வடக்கில் தமிழ் மக்களின் கணிசமான காணிகளைக் கபளீகரம் செய்யும் விதத்தில் அரசு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு இம்மாதம் 28ஆம் திகதி வரை காலக்கெடு விதித்திருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அரசு இந்த விடயத்தில் வர்த்தமானியை வாபஸ் பெறத் தவறுமானால் அந்தத் திகதிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகள் யாவற்றையும் இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக சாத்வீக வழிமுறையில் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்று ஆரம்பம் ஆகும் என்று அறிவித்திருக்கின்றார்.
“மார்ச் 28ஆம் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் அம்பலமாகியுள்ளது. இதனை அரசு கை வாங்குவதற்கு ஒரு மாத காலக்கெடு – மே 28 வரை – வழங்குகின்றோம். அந்தத் திகதிக்குள் இந்த வர்த்தமானியை அரசு கை வாங்காமல் விட்டால், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ்ப் பொதுமக்களை இணைத்துக்கொண்டு அந்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக சாத்வீக முறையில் பெரும் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்றே முன்னெடுப்போம்.” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
“இது தனித்து தமிழரசுக் கட்சி முன்னெடுக்கப் போகின்ற போராட்டம் அல்ல. ஒட்டுமொத்த முழுத் தமிழினமும், தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எடுக்கப் போகின்ற போராட்டம். மூத்த – முன்னணி – தமிழ்க் கட்சி என்ற முறையில் இந்த அறிவிப்பை அதன் பதில் பொதுச்செயலாளராக நான் அறிவித்திருக்கின்றேன்.
தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்ட எழுச்சியை, தங்கள் நிலங்களைக் காப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய ஒரு தேவை வந்துள்ளது. தமிழினத்தின் கருத்தை இந்தப் போராட்டம் மூலம் முழு உலகக்கும் நாம் முன் வைப்போம்.” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்திருக்கின்றார்.