நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தமிழ்த் தேசியப் பயணத்தை ஏற்று இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்குத் தலைவணங்குகின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு, கட்சியின் மாவட்டப் பணிமனையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அண்மைய தேர்தல்களைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எமது மக்கள் வாக்குகளால் வலுச்சேர்த்திருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சிக்கு வாக்களித்து, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய சபைகளில் நாம் ஆட்சியமைக்க காரணமாக இருந்த மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து, அவர்களின் மன உணர்வுகளோடு இணைந்த வகையில் எமது தமிழ்த் தேசிய அரசியல் பயணம் தொடரும்.” – என்றார்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட வேட்பாளர்கள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலும், புனித திரேசாள் தேவாலயத்திலும் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையால் ஒழுங்கமைக்கப்பட்ட மத வழிபாட்டு ஆராதனைகளிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.