அரச மற்றும் தனியார் துறையினர் வாக்களிக்க செல்வதற்கு போதுமான விடுமுறை வழங்க வேண்டும். தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிக்க செல்வதற்கு தொழில் வழங்குநர்கள் கட்டாயம் போதுமான விடுமுறை வழங்க வேண்டும். இவ்விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்கு அவதானத்துடன் செயற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் இன்றும், நாளையும் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்தை நாடி வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் அட்டையின்றியும் வாக்களிக்க முடியும்.இருப்பினும் வாக்களிப்பு நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்வதற்கு வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் வாக்களிக்க செல்லுங்கள் என்று வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச சேவையாளர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவது அத்தியாவசியமானது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன.தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கான நியமனப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமை அத்தியாவசியமானது. ஆகவே பொறுப்பளிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமக்கான தேர்தல் பணிகளில் ஈடுபடுவது அத்தியாவசியமானது.
வாக்காளர் அட்டையின்றியும் வாக்களிக்கலாம்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரையில் பெற்றுக்கொள்ளாதவர்கள் இன்றும் நாளையும் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள தபால்நிலையத்துக்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் தமக்கான அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.அதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன. அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமக்கான வாக்காளர் அட்டையை பதிவேற்றம் செய்துக்கொள்ளலாம்.
வாக்காளர் அட்டையின்றியும் வாக்களிக்க முடியும்.வாக்களிப்பு நிலையத்தில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்வதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. ஆகவே இயலுமான வகையில் வாக்காளர் அட்டையுடன் வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லுங்கள்.
தேர்தல் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை
தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆகவே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டது. ஆகவே வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து தீர்மானம் எடுப்பதற்கு இடமளியுங்கள்
அரச மற்றும் தனியார் துறையினருக்கு விடுமுறை
அரச மற்றும் தனியார் துறையினர் வாக்களிக்க செல்வதற்கு போதுமான விடுமுறை வழங்குவது அத்தியாவசிமானது.அரச சேவையாளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு குறைந்தப்பட்சம் 2 மணித்தியாலங்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.வாக்களிப்பு மத்திய நிலையத்தின் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த அரச சேவையாளருக்கு வாக்களிக்க செல்வதற்கு விடுமுறை வழங்குவது அரச நிறுவன பிரதானியின் பொறுப்பாகும்.
தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிக்க செல்வதற்கு குறித்த சேவை வழங்குநர்கள் விடுமுறை வழங்க வேண்டியது அத்தியாவசியமானது.
தனியார் துறைகளில் விசேட விடுமுறை வழங்கும் விதிமுறையொன்றை பெரும்பாலான தொழில்தருநர்கள் தனது தொழிலாளர்களுக்கு வாக்களிக்கச் செல்ல அனுமதி வழங்குவதில்லையென கடந்த காலங்களில் பல தேர்தல்களின் போது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையால் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு தேர்தலொன்றின் போது வாக்களிப்பதற்காக செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் விடுமுறை வழங்குவதற்காக தூரம் மற்றும் காலம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பொன்றை தயாரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய,
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குரியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆணையாளர்கள் உட்பட அதன் அலுவலர்கள் , தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர், தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் அதன் அலுவலர்கள் , தேர்தல்கள் ஆணைக்குழுவின் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தனியார் பிரிவுகளில் தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது வாக்கை அளிப்பதற்கு விடுமுறையளிக்க தொழில்தருநர்கள் உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
40 கி.மீ அல்லது அதற்கு குறைவாயின் அரை நாள் (1/2) விடுமுறை, 40 கி.மீ இக்கும் 100 கி. மீ இடைப்பட்டதாயின் ஒரு நாள் (1), 100 கி.மீ இக்கும் 150 கி.மீ இடைப்பட்டதாயின் 1 (1/2) நாட்கள், 150 கி. மீ இக்கும் அதிகமாயின் 2 நாட்கள் விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தனியார் பிரிவின் தொழில்வழங்குநருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுகின்ற அல்லது அதன் பிரகாரம் செயற்படுவதில் இருந்து விலகியிருக்கின்றவர்கள் சிறைத் தண்டனைக்கும் அல்லது தண்டபணம் குற்றச்சாட்டுக்கும் உள்ளாக நேரிடும்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை
தேர்தல் வாக்கெடுப்பின் போது அரச பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினரும்;, அந்த பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் வாக்களிக்க கூடிய வகையில் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளடங்காத தனியார் பல்கலைக்கழகங்கள்,உயர் கல்வி நிறுவனங்கள் தமது பணியாட்குழுவினரும், மாணவர்களும் வாக்களிக்க கூடிய வகையில் விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.