சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பருமான டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, வெல்லம்பிட்டி – மீதொட்டமுல்லையில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு 9.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் டொன் பிரியசாத் படுகாயமடைந்தார் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டுப் படுகாயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அத்தோடு, துப்பாக்கிச் சூட்டில் சிறு காயங்களுக்கு உள்ளான மற்றுமொரு நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமுற்ற டொன் பிரியசாத் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்தார் என முதலில் அறிவித்த பொலிஸ் தரப்பு, அதன் பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார் எனத் தெரிவித்தது.
எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என இன்று காலையில் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.