எமது மக்களின் முதலீடாகவும் அவர்களின் கலாச்சார அடையாளமாகவும் காணப்படும் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரியவர்களிடமே ஒப்படைக்க தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் வசமிருந்த தமிழ் மக்களின் பெருந்தொகையான நகைகள் தற்போது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மத்திய வங்கியினால் குறித்த நகைகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை (04) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மனிதாபிமான யுத்தம் என்ற போர்வையில் மக்களைக் கொன்று குவித்து அவர்களின் கலாச்சார அடையாளமாக பேணப்பட்டு வந்த சொத்துக்களை இல்லாமல் செய்து தமிழ் மக்களை நிர்க்கதியாக்கிய பேரினவாத சிந்தனை கொண்ட அரசுகள் தமிழ் மக்களின் பெருந்தொகையான நகைகளை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான கருத்துகளையும் வெளியிடாமல் இருந்திருக்கின்றது.
இந்த நிலையில் நகைகளை வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள வங்கிகளில் அடகு வைத்த மக்கள் தமது நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் தமது முதலீடுகள் அனைத்தையும் இழந்திருப்பதனால் பெரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவ்வாறான நிலைமையில் தற்போதைய அரசு தேர்தல் நலனுக்கானதாக இருந்தாலும் அந்த நகைகள் தொடர்பில் தகவல்களை வெளிக்கொணர்ந்து அதனை வெளிப்படுத்தியமையை வரவேற்கின்றேன்.
எனினும் குறித்த நகைகளை உரியவர்கள் இல்லை என்ற காரணங்களை காட்டி அரசுடைமையாக்காது நகைகளுக்கு உரித்தான தமிழ் மக்களிடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதேவேளை பொதுமக்களும் தங்களிடம் குறித்த நகைகளை அடகு வைத்த பற்றுச்சீட்டுக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை வெளிப்படுத்தி தமது நகைகளை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்வதற்கும் முன் வர வேண்டும்.
பற்றுச்சீட்டுக்கள் உள்ளவர்கள் அதன் பிரதிகளை என்னிடம் வழங்கும் பட்சத்தில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரியவர்கள் இந்த நகைகளை பெறுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்க முடியும்.
அத்துடன் அரசாங்கமானது வங்கிகளில் அடகு வைத்த பற்றுச் சீட்டுக்கள் பல பொது மக்களிடம் இல்லாத நிலை தற்போது காணப்படுகின்றது.
அது மாத்திரமன்றி அடகு வைத்த பலர் இன்று இயற்கை எய்தியும் உள்ளதால் அவை தொடர்பில் ஏதுவான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
எனவே, அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமே தவிர நகைகளை அரசுடைமையாக்கி தமிழ் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யக்கூடாது என்றார்.