“பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துதல், மனித உரிமைகளைப் பேணுதல், நல்லாட்சியை முன்னெடுத்தல், நல்லிணக்கத்தை உருவாக்குதல் போன்ற விடயங்களில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்தும் தவறிழைக்குமானால் அதற்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொள்ளலாம்.”
– இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவிடம் நேரடியாகவும் பட்டவர்த்தனமாகவும் தெரிவித்திருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட கண்காணிப்புக் குழுவுக்கு இடையில் நேற்று இரவு 8 மணி முதல் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது இவ்வாறு தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட கண்காணிப்புக் குழுவிடம் எடுத்து விளக்கினார் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்.
கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான இந்தக் குழுவில் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட கண்காணிப்புக் குழுவில் அதன் உறுப்பினர்கள் ஐவரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவரும், பிரதித் தூதுவரும் நேற்றைய சந்திப்பில் பங்குபற்றினர்.
கொழும்பு, புல்லர்ஸ் வீதியில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இலங்கைக்குத் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வரும் விசேட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த ஆண்டில் முடிவடைய இருக்கும் சூழலில், அதை நீடிப்பதா என்பது குறித்து ஆராயவே ஐரோப்பிய ஒன்றியக் குழு கொழும்பு வந்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல், இணையப் பாதுகாப்பு சட்டத்தை சீராக்குதல், நல்லாட்சி முறையைப் பேணுதல், பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துதல், நியாயமான அதிகாரப் பகிர்வை முன்னெடுக்கும் விதத்திலான அரசமைப்பை உருவாக்குதல் என்பவை தொடர்பாக இலங்கை சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாதமை குறித்து இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டினர்.
சுமந்திரன் கூறியவை
“இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையில், பொருளாதார ரீதியில் நாட்டை மேம்படுத்தும் நோக்கில் நாட்டுக்கான வரிச் சலுகைகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வந்தோம். அந்த வரிச்சலுகைகளை இலங்கை அரசுகள் பெற்றுக்கொண்ட போதிலும், கடைசியில் நாட்டைப் பொருளாதார வங்குரோத்திலேயே கொண்டு போய் நிறுத்தியுள்ளன. மறுபுறத்தில் இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைகளையும் அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து இவ்வாறு அரசு முறையற்ற விதத்தில் – பொறுப்பற்றுச் செயற்படும்போது வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குங்கள் என்று நாம் கோருவது நியாயமற்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது, பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துவது, அதிகாரங்களை நீதி, நியாயமான முறையில் பகிர்வது, நல்லாட்சியைப் பேணுவது ஆகியவை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சர்வதேசத்துக்கும் தான் வழங்கிய உறுதிமொழிகளைத் தொடர்ந்து அரசு நிறைவேற்றவில்லை. உதாசீனப்படுத்தி வருகின்றது.
இப்படி ஏமாற்றுகரமான முறையில் இலங்கை அரசு தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.
ஒரு வறியவன் – கஷ்டப்பட்டவன் தன் குடும்பத்துக்கு உதவி என்று வந்து கேட்டால் நாங்கள் தினசரி அவனுக்கு உதவலாம். ஆனால், அப்படி உதவும் பணத்தை அவன் தன் குடும்பத்துக்கு உரிய முறையில் செலவிடாமல், தன் போதைக்கும் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டு, மறுபுறத்தில் தன் குடும்பத்தவர்களுக்கு அநியாயமான முறையில் தொல்லை கொடுப்பானாக இருந்தால் அவனுக்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்ய முடியுமா? இத்தகைய நிலையில்தான் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவி பெறும் இலங்கை உள்ளது.
இலங்கை ஆட்சிப் பீடம் உங்களிடம் உதவி பெற்றுக்கொண்டு, மறுபக்கத்தில் நீதி செய்ய வேண்டிய தமிழர்களுக்கு அதைச் செய்ய மறுக்கின்றது. ஒரு புறம் ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகை வருமானத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மறுபுறம் தமிழ் மக்களின் தாயக பூமியை கபளீகரம் செய்யும் வேலைகளை முனைப்பாக முன்னெடுக்கின்றது. காணி பறிப்பைத் திட்டமிட்டு முன்னெடுக்கும் அநீதியை இழைக்கின்றது. அதிகாரப் பகிர்வை முன்னெடுக்க மறுக்கின்றது. பொறுப்புக்கூறலை நிலைநாட்டப் பின்னடிக்கின்றது.
நீதியையும், நல்லாட்சியையும், மனித உரிமைகளையும் நிலைநாட்டும் தனது கடப்பாட்டை இலங்கை நிறைவு செய்வதற்கான நிபந்தனைகளைக் காலம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க வேண்டும். அந்த நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறினால் வரிச் சலுகையை விலக்கிக்கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அப்படியான நடவடிக்கையை நாங்கள் வரவேற்போம்.” – என்று சுமந்திரன் இந்தச் சந்திப்பில் தெரிவித்தார்.
தமிழருக்கு நீதி வழங்கப்பட வேண்டும், அதிகாரம் முறையான விதத்தில் பகிரப்பட வேண்டும் என்பவை தொடர்பில் இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்குமாறு இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்தினர் என்றும் தெரிகின்றது.