பான் இந்திய நட்சத்திர கலைஞர்களான தனுஷ் -நாகார்ஜுனா -ராஷ்மிகா மந்தனா- முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘குபேரா’ எனும் திரைப்படத்தில் இடம் பிடித்த ‘போய் வா நண்பா’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குபேரா ‘எனும் திரைப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தானா, ஜிம் ஷெர்ப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
ஃபீல் குட் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் அமீகோ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை சோனாலி நரங் வழங்குகிறார்.
தேசிய விருதுகளை வென்ற படைப்பாளிகள் ஒன்றிணைந்து இருப்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இரசிகர்களிடத்தில் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘போய்வா நண்பா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இறுதி ஊர்வலத்தின் பின்னணியில் துள்ளலிசை பாணியில் உருவாகி இருக்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணி பாடகரும், நடிகருமான தனுஷ் பாடியிருக்கிறார்.
எதிர்வரும் ஜூன் மாதம் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ போய் வா நண்பா..’ எனும் இந்தப் பாடலில் தனுஷின் நடனம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாகி, ரீல்சாக உருவாகி வைரலாகி வருகிறது.
இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.