புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மாப்பிள்ளை தேர்வு | ஒரு பக்க கதை | வி.கே.லக்ஷ்மிநாராயணன்

மாப்பிள்ளை தேர்வு | ஒரு பக்க கதை | வி.கே.லக்ஷ்மிநாராயணன்

2 minutes read

மாலதியை பெண் பார்த்து விட்டுச் சென்றனர்  பிள்ளை வீட்டார். மாப் பிள்ளையின் பெற்றோருக்கு மாலதியைப் பிடித்திருந்தது.  முக்கியமாக மாப்பிள்ளை  சுதர்சனத் திற்கு நிறையவே பிடித்திருந்தது.  அவர்கள் போன கையோடு மாலதியின் தந்தை ரகுராமன் தன் மனைவி சுகுணாவிடம் அந்த வரனைப் பற்றி பேச ஆரம்பிததார்.

“என்ன இப்போ வந்துட்டுப் போன வரனைப் பற்றி என்ன நினைக்கறே ?”

“என்னை ஏன் கேட்கறீங்க ? உங்கப் பொண்ணைக் கேளுங்க.”

“ஏன், உனக்கு மாப்பிள்ளையாக வர அந்தப் பிள்ளையைப் பிடிச்சுருக்கான்னு நான் தெரிஞ்சுக்கக் கூடாதா ?”

“ம்..நல்லாயிருக்கான்,  பிடிச்சிருக்கு.  ” என்றாள்  சுகுணா.

“பிள்ளையாண்டான் நல்ல உயரம். நல்ல கலரும் கூட. ஆனால் ஏதோ ஒண்ணு இடிக்கறது. நீ கவனிக்கல்லையா சுகுணா ?”

அதே நேரம் மாலதி உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

“என்னப்பா ! நீங்களும் அம்மாவும் ஏதோ பேசிக்கிட்டுருக்கீங்க?” என்ற படி தந்தை பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“உன்னைப் பெண் பார்த்துட்டுப் போன அந்த சுதர்ஸனத்தப் பற்றித்தான் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருக்கோம்மா… ”

“அவருக்கு என்னப்பா குறைச்சல்! ஆறடி உயரம். நல்ல சிவந்த நிறம். ஒரே பிள்ளை. நிறைய வசதி.  நல்ல படிப்பு. கை நிறைய சம்பாதிக்கும் உத்தியோகம்.  சொந்தமாக பெரிய வீடு. இதுல டிஸ்கஸ் பண்ண என்ன  இருக்கு?”

மகள்  பாஸிடிவாக முடிவெடுத்துவிட்டாள் என்பது புரிய, ரகுராமனும் சுகுணாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“மாலதி , நீ சொல்றது சரிதான். ஆனால்..” மேற்கொண்டு கூற தயங்கினார் ரகுராமன் .

“ஆனால், என்ன டாடி?”

“வந்து.. பிள்ளையாண்டான் முகம் மீசையில்லாமல் பார்க்க என்னவோப் போல இருக்கு. அதோட…அவன் நடை உடை பாவனை இதுல எல்லாம் பெரிய வித்தியாசம் தெரியறது..”

“மொட்டையா சொன்னா எப்படி? பளிச்ச்சுன்னு சொல்லுங்க டாடி!”

“அதாவது மாலதி,  அவனோட நடவடிக்கைள்ல பெண்மை கலந்த நளினம் தெரியறது. அவனை எப்படி மாப்பிள்ளையா ஏத்துக்கறதுன்னு யோசனையா இருக்கு.”

“தப்பு டாடி! நாளைக்கே உங்களுக்கு மாப்பிள்ளையாக வருபவரைப் பற்றி இப்படியெல்லாம் பேசக் கூடாது.”

திடுக்கிட்டார் ரகுராமன்.

“அம்மாடி! உனக்கு இருக்கற அழகுக்கு போட்டி போட்டுக்கிட்டு வரிசையில் வருவாங்க மாப்பிள்ளை பசங்க. இந்த வரன் வேண்டாம். நீ அவசரப்படாதே. நல்லா யோசி.”

“ம்,நல்லா யோசிச்சுட்டேன்.  அந்த சுதர்ஸனம்தான் என் கணவர். காரணம் நீங்க சொன்ன அடையாளங்கள் அவரை ஒரு யுனீக் பர்ஸனாக காட்டறது. அதை நான் லைக் பண்ணறேன்.”

“அதுதான் உன் முடிவா?”

“யெஸ் டாடி!” எனக் கூறிய மாலதி எழுந்து நின்றாள். தந்தையையும் தாயையும் மாறி மாறி பார்த்தாள். பிறகு பொருள் பதிந்த பார்வையை தந்தை மீது சில வினாடிகள் வீசியவள்,  குறுநகையுடன் தன் அறை நோக்கி நடையைக் கட்டினாள்.

மகள் பார்வையின் அர்த்தம் புரிந்தது ரகுராமனுக்கு.

‘அப்பா! அந்தக் கால கட்டங்களில் நீங்கள் கூறும் முடிவை அம்மா எடுத்திருந்தால் இன்றைக்கு நான் இருந்திருப்பேனா? உங்களுக்கொரு நியாயம், பிறத்தியாருக்கொரு நியாயமா அப்பா?  நல்லா எண்ணிப் பாருங்க..ஸாரிப்பா.’

ரகுராமன் கூனி குறுகிப் போய் தலை குனிந்தார். எதிரில் உட்கார்ந்திருந்த சுகுணா  இடத்தை காலி செய்திருந்தாள்.

 

வி.கே.லக்ஷ்மிநாராயணன்

நன்றி : சிறுகதைகள்.காம்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More