தமிழ் திரையுலகின் சந்தை மதிப்புள்ள முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகர்களான யோகி பாபு – விமல் இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘கரம் மசாலா’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் அப்துல் மஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கரம் மசாலா’ எனும் திரைப்படத்தில் விமல், சம்பிக்கா டயானா, யோகி பாபு , எம். எஸ். பாஸ்கர், ரவி மரியா , மொட்டை ராஜேந்திரன் , ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே . கோகுல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பைஜு ஜேக்கப் – ஈ. ஜெ. ஜான்சன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கான்ஃபிடண்ட் பிலிம் கஃபே நிறுவனம் சார்பில் இயக்குநர் அப்துல் மஜீத் மற்றும் பி. மணிகண்டன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” வேகமாக சுழலும் இந்த நவீன யுகத்தில் வீடு – திருமணம் – தொழில் – என பல விடயங்களிலும் இடைத் தரகர்களின் பங்களிப்பு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்தத் தருணத்தில் இடைத் தரகர்களின் பங்களிப்பால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை நகைச்சுவையுடன் விவரிப்பது தான் இப்படத்தின் கதை ” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.