செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க இலங்கைக்கு நிபந்தனை விதியுங்கள்! – மனோ வலியுறுத்து

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க இலங்கைக்கு நிபந்தனை விதியுங்கள்! – மனோ வலியுறுத்து

3 minutes read

“சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் சலிப்பு அடைந்து விட்டார்கள். இலங்கைதொடர்பில் ஐ.நாவில் பிரதான பங்களிப்புச் செய்த அமெரிக்காவும் இன்று ஒதுங்கி விட்டது. இந்நிலையில் எமது கடைசி சர்வதேச நம்பிக்கை ஐரோப்பிய ஒன்றியம் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் இலங்கை விவகாரத்தை அணுகுங்கள்.”

– இவ்வாறு இலங்கைக்கு வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்கலாமா? என ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்பிக்கக் கொழும்பு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்புக் குழுவினரிடம் நேரில் வலியுறுத்தினார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் உடனடி இடை நிறுத்தம், புதிய அரசமைப்புக்கான கலந்துரையாடல் உடனடி ஆரம்பம், உண்மை ஆணைக்குழு மூலம் காணாமல்போனோர் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களின் உடனடி அர்த்தபூர்வ நடவடிக்கை, நீண்டகால தமிழ் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை, நவீன அடிமைத்துவம் அம்சங்களைக் கொண்ட மலையகத் தமிழர் சமூகத்துக்குள் வரும் பெருந்தோட்ட வாழ் மக்களை ஐரோப்பிய கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வந்து அவர்களது காணி உரிமை உட்பட வாழ்வுரிமைகளை மேம்படுத்தல் ஆகியவை தொடர்பான முன்மொழிவுகளை எழுத்து மூலமாகவும், உரையாடல் மூலமாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்புக் குழுவினரிடம் மனோ கணேசன் எம்.பி. நேரடியாகச் சமர்ப்பித்தார்.

இந்த நிபந்தனைகளைத் திகதி குறித்து நிறைவேற்றினால் மாத்திரமே இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்றும் மனோ கணேசன் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கண்காணிப்புக் குழுவுக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணி குழுவுக்கும் இடையியிலான சந்திப்பு – உரையாடல் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகத்தில் நேற்று இடம்பெற்றது.

தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி., ஜ.ம.மு. சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி, ஜ.ம.மு. சட்ட விவகார செயலாளர் சக்சின் கணேசன் ஆகியோரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் தூதுவர் கார்மென் மொரேனோ, அரசியல் செயலர், கரோலினா மற்றும் ஐந்து பேர் கொண்ட ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்புக் குழுவினரும் கலந்துரையாடலில் இடம் பெற்றனர்.

இது தொடர்பில், மனோ எம்.பி. தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி குழுவினர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்புக் குழுவினரிடம் கையளித்த முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

(01) பயங்கரவாதத் தடைச் சட்டம்

இன்றைய தேவைக்கு குற்றவியல் சட்டக்கோவை தாராளமாக போதுமானது. இதுவே ஜே.வி.பியின் கடந்த கால நிலைப்பாடாக இருந்தது. எனினும், புதிய சட்டம் அவசியமாயின் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் வரை இன்றைய பயங்கரவாதத் தடைச் சட்ட பாவனை உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும்.

(02) புதிய அரசமைப்பு

இந்த அரசு தேர்தல் வேளையில், கடந்த நல்லாட்சிக் காலத்தில் ஆரம்பிக்கபட்டு இடையில் நிறுத்தப்பட்ட புதிய அரசமைப்புப் பணியை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மீள ஆரம்பிப்போம் என உறுதியளித்தது. அவ்வேளையில் நானும், இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அந்தப் புதிய அரசமைப்பு வழிகாட்டல் குழுவில் இருந்தோம். இந்தப் பணி இந்த வருடமே செய்து முடிக்கப்பட வேண்டும். வருடங்கள் கடந்தால் இதை ஒருபோதும் செய்து முடிக்க முடியாது என்பது எமது அனுபவமாகும். ஆகவே, இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்பு கலந்துரையாடல் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.

(03) பொறுப்புக்கூறல்

உடனடியாக உண்மை ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு, பொறுப்புக்கூறல் அடிப்படையில் வலிந்து காணாமல்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

(04) தமிழ் அரசியல் கைதிகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இன்று பத்து தமிழ் கைதிகள் நீண்டகாலமாக உள்ளனர். அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். கைதிகளின் பெயர் பட்டியல் விவரங்களைக் “குரலற்றவர்களின் குரல்” அமைப்பின் சார்பாக மு. கோமகன் தயாரிக்க, மக்கள் போராட்ட முன்னணி சார்பாக தோழர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அது இங்கே ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்புக் குழுவினரிடம் தரப்படுகின்றது.

(05) பெருந்தோட்ட மக்கள்

மலையகத் தமிழ் மக்கள் பரப்பில் இருக்கின்ற பெருந்தோட்ட மக்கள் இலங்கையில் மிகவும் நலிவுற்ற பிரிவினர். இந்த மக்களின் நிலைமை இனிமேல் ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். அதற்கான தரவுகள்:-

(அ) தோட்டங்களில் உற்பத்தியாகும் தேயிலை ஐரோப்பிய காலை உணவு மேசை வரை செல்லும் விநியோக பாதையின் ஆரம்பமான பெருந்தோட்டங்கள் நவீன அடிமைத்துவ அம்சங்களை கொண்டிருக்கின்றமை.

(ஆ) அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பெருந்தோட்ட மக்களைப் போதுமான அளவு உள்வாங்காததால், அவர்கள் தனியார் கம்பனிகளின் தயவில் வாழ வேண்டி உள்ளமை.

(இ) நவீன அடிமைத்துவ தினக்கூலி தொழிலாளர் என்ற நிலையில் இருந்து, பெருந்தோட்ட தொழில் துறையில் கூட்டுப் பங்காளராக மாறுகின்ற கூட்டு வர்த்தக மாற்றம் வராமை.

(ஈ) தேசிய நீரோட்டத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் தள்ளிவைக்கப்பட்ட காரணத்தால், சம உரிமை மறுக்கபட்டு, நில உரிமை, வீட்டு உரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை, வாழ்வாதார உரிமை ஆகியவை மறுக்கபட்டு, பொது நிர்வாக, சமூக கட்டமைப்பு மற்றும் நாட்டின் பொது நல சேவைகள் கிடைக்காமை. – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More