செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “தனித்துவமான இனத்தின் விடுதலை இயக்கமே தமிழரசு”

“தனித்துவமான இனத்தின் விடுதலை இயக்கமே தமிழரசு”

1 minutes read
“தனித்துவமான இனத்தினுடைய விடுதலை இயக்கமே இலங்கை தமிழரசுக் கட்சி. இந்தக் கட்சி மக்களுக்குக் கசிப்பையும் பணத்தையும் வழங்கியே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ள கருத்து  முறையற்றது.  நிராகரிக்கத்தக்கது. இந்தக் கருத்தை  அவர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்  கட்சியின் நாடாளுமன்றக் குழுத்  தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளைக் குறைத்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கசிப்பு மற்றும் பணத்தை மக்களுக்கு வழங்கியே வென்றுள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க முறையற்ற வகையில்  குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவர் அந்தக் கருத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும்.

உண்மையான நியாயமான ஜனநாயகவாதியாக அவர் இருந்தால் – அவர் அரசியல் ரீதியாகக் காழ்ப்புணர்ச்சியற்ற இனவாதமற்ற அரசியலை இந்த நாட்டில் செய்ய விரும்புகின்றார் என்றால் – இனங்களை மதிக்கின்றார் என்றால் தன்னுடைய அந்தக் கருத்தை அவர் வாபஸ்  பெற வேண்டும்.

1940 ஆம் ஆண்டில் தமிழரின் தேசியத் தந்தை செல்வநாயகத்தால் உருவாக்கப்பட்டு 27 வருடங்களாகக் கிடப்பில் இருந்த இலங்கை தமிழரசுக் கட்சி  2004ஆம் ஆண்டில் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனால் வெளியில் கொண்டுவரப்பட்டு தமிழரின் தேசிய அடையாளமாகத் தரப்பட்ட கட்சி.

ஒருகாலமும் தமிழரசுக் கட்சி எவருக்கும் மதுவைக் கொடுப்பதையோ, மதுவுக்கான அனுமதிகளைப் பெறுவதற்கோ அல்லது மதுபானசாலைகளைத் திறப்பதற்கோ சம்மதம் தெரிவித்த கட்சியும் அல்ல. அதற்காக உடந்தையாக இருந்த கட்சியும் அல்ல. அதேபோன்று நாங்கள் பணம் கொடுத்து வாக்குப் பெற்றவர்களும் அல்லர்.

ஒரு தேசிய இனத்தினுடைய அடையாளத்தை – அவர்களின் இருப்பை – அவர்கள் இந்த மண்ணிலே வாழ வேண்டியதற்கான வாழ்க்கை முறையை – இழந்த இறைமையை மீட்பதற்காகப் போராடுகின்ற, தனித்துவமான இனத்தினுடைய விடுதலை இயக்கமே இலங்கை தமிழரசுக் கட்சி. எனவே, எங்களுடைய கட்சி சார்பாகப் மிகவும் பொறுப்புடன், எங்களுடைய கட்சி அவ்வாறாகக் கசிப்போ, பணமோ வழங்குகின்ற கட்சி அல்ல என்பதனை மீண்டும் பதிவு செய்கின்றேன்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More