வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா – ஹெய்யன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இராணுவச் சிப்பாயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பண்டாரகமை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை பண்டாரகமை கிதெல்பிட்டிய பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 6 ஆயிரத்து 230 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை ஏழு நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணைகளில், சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் சபுகஸ்கந்த, மீகஹவத்தை, களனி மற்றும் பண்டாரகமை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பல்வேறு பிரதேசங்களில் கொள்ளையிட்டார் எனக் கூறப்படும் தங்க நகைகளும் இரத்மலானை மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களில் உள்ள நகை அடகு கடைகளில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.