‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் – ‘சுப்ரீம் ஸ்டார் ‘சரத்குமார் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘அடங்காதே’ எனும் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
இயக்குநரும், நடிகருமான சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், சரத்குமார், சுரபி, பொலிவுட் நடிகை மந்திரா பேடி, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பொலிட்டிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம்.எஸ். சரவணன் தயாரித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை E5 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெ.ஜெய கிருஷ்ணன் வழங்குகிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்தது. இந்நிலையில் திரையுலக வணிகர்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் உலகம் முழுதும் படம் மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ‘அடங்காதே திரைப்படம் ஒரு சமகால அரசியலை விரிவாகவும், வீரியமாகவும் பேசும் அரசியல் திரில்லராக தயாராகி இருக்கிறது. மேலும் துவி சக்கர வாகனங்களை பழுது நீக்கும் இளைஞனாக ஜிவி பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சரத்குமாரும் நடித்திருக்கிறார்கள்.
திருச்சியில் தொடங்கும் இப்படத்தின் திரைக்கதை காசி வரை நீள்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது” என்றார்.