பாடசாலை மாணவன் ஒருவரின் பணப்பையைத் திருடிய நபர் பொதுமக்களால் கற்களால் தாக்கப்பட்டு தப்பியோடியதையடுத்துப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொஹுவலை பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவரைக் கூரிய ஆயுதத்தைக் காட்டி அச்சுறுத்தி மாணவனின் பணப்பையைப் பறித்துச் சென்ற நபர் பொதுமக்களால் கற்களால் தாக்கப்பட்ட நிலையில் தப்பியோடினார்.
பின்னர் அந்த நபரின் சடலம் நுகேகொட, நலந்தாராம வீதியில் நடைபாதை பாதைக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டது.
உயிரிழந்தவரின் தலையின் பின்புறம் மற்றும் காதுக்கு அருகில் காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொஹுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.