இலண்டன் நகரில் உள்ள என்ஃபீல்டு வட்டாரத்தில் ஓக் (Oak) வகையைச் சேர்ந்த 500 ஆண்டுப் பழமையான மரம் வெட்டப்பட்டுள்ளமைக்கு பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இலண்டனின் பழமையான பெரிய மரங்களில் ஒன்றான அதன் சுற்றளவு சுமார் 6.1 மீட்டர் என்பதுடன், இலண்டனில் உள்ள 600,000 ஓக் மரங்களில் ஆகப்பெரிய 100 மரங்களில் அதுவும் ஒன்று என்று தெரிவிக்கப்படுகின்றது.
உணவகம் அருகே இருந்த அந்த மரத்தால் பாதுகாப்பு அபாயம் ஏற்படலாம் என்பதால், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் பாதுகாக்க மரத்தை வெட்டியதாக உணவக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், மிகவும் பழமையான மரத்தை வெட்டியதால் நகர மன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், உணவக நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் பரிசீலித்து வருகின்றனர்.
சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்புகளும் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உணவக நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், வெட்டப்பட்ட பிறகும் மரம் உயிர்ப்புடன் இருப்பதாகவும் அது மீண்டும் வளர்வதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.