பிரதமர் ஹரிணி அமரசூரிய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்சினை சந்தித்து அமெரிக்காவிதித்துள்ள வரிகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை பிரதமர் அவரை சந்தித்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜேடி வான்சை ஒரு மணித்தியாலமாவது சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவின் உதவியை பிரதமர் நாடியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கஜனாதிபதி விதித்துள்ள வரிகள் உள்நாட்டு நிறுவனங்களிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க இதன் காரணமாக பாதிப்புகளை தவிர்ப்பதற்காக அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரிகள் குறித்து அமெரிக்காவின் விசேட வர்த்தக பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட நாடுகள் இலங்கையும் இந்தியாவும் என சில தகவல்கள் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ,எனினும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால் பிரதமர் மோடியால் அமெரிக்க துணை ஜனாதிபதியை தனது நாட்டிற்கு அழைக்க முடிந்தது, என குறிப்பிட்டுள்ளார்
இலங்கையின் உள்நாட்டு நிறுவனங்களிற்கு ஆதரவளிக்க தயார் என இந்திய பிரதமர் முன்னர் தெரிவித்திருந்தார்,இதனை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.