகள், அம்மா இப்போது நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய தாய் தந்தை இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். மன அழுத்தம் காரணம் அம்மா, வைத்தியரின் பரிந்துரையின் பேரில் தினமும் தூக்க மாத்திரைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் எடுத்துக்கொண்ட மாத்திரையில் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. அம்மா உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி எல்லாம் செய்யவில்லை.
மற்றபடி எங்களது குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, என் அம்மா, நான் மற்றும் என் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள், அது சங்கடத்தில் ஆழ்த்துகிறது. அம்மா அப்போது நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என வைத்தியர் கூறி இருக்கிறார். மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் இது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்யவில்லை ஓவர் டோஸ் ஆகிவிட்டது என பாடகி கல்பனாவின் மகள் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.